தமிழ்நாடு 2008 

மூன்று வருடங்கள் கழித்து மூன்று வார மின்னல் விடுப்பில் தென்னிந்திய விசிட். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே பார்த்த பைக் விபத்து மனதைப் பிசைந்தது. தூக்கினால் காகிதம் போல மடங்கும் உடல். ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ஜீன்ஸ் அணிந்த அந்த பைக் இளைஞன் காதில் மாட்டியிருக்கும் வெள்ளை நிற ஐபாட் ஒயரோடு இன்னமும் கண்ணுக்குள் இருக்கிறான்.

அர்த்த ராத்திரியிலும் மூச்சைத் திணறடிக்கும் டிராபிக். சென்னைக்கு இன்னும் நிறைய பாலங்கள் தேவை. ஏட்டிக்குப் போட்டியாய் போட்டுக் கொண்ட வாகன ஹை பீம் விளக்கு வெளிச்சத்தி்ல் கண் கூசுமளவுக்கு இந்தியா ஒளிர்கிறது. விலைவாசி ஸ்பென்சர் ப்ளாஸா மொட்டை மாடியிலிருந்து, ” ஹாய் ” என்கிறது. அகல வழி இணையத் தொடர்பு பரவலாகி விட்டதால் ஆங்காங்கே Pay and use Wi-Fi Hotspot-கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ஐம்பது பைசா என்று போர்டு மாட்டியிருக்க, வழக்கம் போல ஒரு ரூபாய் அடாவடி வசூல். ” ஏங்க இப்படி ? ” என்று கேட்டதுதான் தாமதம். நாலு தடியாட்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் அது அப்படித்தான் என எனக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழ்ப்படத்தில் இங்கே ஒரு சண்டைக்காட்சி வைக்கலாம். இயற்கை உபாதையோடு அங்கே வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க இயலவில்லை. மாநகராட்சி அலுவலக குப்பைத்தொட்டிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிப்போட்டேன்.

எங்கள் ஊர்ப்பக்கம் அடர்ந்த தென்னை மரங்கள் அசைந்த இடங்கள் தோறும் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை காற்றாலைகள் அழகாய்ச் சுழல்கின்றன. இரண்டு நாள் முன்புதான் ஒரு ராட்சஸ காற்றாலை உயிர்ச்சேதம் ஏதுமின்றி இரண்டாய் முறிந்து விழுந்ததாம்.

ஐகாரஸ் பிரகாஷ், நரேன், பாரா போன்றவர்களை சந்திக்க முயன்று முடியவில்லை. சென்னையில் இருந்த சொற்ப நாட்களில் அவர்கள் நேரமும், என் நேரமும் ஒத்து வரவில்லை. காசியை மட்டும் ஏர்போர்ட் போகிற வழியில் கத்திப்பாரா பாலத்தினடியில் ஒண்ணரை நிமிஷம் சந்தி்த்துப் பேச முடிந்தது.

எங்கள் மாவட்டத்தில் அரசு பஸ்கள் முதற்கொண்டு அத்தனை வாகனங்களிலும் பட்டப்பகலில் A படக்காட்சிகளை கர்ண கடூரமாய் ஸ்பீக்கர்கள் அலற வீடியோ காண்பிக்கிறார்கள். சிறார்கள் பிஞ்சிலேயே ஜூஸாவது உறுதி. தவிர 2020-ல் இந்தியா வல்லரசாகும் போது கோவை பகுதியில் பாதிப்பேர் செவிடாகியிருப்பார்கள்.

கோவையில் மனைவி மக்கள் பந்துக்கள் துணிக்கடைக்குள் புகுந்த அவகாசத்தில் நான் புத்தகக்கண்காட்சிக்கு நழுவினேன். நிறைய ஸ்டால்கள். நிறைய மக்கள். இது மகிழ்ச்சி்க்குரிய விஷயம். அடுத்த வாரம் பொள்ளாச்சியில் கண்காட்சியாம். ‘புத்தக உலகம்’ என்ற பெயரில் பொள்ளாச்சியில் கடை வைத்திருக்கும் அன்பர்கள் சொன்னார்கள். அவர்கள் கடைக்கு நாஸரும், மணிவண்ணணும் ரெகுலர் வாடிக்கையாளர்களாம். ஷூட்டிங் வரும்போதெல்லாம் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அங்கே எட்டிப் பார்த்து விட்டுப் போகிறார்கள் என்றனர். மார்க்சிஸ புத்தகங்கள் அவர்கள் விருப்பத்துக்குரியன என்பது உபரி தகவல்.

ஜெயா டிவியிலோ, மக்கள் டிவியிலோ எனது இணைய தளத்தைக் காட்டினார்கள் என்று ஒன்று விட்ட அண்ணன் சொன்னார். காண்பித்த புண்ணியவானுக்கும், ஒரு வேளை மின்சார பகவான் அருளி இருந்து அதைப் பார்த்தவர்களுக்கும் நன்றி.

எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஒருவரை சந்தித்தபோது, ” சில வருஷம் முன்னால் எம்.ஏ தமிழ் இலக்கியம் தொலைதூரக் கல்வி முறையில் படித்தேன். உன்னோட கதை எனக்கு ஆன்ஸிலரி பாடமாக வைத்திருந்தார்கள் ! ” என்றார். மண்டைக்குள் ஜில்லென்று ஒரு பரவசம்.

நண்பர்கள் அறிவுறுத்தி உதவியதன் பேரில் திருமகள் நிலையம் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை செப்டம்பரில் வெளியிடுகிறது. இலக்கிய சிந்தனை விருது கிடைக்கப்பெற்ற ‘ஒரு விநாடியும் ஒரு யுகமும்’ என்ற சிறுகதையின் தலைப்பையே புத்தகமும் தலைப்பாகக் கொண்டுள்ளது. கல்கி, விகடன், அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளுடன் பிற கதைகளும் தொகுப்பில் உள்ளன. இந்த வலைப்பூவின் வலதுபுறம் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்க்கலாம்.

சிறப்பாக ஒரு வெளியீட்டு விழா வைக்க ஆசைப்பட்டார்கள். குழந்தைக்கு காதுகுத்து விழா வேறு நான் வைத்திருந்ததால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.