பிழைக்கத் தெரியாதவன்


கூட்டம் கூட்டமாக கடற்கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அப்பா கத்தினார். ” சீக்கிரமா நடடா. ”

” எல்லாருக்கும் இடம் இருக்கும்ன்னு போர்டு போட்டிருக்கான் பாருங்க. ” வெளிச்சமாய் எரிந்து கொண்டிருந்த மின்னணுப் பலகையைக் காட்டினான் பினு.

பதட்டமில்லாத அவன் பதில் கேட்டு அப்பாவின் ர.அ அதிகமானது.

” திமிரு. உடம்பு பூராவும் திமிரு. உன்னை அஞ்சிலயே வளைச்சிருக்கணும்டா. இப்படி எதிர்த்துப் பேசிட்டிருந்தா என்னிக்குமே வாழ்க்கைல உருப்பட மாட்டே. ”

கடகடவென்று சிரித்தான் பினு.

” என்னடா சிரிக்கறே ? ”

” அப்பா, இன்னிக்கு உலகத்தின் கடைசி நாள்ன்னு வானிலை அறிக்கை. என்னிக்குமே வாழ்க்கைல உருப்பட மாட்டேன்னு நீங்க திட்டறது அபத்தமா இல்லே ? ”

ஒரு நொடி கால் இடறி நின்ற பின், தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார் அப்பா. ” ஆமா. இங்கதான் கடைசி. வாழ்க்கை இன்னும் இருக்கு. கொண்டு வந்து நிறுத்தியிருக்கான் பாரு. பத்து கல்யாண மண்டபம் சைசில் ஸ்பேஸ் ஷிப். கண்ணை மூடி கண்ணை முழிக்கறதுக்குள்ளே வீனஸ்ல கொண்டு போய் இறக்கிடுவான். ”

” கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் மார்ஸ்ன்னு ஜல்லியடிச்சாங்க ? ”

” இப்ப நாஸா முடிவை மாத்திட்டாங்க. வீனஸ்ல 50 km உயரத்தில் அண்டவெளி அழுத்தம் 1 பார். ஸீரோ டு அம்பது டிகிரி செல்ஷியஸ் வெப்பம். வேண்டுமளவு சூரிய சக்தி. ஆக்சிஜன் இருக்கு. கார்பன் டை ஆக்சைட் இருக்கு. சல்பர் இருக்கு. அங்க வாழ்க்கை இருக்குடா. ”

” ஆமா, ஸ்பேஸ் ஷிப்ல போறிங்களே ? ஆன்லைன் ட்ராக்கிங் வசதி இருக்கா ? ”

” முட்டாள். போறோம். எல்லாரும் போயாச்சு. இது கடைசி ட்ரிப். இனி வராது. அவ்வளவுதான். ”

” போன வாரம் உங்க பால்ய நண்பர் கிருஷ்ணமூர்த்தி போனாரே? ஷேமமா போய் சேர்ந்தேன்னு போன் பண்ணாரா ? ”

அப்பா கடுப்பாய் அவனைப் பார்த்தார். ” நாப்பது மில்லியன் கிலோ மீட்டர். அங்க போன் போட்டு பேசற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தா கந்தகமாகிப் போன இந்த பூமியை காப்பாத்தியிருக்கலாமே ? ” ஆக்ஸிஜன் மாஸ்க்கை ஒரு நொடி நீக்கி மூக்கை சொறிந்து கொண்டு திரும்ப மாட்டிக் கொண்டார்.

பினு சிரித்தான். ” விஞ்ஞானம் வளராம இருந்தா ஒரு வேளை பூமியை காப்பாத்திருக்கலாம்ப்பா. ”

” விதண்டாவாதம். விதண்டாவாதம். கடைசி வரைக்கும் இப்படியே இருந்து தொலைக்காதடா ப்ளீஸ். ”

” சரி டென்ஷன் ஆகாம என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க. சுனாமிக்கும், கந்தக மழைக்கும், வெள்ளத்துக்கும், புயலுக்கும், கிருமிகளுக்கும், வியாதிகளுக்கும், போர்களுக்கும், கலவரங்களுக்கும், சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் எப்படியோ தாக்குப் பிடிச்சு மிச்சமிருக்கும் கோடி சொச்சம் மனிதர்களையும் இந்த ஒரு வாரத்தில் ஐனூறு விண்கலன்களில் காலி பண்ணியாச்சு. இன்றே கடைசி. போனவங்க என்ன ஆனாங்க ? யாருக்காவது தெரியுமா ? அங்க எப்படி இருக்கும் ? நிஜமாவே லைப் இருக்கா ? போட்டோவாவது பார்த்திங்களா ? எந்த நம்பிக்கையில் கிளம்பறிங்க ? ”

” அய்யோ… கடைசி நொடி வரைக்கும் இப்படி வம்பு வாதம் பண்றானே ? கடவுளே இவனுக்கு நல்ல புத்தியை இப்ப கூட தர மாட்டியா ? ”

” போதும்ப்பா. வறட்டு அறிவியலையும், வறட்டு கடவுளையும் இது வரைக்கும் நம்பி அழிஞ்சது போதும். இந்த ரெண்டையும் கொஞ்சம் ரீவைஸ் பண்ணினா நாம பிழைப்போம். ”

ஸ்பேஸ் ஷிப் பிரம்மாண்டமாய் நின்றிருந்தது. அதன் அகலமான வாசலுக்குள் தளர்ந்து மெலிந்த மனித இனம் சாரை சாரையாய் நுழைந்து கொண்டிருந்தது. உடமைகளை ஒரு கன்வேயர் பெல்ட் விழுங்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்பாவின் பெட்டியை அதன் மேல் போட்டான்.

” கிளம்புங்க. ”

” நீ ? ”

” ட்ரன்க்கு பெட்டியை தூக்க சிரமப்படுவிங்கன்னுதான் கூட வந்தேன். போய்ட்டு வாங்க. அம்மாவைப் பார்த்தா கேட்டேன்னு சொல்லுங்க. ”

” இடியட். என்ன உளர்றே ? அவ செத்து அஞ்சு வருஷம் ஆச்சு. ”

திடீரென்று வந்த ஜனத்திரள் நெருக்கியதில் அப்பா மறைந்து போனார்.O

[தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக]