சாவியில் நடக்காத போட்டிக்குக் கிடைத்த பரிசு !


ரவிப்ரகாஷின் வலைப்பதிவைப் பார்த்ததும் சாவி நாட்கள் நினைவில் மலர்ந்தன. சூர்யகலா, சந்திரகலா, ராஜ்திலக், ராஜாமகள் எல்லாமே இவர்தான் என்று தெரிந்து திடுக்கிட்டேன்.

சூர்யகலாவின் கதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. ஒரு இளம் பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட மென்மையான கதைகள். அவை குறித்து நானும் சரசுராமும் சிலாகித்து வியந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை ரவிப்ரகாஷ் தனது வலைப்பூவில் தொகுக்க வேண்டுமென்பது நேயர் விருப்பம்.

என்னுடைய சிறுகதை வாழ்க்கையில் நாலு அல்லது ஐந்து ஒரு பக்கக் கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் குமுதம் இதழில் எழுதிய காதல் கதையை ஏற்கெனவே காணக் கொடுத்தேன். இப்போது இவர் தளத்தைப் படித்ததும், புதையலைத் தோண்டி இன்னொரு கதையை தட்டச்சினேன். சாவி இதழ் தள்ளாடிக் கொண்டிருந்த சமயம் எழுதிய கதை.

அப்போது சாவியில் ஒரு பக்க கதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக போட்டி என்றால் சோகத்தைப் பிழிய முயல்வதே வழக்கம். ஏனெனில் போட்டிக் கதைகளில் சயன்ஸ் அல்லது க்ரைம் சாயம் பூசுவது ஒரு க்ரைம் என்பது எழுத்துலக நம்பிக்கை. அதை மீறி நான் சற்று வேறேதாவது கிறுக்கிப் பார்ப்பேன். அப்படி எழுதித்தான் விகடன் ஒரு படத்துக்கு எழுதச் சொன்ன போட்டியில் (வருடம் நினைவில்லை) அறிவியல் கதையாயிருந்தும் பரிசு கிடைத்தது.

நான் அறிவியல் சாயம் பூசி எழுதிய பல கதைகளை ரவிபிரகாஷ் சாவியில் பிரசுரித்திருக்கிறார். அவை எல்லாவற்றுக்குமே நான் ஒரு உத்தி வைத்திருந்தேன். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும் அல்லது நிகழ்காலத்தில் ஆரம்பித்து எதிர்காலத்தில் முடியும்.

சாவி அறிவித்த போட்டியின்படி கதைகளை வாராவாரம் வெளியிட்டுக் கொண்டே வருவார்கள். வாசகர்கள் மற்றும் நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். என் கதை வெளியானதும் பல வாசகர்கள், “உங்களுக்குத்தான் பரிசு! ” என எனக்குக் கடிதம் எழுதினார்கள்.

பேப்பர் பேனா இன்க் செலவை சமாளிக்கும் அளவுக்கு பத்திரிகைகள் அனுப்பும் சன்மான செக்கை விட, வாசித்தவர்கள் எழுதிப் போடும் அந்த போஸ்ட் கார்டுகள் விலை மதிப்பில்லாதவை.

சாவி இதழின் தள்ளாட்டத்தினால் அப்போட்டி நிறைவு பெறவே இல்லை. ஆனால், கதை வெளியான இரண்டு வாரம் கழித்து ரவிபிரகாஷிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

” உங்கள் வி.வெளியிலிருந்து ஒரு குரல் கதையைப் படித்து சாவி மிகவும் ரசித்துப் பாராட்டினார்.”

இதை விட வேறேன்ன பரிசு வேண்டும் !