சமையல் குறிப்பு
விகடனில் பரிசு பெற்ற கதை இது. 18 ஜனவரி 1998-ல் வெளியானது. இந்த மாதிரி குட்டிக் கதை வடிவத்தை குமுதம்தான் பிரபலமாக்கியது. Cheap Twist- உடன் பலரும் எழுதி வெளி வர ஆரம்பித்ததால் இவ்வடிவத்துக்கான மரியாதை குறைந்தது. இருந்தாலும் அவ்வப்போது பிரபல எழுத்தாளர்களை இந்த சைசில் எழுத வைத்து வெளியிடுவார்கள். இந்த சைசிலும் தரம் காட்ட முடியும் என்று அவர்களில் சிலர் நிரூபிப்பார்கள்.
இக்கதை பற்றி சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் கரு. தமிழ் வார இதழ்கள் நடத்தும் கதைப் போட்டிகளுக்கான டிபிகல் கரு இது. இயல்பான Day-to-Day சம்பவங்களில் ஒரு சமூகப் பிரச்சனையை தொட வேண்டும் என்பதே இக்கதைகள் சமைப்பதற்கான எளிய சமையல் குறிப்பு.
இனி கதை…
கறை
பரிசு பெற்ற குட்டிக்கதை – விகடன் – 18 ஜனவரி 1998
அம்சா எரிமலைக் குழம்பின் உஷ்ணத்தோடு அவனைப் பார்த்தாள். இன்னமும் அவன் அந்த வழியலான சிரிப்பை உதட்டில் தக்க வைத்திருந்தான்.
” என்ன அம்சா, முறைக்கறே ? ”
” செருப்பைக் கழட்டி அடிக்காம இருக்கேனேன்னு சந்தோஷப்படு. கடைக்கு வந்தமா… சாமானை வாங்கினமான்னு போய்ட்டே இரு. உம் மூஞ்சி அழகா இருக்கு… கண்ணு அழகா இருக்குன்னு அநாவசியக் குழையலெல்லாம் வெச்சுக்கிட்டின்னா பல்லைப் பேர்த்துருவேன். ஜாக்கிரதை. ”
அவள் சீறியதும் அழுக்கு லுங்கியை மடித்துக் கொண்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி அங்கிருந்து அகன்றான்.
அம்சா பெட்டிக்கடைதான் வைத்திருக்கிறாள். ஆனால், அந்தச் சின்னக் கிராமத்துக்குள் அவளுக்கென்று தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. கணவன் ஒரு விபத்தில் இரு கால்களையும் பறி கொடுத்து படுத்த படுக்கையாய்க் கிடப்பவன். ஆனாலும் அவன்தான் அவள் உயிர். புருஷனுக்கான அத்தனை பணிவிடைகளையும் முகம் கோணாமல் செய்வாள் அம்சா. அவளுடைய லட்சுமிகரமான மென்புன்னகைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. ஆனால் யாராவது சற்றே வழுக்கலாகப் பேச நினைத்தால் தீத்துண்டங்கள் தெறிக்கும்.
அவளைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அய்யாக்கண்ணு எந்த தைரியத்தில் இன்றைக்குத் தப்பாகப் பேச முயன்றான் ? அம்சாவுக்குள் கேள்விப் பறவைகள் வட்டமடித்தன.
சற்று நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன் இரண்டு வில்ஸ் ஃபில்டர் வாங்கினான். பாக்கி சில்லறையை வாங்கும்போது அநாவசியமாக அவள் கைகளை உரசினான். பிறகு கிசுகிசுப்பாகக் கேட்டான். ” கடை சாத்தினதுக்கப்புறம் ராத்திரி வீட்டுக்கு வர்றியா அம்சா ? ”
அவன் பேசி முடிக்கும் முன் ‘பளீர்’ என்று அறைந்தாள். அவன் கன்னத்தை தடவிக் கொண்டே வேகமாக அங்கிருந்து அகன்றான்.
என்ன ஆயிற்று எல்லோருக்கும் ?
குழப்பமாக அம்சா உட்கார்ந்திருக்க, வாத்தியார் பரமசிவம் வந்தார். சாக்பீஸ் பெட்டி ஒன்றை வாங்கினார். கண்ணியமான மனிதர். இவரிடம் தன் குழப்பத்தை சொல்லிப் பார்க்கலாமா ?
பரமசிவம் அம்சாவின் ப்ரச்சனையைக் கேட்டு விட்டு, சில விநாடிகள் யோசித்தார். சட்டென தெளிவானார்.
” நேத்திக்கு வரைக்கும் உன் கிட்டே ஒரு பயபக்தியோட இருந்த அவங்க திடீர்ன்னு இன்னிக்கு மட்டும் ஏன் அப்படிப் பேசினாங்கன்னு எனக்கு இப்பப் புரிஞ்சு போச்சு. ” என்றார்.
அம்சா அவரையே பார்க்க, அவர் தொடர்ந்தார்.
” இந்தப் புத்தகத்தை நீ கடையில் தொங்க விட்டா அவனுக அப்படித்தான் பேசுவாங்க. எழுதப் படிக்கத் தெரியாத நீ வழக்கமா விக்கிற வாரப் பத்திரிகைகளோட இந்த ஆபாசப் புத்தகத்தையும் சாதாரண புத்தகமா நினைச்சு பப்ளிக்கா கடையில் தொங்க விட்டதால, ‘இத்தனை நாள் நெருப்பா இருந்த அம்சா பனிக்கட்டியா மாறிட்டா போலிருக்கு’ன்னு அந்தப் பசங்க இதை ஒரு பச்சை சமிக்ஞையா எடுத்துக்கிட்டாங்க. ”
அவமானத்தில் குறுகிப் போன அம்சா அந்தப் புத்தகத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டு விட்டு, தான் படிப்பறிவில்லாத தற்குறியாக இருந்து விட்டதை எண்ணி அழ ஆரம்பித்தாள்.
யாத்திரீகன் 7:56 முப on ஜூலை 14, 2008 நிரந்தர பந்தம் |
🙂
Loganathan 11:27 முப on ஜூலை 14, 2008 நிரந்தர பந்தம் |
நான் இந்த பக்கத்தை கிளிக் செய்யும்போது எதோ சமையல் குறிப்பு தான் என்று நினைத்தேன். ஆனால் ஒரு நல்ல சிறுகதை.
சத்யராஜ்குமார் 8:32 முப on ஜூலை 15, 2008 நிரந்தர பந்தம் |
யாத்திரீகன் & Loganathan
கருத்துக்கு நன்றி.
remya 6:19 முப on செப்ரெம்பர் 13, 2008 நிரந்தர பந்தம் |
எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு நல்ல சிறுகதை
சத்யராஜ்குமார் 9:10 முப on நவம்பர் 28, 2008 நிரந்தர பந்தம் |
remya, நன்றி.