மரணம்


காட்டன் புடவையில் அழகாய் வலம் வரும் இந்திரா டீச்சர் இன்னமும் கண்ணுக்குள் இருக்கிறார். சிறு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர் அனஸ்திஷியா அதிகமாகி இறந்து விட்டார். அகாலமாய் அவர் இறந்த போதும், மாணிக்கம் டீச்சர் புற்று நோயினால் உயிர் நீத்த போதும், ஏன் பத்து நாட்கள் படுத்த படுக்கையாகி திடீரென என் தாத்தா இறந்த போதும் எனக்கு இப்போதைய அகிலின் வயதுதான் இருக்கும். 

சின்ன வயதில் அறிமுகமான இந்த மரணங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தின என்று சரியாய் நினைவில்லை. அப்படி பாதித்திருந்தால் எப்படி அதிலிருந்து மீண்டடேன் என்பதும் தெரியாது.

நேற்று அகிலின் வகுப்பாசிரியை ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவனிடம் இன்று ஒரு  Sealed Envelope கொடுத்தனுப்பப்பட உள்ளதெனவும் அதன் சாராம்சம் கீழே உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். கேன்சருடன் போராடி வந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மரணமடைந்து விட்டார். இச்செய்தி அவனிடம் தெரிவிக்கப்படவில்லை. நீங்களே பக்குவமாக அவனுக்கு இச்செய்தியை சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.  

குழந்தைகளிடம் இதைப் பற்றி எப்படி பேச வேண்டுமென தெரியாவிட்டால் இந்த இணைய தளங்களை முதலில் படித்துக் கொள்ளவும் என்று சொல்லி இது (http://www.americanhospice.org/) போல சில சுட்டிகளும் தந்திருந்தார். கீழ்க்கண்ட புத்தகங்களும் உங்களுக்கு உதவுமென்று சொன்னார்.

When Dinosaurs Die by Marc & Laurence Brown

The Grieving Child, A Parent’s Guide by Helen Fitzgerald

அகிலுக்கு மேலும் ஆறுதல் தேவைப்படுமெனில் சொல்லவும், பள்ளியில் அதற்கென ஒரு குழு உள்ளது என்றும் மின்னஞ்சல் சொல்லி முடித்தது.

இறந்த ஆசிரியைக்கு மனதுக்குள் மவுன அஞ்சலி செலுத்திய பின் யோசித்துப் பார்க்கிறேன். மேற்சொன்ன புத்தகங்களும் இணைய தளங்களும் இல்லாமல் சின்ன வயதில் நமக்கெல்லாம் மரணங்களைப் புரிய வைத்தது தமிழ் சினிமாக்களாகத்தான் இருக்க வேண்டும்.