பெட்ரோல்: சில குறிப்புகள்


பெட்ரோல் விலை விர்ர்ரென்று உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அத்துறையில் பணியாற்றி வரும் அமெரிக்க அன்பர் அளித்த சில டிப்ஸ்.

  • பெட்ரோலியம் தொழிலில் தட்ப வெப்ப நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது த்ிரவ எரிபொருளின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. எரிபொருள் நிரப்பப்படும் ஒவ்வொரு லாரியும் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்டவை. வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் பல டாலர்கள் கையைக் கடிக்கும். ஆனால், காஸ் ஸ்டேஷன்கள் எனப்படும் பெட்ரோல் பங்க்குகள் அவ்வண்ணம் வெப்பநிலை அக்கறை கொண்டவை அல்ல.  அவை பெட்ரோலை நிலத்தடியில் சேமிப்பதால், உங்கள் வாகனங்களுக்கு அதிகாலையில் பெட்ரோல் நிரப்புவதே நல்லது. நிலம் குளிர்ந்திருக்கும் அவ்வேளையில் பெட்ரோலின் அடர்த்தி அதிகமாயிருக்கும். நீங்கள் நிரப்பும் ஒரு கேலன் பெட்ரோல் ஒரு கேலனாக இருப்பது அப்போது மட்டுமே. மதியம் அல்லது மாலையில் நீர்த்துப் போன எரிபொருளை நிரப்புவது, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கின மாதிரிதான். அளவில் தில்லுமுல்லு இருக்கும்.
  • நீங்கள் எரிபொருள் நிரப்பப் போகிறபோது அங்கே ஒரு டாங்க்கர் லாரி பங்க்கின் நிலத்தடி சேமிப்புத் தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தால் வேறு இடம் பாருங்கள். வோட்காவும் சிக்கன் பிரியாணியும் கலந்தடித்த பின் கலங்கிப்போகும் வயிறு மாதிரியே நிலத்தடி சேமிப்புத்தொட்டியில் ஒரு பிரளயமே ஏற்பட்டு குப்பை கூளம் எல்லாம் மேலே எழும்பியிருக்கும். அவற்றை அவசியம் உங்கள் வாகனத்தில் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா ? 
  • காலி என்று சிவப்பு விளக்கு எரியும் வரை காத்திராமல் வாகனத்தில் பாதி டாங்க் தீர்ந்தவுடனே நிரப்பி விடுவது நல்லது. டாங்க்கில் காலியிடம் அதிகமாயிருந்தால் ஆவியாதல் விரைவாய் நடக்கும். நஷ்டம் நமக்கே. 
  • பொதுவாக பெட்ரோல்  பம்ப்புகளில் மெதுவாக, மிதமாக, வேகமாக என மூன்று விதமாய் நிரப்பும் வசதி இருக்கும். சீக்கிரம் வேலை முடிய வேகமாக நிரப்பும் வசதியையே நம்மில் பலரும் தேர்வு செய்கிறோம். இனிமேல் மெதுவாக நிரப்புங்கள். வேகமாய் பெட்ரோல் நிரப்பும்போது  நுரை அதிகம் ததும்பும். குழாயில் நுரை உருவாக்கும் வெற்றிடம் நீங்கள் நிரப்பி முடித்தபின் வாகனத்தின் டாங்க்கிலிருந்து ஓரளவு பெட்ரோலை திரும்ப உறிஞ்சிக் கொள்கிறது.