சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-1


Singaporeசிங்கப்பூர் ஒரு கான்க்ரீட் காடு என்றுதான் நான் ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். சாங்கி ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கும்போது ஜன்னல் வழியே அந்தரத்திலிருந்து பார்த்ததும் அந்த நினைப்பை மாற்றிக்கொண்டுவிட்டேன்.அப்போது ‘ஜோ’ என கொட்டிக்கொண்டிருந்த மழையில் நகரின் பசுமை இன்னும் தூக்கலாய் தெரிந்தது. ஒரு சதுர அடி நிலம் சும்மா கிடந்தால் அதிலும் புல் வளர்த்து விடுவார்கள் போல.

இறங்கினவுடன் ஒரு மறக்க முடியாத அனுபவம். கூட வந்த நண்பர், கூட்டிப்போக வந்த நண்பர் என இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் என்னை மறந்துவிட்டு டெர்மினல் 2வில் ஸ்கைட்ரெயின் ஏறி மறைந்துவிட நான் திகைத்து நின்றேன். நானோ ஊருக்கு புதுசு. தொடர்பு எண்கள், என் பாஸ்போர்ட் எல்லாமே நண்பரிடம் இருந்தது. ஆனால் பாருங்கள், சிங்கப்பூரில் நீங்களே நினைத்தாலும் தொலைந்து போய்விட முடியாது என்கிறபடிக்கு எல்லா இடங்களிலும் தெளிவாய் Sign Board-கள் அம்புக்குறி போட்டு வீடு வரை கூட்டிச் சென்று விடுகின்றன.

அப்புறம் துரிதக் கடவு ரயில் (MRT)  மூலம் இந்த கோடி ஏர்போர்ட்டிலிருந்து அந்தக் கோடி பூன்-லேக்கு “சீனத்தோட்டம், ஏரிக்கரை” என்றெல்லாம் தமிழ்ப் பெயர் தாங்கிய நிலையங்களைக் கடந்து ஒரு நீண்ட பயணம். கஞ்சத்தனம் இல்லாமல் MRT ரயில் ஜன்னல்கள் பெரிது பெரிதாய் இருந்ததால் வெளியில் தெரிந்த வனப்புமிகு சிங்கப்பூரின் முதல் தரிசனம் ரம்மியமாக இருந்தது.

ரயிலில் ஊனமுற்றோர்க்கான இருக்கை என்று பொதுவாய் குறிப்பிடாமல் கொஞ்சம் யோசித்து மனதை புண்படுத்தாமல்  “Please offer this seat to someone who needs it more than you do” என்று எழுதிவைத்திருந்ததை பார்த்ததிலிருந்து விரிந்தது சிங்கப்பூரின் ஆச்சரியங்கள்.

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2