சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3


லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது Singaporeஉறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது. சி. ஒ. சி. வி -2-ல் குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.

லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய அட்ராக்ஷன் செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது.

ஆக லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் இந்திய இதயம்.

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1