காதல் 2020 – பாகம் 1


இணையத்தில் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகள் நடந்த வண்ணம் உள்ளன. கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதில்லை. இரண்டொரு நாள் முன்பு பா.பா ட்விட்டிய போது, சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி பற்றி தெரிந்தது.

லேசாய் ஆர்வம் ஏற்பட, 96-ல் மாலைமதியில் எழுதிய விஞ்ஞான காதல் சிறுகதையை அங்கே போட்டால் என்ன என எண்ணி அலெக்ஸிடம் கேட்டேன். NO ! கண்டிப்பாய் புதுசாய் இருக்கணும் என்று சொல்லி விட்டார். புதுசாய் ஒரு கதை எழுதி நாளாச்சு. சயன்ஸ் புதினம் எழுதினால் கொஞ்ச நேரத்துக்கு ஜாகிங் போய் விட்டு வந்த மாதிரி இருக்கும். Cryostorage சம்பந்தமாய் எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அதை விட போன வாரம் தியேட்டரில் பார்த்த WALL-E பாதிப்பில் ஒன்றைத் தட்டி விடுதல் சுலபமாயிருந்ததால் பிழைக்கத் தெரியாதவன் பிறந்தான். இது மாதிரி கதை ஒன்றை சுஜாதாவும் எழுதியிருக்காராம். [அவர் எது மாதிரிதான் எழுதாமல் விட்டார் 🙂 ]

சரி, இது அறிவியல் கதை ஸீசன் என்பதால் அந்த மாலைமதி சிறுகதையை பார்ட் பார்ட்டாய் இங்கே அச்சடிக்க உத்தேசம். (சஸ்பென்ஸ் பிசினஸெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு சில பாராதான் என்னால் டைப் செய்ய முடியும் !) இன்னொரு முக்கிய விஷயம். நான் இந்தக் கதை எழுதியதற்கும், சுஜாதாவுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அதை கதை முடிந்த பிறகு சொல்கிறேன்.


காதல் 2020

மாலைமதி – 11 ஜனவரி 1996

புரொபசர் தத்தாவின் ஆராய்ச்சிக்கூடத்துக்குள் தயங்கித் தயங்கிப் பிரவேசித்தாள் ரினி.

ஹோவென்று விஸ்தாரமாய் விரிந்து உள்ளே சென்றது ஆராய்ச்சிக்கூடம். சப்தங்கள் முற்றிலுமாய்க் கைது செய்யப்பட்டது போல் அமானுஷ்ய அமைதி. டெஸ்ட் ட்யூப்களும், கண்ணாடிக் குடுவைகளில் பல நிற ரசாயனங்களும் கண்ணில் பட்டன. கூண்டுக்குள் மிரட்சியாய் விழிக்கும் வெள்ளெலிகள். இன்னொரு திசையில் கம்ப்யூட்டர் திரைகள் வினோத உருவங்கள் எழுப்பிக் கொண்டிருந்தன. சிக்கலான வயர்களோடு, பற்ற வைப்புகளோடு நிர்வாணமாய்க் கிடந்த ப்ரிண்ட்டட் சர்க்யூட் போர்டுகள், பாய்லர் போல உருண்டையாய் ஆளுயர உலோகக் கூண்டுகள்.

இத்தனை விஞ்ஞானக் கசகசப்புகளுக்கு நடுவே தத்தாவைத் தேடுவது ‘ வழி தவறிய கோழிக்குஞ்சை அதன் அம்மாவிடம் சேர்ப்பியுங்களேன் ‘ என்று கெஞ்சும் சிறுவர் படப் புதிர் போலிருந்தது.

ரினி பார்வையை அத்தனை திசைக்கும் வீசினாள்.

(மேலும் வரும்)