Updates from ஜூலை, 2008 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 9:20 pm on July 29, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மின்னஞ்சல் செக் லிஸ்ட் 

  மின்னஞ்சல் எழுதி முடித்ததும் சரி பார்க்க வேண்டிய விஷயங்களில் சில.

  • படிக்கப் போகிறவரை மனதில் வைத்து எழுதினோமா ?
  • சுருக்கெழுத்துக்களையும், கலைச் சொற்களையும் முடிந்தவரை தவிர்த்திருக்கிறோமா ?
  • தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதா ?
  • படிக்க வேண்டியவர் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எழுதினோமா ?
  • இது நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுமா, அல்லது எதிர்மறையாய் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டா ?
  • எதிர் பார்ட்டியின் ஆர்வம், எடுத்துக்கொள்ளும் திறன் முதலானவற்றை மனதிலிறுத்தி அதற்குத் தகுந்தாற்போல் தகவல் வடிவமைக்கப் பட்டுள்ளதா ?
  • ஒவ்வொரு வாக்கியமும் முழுமையாய் உள்ளதா ?
  • செயப்பாட்டு வினைகளை நீக்கி செய்வினைகளால் எழுதப்பட்டுள்ளதா ?

  தொழில்முறை கடிதங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் எல்லா வகை எழுத்தாக்கங்களுக்கும் பயன்படும் வண்ணமே உள்ளது. முழுவதும் படிக்க இங்கே செல்லவும்.

  பின்குறிப்பு: இதில் அரசியல் அல்லது சச்சரவு எதுவும் இல்லை. உள்ளபடியே வெட்டி பாலாஜி, சாரு நிவேதிதா சர்ச்சையைப் படித்ததும் இந்த ஆவணம் நினைவுக்கு வந்தது. யான் படித்ததை பெறுக இவ்வையகம்.

   
 • சத்யராஜ்குமார் 8:42 am on July 19, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags:   

  காதல் 2020 – பாகம் 2 

  மாலைமதி – 11 ஜனவரி 1996

  முந்தைய பாகங்கள்: பாகம் 1


  ரினி பார்வையை அத்தனை திசைக்கும் வீசினாள். கூடத்தின் ஏதோ ஒரு மூலையில் முழு சிரத்தையோடு ஆராய்ச்சிக் காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தத்தாவை அவள் கண்டுபிடிப்பதற்குள் அவளை சற்று பார்க்கலாம்.

  மூச்சைப் பிடிக்கும் மேடு பள்ளங்களோடு அவள் உடலுடன் இழையும் கறுப்பு பனியன். ப்ரில் மடிப்புகளுடன் வெண்ணிற மிடி. அதற்குக் கீழே சூரியக் கட்டியாய் ஒளியை உமிழும் கெண்டைக் கால்கள். அவளை இரண்டு இன்ச் உயர்த்தும் குதிகால் செருப்பு. ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவது அவள் பொழுதுபோக்கு. வெளிநாட்டுப் பத்திரிகைகள் அவ்வப்போது வெளியிட்டிருக்கின்றன.

  பணி மேஜைக்குப் பக்கத்தில் சோதனைக் குடுவையை உயர்த்திப் பிடித்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தத்தாவைப் பார்த்துவிட்டாள் ரினி.

  அருகில் சென்று சன்னமான குரலில், ” டாடி. ” என்றாள்.

  திரும்பினார் தத்தா. போன மாசம்தான் நாற்பத்தாறு வயதைக் கடக்கிறார். ஆனால் பார்வைக்கு ஐம்பது வயதுக்கிழவர் போலத் தோற்றம். யோசித்து யோசித்து தலை மயிர் அத்தனையும் கொட்டிப் போயிருந்தது. போனால் போகட்டுமென ஓரிரு நரை முடிகள் ஆங்காங்கே மிச்சம்.

  தடிமனான மூக்குக் கண்ணாடியை சரியாய்ப் பொருத்தி, ” ரினி ? ” என்றார்.

  ” வரச் சொன்னீங்களே டாடி. ”

  ” எதுக்கு வரச் சொன்னேன் ? ”

  ” பர்சனலா உங்க கிட்டே பேசணும்ன்னு சொல்லிருந்தேன். அஞ்சாம் தேதி காலை பத்து மணிக்குப் பேசலாம்ன்னு நேரம் கொடுத்திருந்திங்க. இன்னிக்குத் தேதி அஞ்சு. இப்ப நேரம் சரியாய்ப் பத்து மணி. ”

  ” ஓ எனக்கு அந்த ஞாபகமே இல்லை. இட்ஸ் ஆல்ரைட். நீதான் நினைவு படுத்திட்டியே. கமான். ஸ்டூலை இழுத்துப் போட்டு உக்கார். பேசு. ”

  ரினியின் முகத்தில் ஜவ்வுப் படலம் போல் மெல்லிசாய்க் கோபச் சிவப்பு.

  ” நீங்க ஒரு பத்து நிமிஷம் இந்தக் குடுவைகளை ஓரமா வெச்சிட்டு என்கிட்டே மூஞ்சி குடுத்துப் பேசணும். ஏன்னா நான் பேச வந்திருப்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

  தத்தா புன்னகைத்துக் கொண்டே கையிலிருந்த பிப்பெட்டைமேஜை மேல் வைத்து விட்டு, இரண்டு கைகளையும் மார்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

  ” ம். நான் ரெடி. ”

  தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காக சில வினாடி மவுனம் மேற்கொண்ட ரினி வார்த்தைகளைத் திறந்து விட்டாள். ” டாடி, நான் என் கல்யாண விஷயமாத்தான் உங்க கிட்டே பேச வந்தேன். ”

  புருவங்கள் திடுமென சுருங்க, நிமிர்ந்தார் தத்தா.

  (மேலும் வரும்)

   
 • சத்யராஜ்குமார் 6:15 am on July 18, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags:   

  காதல் 2020 – பாகம் 1 

  இணையத்தில் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகள் நடந்த வண்ணம் உள்ளன. கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதில்லை. இரண்டொரு நாள் முன்பு பா.பா ட்விட்டிய போது, சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி பற்றி தெரிந்தது.

  லேசாய் ஆர்வம் ஏற்பட, 96-ல் மாலைமதியில் எழுதிய விஞ்ஞான காதல் சிறுகதையை அங்கே போட்டால் என்ன என எண்ணி அலெக்ஸிடம் கேட்டேன். NO ! கண்டிப்பாய் புதுசாய் இருக்கணும் என்று சொல்லி விட்டார். புதுசாய் ஒரு கதை எழுதி நாளாச்சு. சயன்ஸ் புதினம் எழுதினால் கொஞ்ச நேரத்துக்கு ஜாகிங் போய் விட்டு வந்த மாதிரி இருக்கும். Cryostorage சம்பந்தமாய் எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அதை விட போன வாரம் தியேட்டரில் பார்த்த WALL-E பாதிப்பில் ஒன்றைத் தட்டி விடுதல் சுலபமாயிருந்ததால் பிழைக்கத் தெரியாதவன் பிறந்தான். இது மாதிரி கதை ஒன்றை சுஜாதாவும் எழுதியிருக்காராம். [அவர் எது மாதிரிதான் எழுதாமல் விட்டார் 🙂 ]

  சரி, இது அறிவியல் கதை ஸீசன் என்பதால் அந்த மாலைமதி சிறுகதையை பார்ட் பார்ட்டாய் இங்கே அச்சடிக்க உத்தேசம். (சஸ்பென்ஸ் பிசினஸெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு சில பாராதான் என்னால் டைப் செய்ய முடியும் !) இன்னொரு முக்கிய விஷயம். நான் இந்தக் கதை எழுதியதற்கும், சுஜாதாவுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அதை கதை முடிந்த பிறகு சொல்கிறேன்.


  காதல் 2020

  மாலைமதி – 11 ஜனவரி 1996

  புரொபசர் தத்தாவின் ஆராய்ச்சிக்கூடத்துக்குள் தயங்கித் தயங்கிப் பிரவேசித்தாள் ரினி.

  ஹோவென்று விஸ்தாரமாய் விரிந்து உள்ளே சென்றது ஆராய்ச்சிக்கூடம். சப்தங்கள் முற்றிலுமாய்க் கைது செய்யப்பட்டது போல் அமானுஷ்ய அமைதி. டெஸ்ட் ட்யூப்களும், கண்ணாடிக் குடுவைகளில் பல நிற ரசாயனங்களும் கண்ணில் பட்டன. கூண்டுக்குள் மிரட்சியாய் விழிக்கும் வெள்ளெலிகள். இன்னொரு திசையில் கம்ப்யூட்டர் திரைகள் வினோத உருவங்கள் எழுப்பிக் கொண்டிருந்தன. சிக்கலான வயர்களோடு, பற்ற வைப்புகளோடு நிர்வாணமாய்க் கிடந்த ப்ரிண்ட்டட் சர்க்யூட் போர்டுகள், பாய்லர் போல உருண்டையாய் ஆளுயர உலோகக் கூண்டுகள்.

  இத்தனை விஞ்ஞானக் கசகசப்புகளுக்கு நடுவே தத்தாவைத் தேடுவது ‘ வழி தவறிய கோழிக்குஞ்சை அதன் அம்மாவிடம் சேர்ப்பியுங்களேன் ‘ என்று கெஞ்சும் சிறுவர் படப் புதிர் போலிருந்தது.

  ரினி பார்வையை அத்தனை திசைக்கும் வீசினாள்.

  (மேலும் வரும்)

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி