சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-2


Singaporeசிங்கப்பூரில் நாங்கள் தங்கிய வீடு ஜூராங்-மேற்கில் பதிமூன்றாவது மாடியில் இருந்ததால் அங்கிருந்து அதன் தொழிற்சாலைப் பகுதிகள், துறைமுகம் எல்லாம் ஒரு panoramic view-ல் காணக்கிடைத்தது. (எந்தக் கட்டிடத்திலும் மொட்டை மாடியியிருந்து வேடிக்கை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாதாம்.)

மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. ரோடுகள் அத்தனை சுத்தம். எங்கேயும் ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள்  கிடையாது. எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் அநியாயத்துக்கு வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள்.

ஆட்டோக்கள் இல்லாத சிங்கப்பூர் நகரம் மிகுந்த ஆறுதல். ஆனால் எங்கு போனாலும்  கால் வலிக்கிற அளவுக்கு எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்க வேண்டியிருந்தது. துரித ரயிலில் இடைவிடாது பயணிகளுக்கான தமிழ், ஆங்கில அறிவிப்புக் குரல்கள். நிரந்தரக் குடியுரிமை பெற்று தினசரி இதில் பயணிப்பவர்களுக்கு இந்தக் குரல்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு இனிய அவஸ்தையாகிவிடும் என்று தோன்றுகிறது. முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் நம்மை முறைக்கின்றன. ஊருக்குத் திரும்பி வரும்வரை ஒன்றிரண்டு பேர்களைத் தவிர போலீஸ்காரர்கள் அதிகமாய் கண்ணில் படவில்லை. நகரில் பராமரிப்புப் பணிகள் நடக்கிற எல்லா இடங்களிலும் சுற்றிலும் மூடி மறைத்து, தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சீராக ஒரே மாதிரி அபாய அறிவிப்புப் பலகை வைக்கிறார்கள்.

ரெஸ்டாரன்டில் காபி, டீ கேட்டால் அரை அடி உயர தம்ளரில் ஸ்ட்ராவுடன் தருகிறார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் குடிக்கலாம். பரவலாய்க் காணப்படும் food court-களில் வறுத்துத் தொங்கவிடப்பட்ட பிராணிகளின் லிஸ்டையும் (அதில் ஓணான் சாயலில் ஒரு வஸ்து காணப்பட்டது), மூக்கைத் துளைக்கும் வாடையையும் தவிர்த்து மக்டொனால்டில் பன் ரொட்டி வகையறாக்களை சாப்பிட்டுத் தொலைக்கவேண்டியிருந்தது. மற்றபடி Nativity-யுடன் சாப்பிட விரும்புபவர்களுக்கு சரவணபவன், கோமளவிலாஸ், ஆனந்தபவன், அஞ்சப்பர் என்று ரவுண்டு கட்டி ஹோட்டல்கள் உள்ளன – லிட்டில் இந்தியா என்கிற இடத்தில்.

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1

Advertisements