சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 4


Singaporeசிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, Esplanade இன்னபிற இடங்களை லேசாய் ஒதுக்கிவிட்டு சென்டோஸா பற்றி சொல்லிவிடுகிறேன். சென்டோஸா, சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஒரு தம்மாத்துண்டு தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். வேறு சில பயண மார்க்கங்களும் உண்டு. மழை பெய்கிற அன்று சென்டோஸா செல்வது உசிதமல்ல என்று சொன்னார்கள். சென்டோஸா போனபிறகு மழை பெய்தால் என்ன செய்வது? அதுதான் நடந்தது. ஆனால் மழையில் நனைந்த சென்டோஸா-வின் அழகு நிச்சயம் மற்ற நாட்களில் பார்க்கக் கிடைக்காது. சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும்.

தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் (சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் லைன்ஸ்) விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது. எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் Under Water world மற்றும் Dolphin Lagoon மட்டுமே பார்க்க முடிந்தது. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள். வாட்டர் வேர்ல்டு ரொம்ப எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் சென்டோஸா-வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்று நிச்சயம் சொல்லலாம். அ.வா.வே-க்கு வெளியே 6 டாலர் கொடுத்தால் இரண்டு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் டால்பின் லகூன் சென்று ரொம்ப நேரம் காத்திருந்து, டால்பின்கள் ஒரு சின்னப்பெண் சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் செய்வதைப் பார்த்தோம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான இடம்.

சென்டோஸா-வில் Songs of the sea, Merlion என்று இன்னும் நிறைய விஷயங்களை பார்க்காமல் திரும்பியது வருத்தம்தான். அடுத்த முறை அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்ப்போம். இங்கேயிருக்கிற மற்ற டூரிஸ்ட் அட்ராக்ஷன்களைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கலாம்.

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 3
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 2
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் – 1