காதல் 2020 – பாகம் 2


மாலைமதி – 11 ஜனவரி 1996

முந்தைய பாகங்கள்: பாகம் 1


ரினி பார்வையை அத்தனை திசைக்கும் வீசினாள். கூடத்தின் ஏதோ ஒரு மூலையில் முழு சிரத்தையோடு ஆராய்ச்சிக் காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தத்தாவை அவள் கண்டுபிடிப்பதற்குள் அவளை சற்று பார்க்கலாம்.

மூச்சைப் பிடிக்கும் மேடு பள்ளங்களோடு அவள் உடலுடன் இழையும் கறுப்பு பனியன். ப்ரில் மடிப்புகளுடன் வெண்ணிற மிடி. அதற்குக் கீழே சூரியக் கட்டியாய் ஒளியை உமிழும் கெண்டைக் கால்கள். அவளை இரண்டு இன்ச் உயர்த்தும் குதிகால் செருப்பு. ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவது அவள் பொழுதுபோக்கு. வெளிநாட்டுப் பத்திரிகைகள் அவ்வப்போது வெளியிட்டிருக்கின்றன.

பணி மேஜைக்குப் பக்கத்தில் சோதனைக் குடுவையை உயர்த்திப் பிடித்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தத்தாவைப் பார்த்துவிட்டாள் ரினி.

அருகில் சென்று சன்னமான குரலில், ” டாடி. ” என்றாள்.

திரும்பினார் தத்தா. போன மாசம்தான் நாற்பத்தாறு வயதைக் கடக்கிறார். ஆனால் பார்வைக்கு ஐம்பது வயதுக்கிழவர் போலத் தோற்றம். யோசித்து யோசித்து தலை மயிர் அத்தனையும் கொட்டிப் போயிருந்தது. போனால் போகட்டுமென ஓரிரு நரை முடிகள் ஆங்காங்கே மிச்சம்.

தடிமனான மூக்குக் கண்ணாடியை சரியாய்ப் பொருத்தி, ” ரினி ? ” என்றார்.

” வரச் சொன்னீங்களே டாடி. ”

” எதுக்கு வரச் சொன்னேன் ? ”

” பர்சனலா உங்க கிட்டே பேசணும்ன்னு சொல்லிருந்தேன். அஞ்சாம் தேதி காலை பத்து மணிக்குப் பேசலாம்ன்னு நேரம் கொடுத்திருந்திங்க. இன்னிக்குத் தேதி அஞ்சு. இப்ப நேரம் சரியாய்ப் பத்து மணி. ”

” ஓ எனக்கு அந்த ஞாபகமே இல்லை. இட்ஸ் ஆல்ரைட். நீதான் நினைவு படுத்திட்டியே. கமான். ஸ்டூலை இழுத்துப் போட்டு உக்கார். பேசு. ”

ரினியின் முகத்தில் ஜவ்வுப் படலம் போல் மெல்லிசாய்க் கோபச் சிவப்பு.

” நீங்க ஒரு பத்து நிமிஷம் இந்தக் குடுவைகளை ஓரமா வெச்சிட்டு என்கிட்டே மூஞ்சி குடுத்துப் பேசணும். ஏன்னா நான் பேச வந்திருப்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

தத்தா புன்னகைத்துக் கொண்டே கையிலிருந்த பிப்பெட்டைமேஜை மேல் வைத்து விட்டு, இரண்டு கைகளையும் மார்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

” ம். நான் ரெடி. ”

தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காக சில வினாடி மவுனம் மேற்கொண்ட ரினி வார்த்தைகளைத் திறந்து விட்டாள். ” டாடி, நான் என் கல்யாண விஷயமாத்தான் உங்க கிட்டே பேச வந்தேன். ”

புருவங்கள் திடுமென சுருங்க, நிமிர்ந்தார் தத்தா.

(மேலும் வரும்)