ராஜேந்திரகுமார்


தமிழ் எழுத்தில் ராஜேந்திரகுமார் இடம் என்ன? 

இப்படி ட்விட்டரில்  கேட்டு என். சொக்கன் என் நினைவுகளை தூண்டி விட்டார். சற்றே துரதிர்ஷ்டம் கலந்த நினைவுகள் அவை.

89-ல் என்றுதான் நினைக்கிறேன். ராஜேஷ்குமார் இல்ல விழா. அதற்காக கோவை வந்திருந்தார். விழாவுக்கு முந்தைய தினம் ஹோட்டலில்  முதன் முதலாய் ராஜேந்திரகுமார் அவர்களை சந்தித்தேன். 

விறுவிறுப்பான அவர் எழுத்து நடைக்கு நேர் எதிராய் ரொம்பவும் நிதானமான மனிதராகத் தெரிந்தார். என்னுடன் பேசிக் கொண்டே, ஒரு கையில் சிகரட் புகைய, மறு கையால் நீள வெள்ளைத்தாளில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருந்தார். 

எம்.ஜி.ஆர், தமிழ்வாணன் போலவே அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலில் ஒரு தொப்பி அடையாளம் இருக்கிறது. வாசகர் வட்டங்களுக்கு அவர் துள்ளு நடை நன்கு தெரிந்தாலும், வாசிக்காத வட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவரையும், ராஜேஷ்குமாரையும் நன்கு குழப்பிக் கொள்வார்கள்.

வாவ், ஙே, பைக் அரை வட்டம் போட்டு திரும்புவது, நெற்றி முடியை கோதி விட்டு நாயகி இடுப்பில் கை வைத்து முறைப்பது இதெல்லாம் தமிழில் அவர் பட்டா போட்டுக் கொண்ட சொற்கள் அல்லது சொற்றொடர்கள்.

அத்தியாயத்துக்கு ஒரு கேரக்டர் என கதாபாத்திரம் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டு வரும் அவர் பாணி, பாஸ்ட் புட் நாவல் வடிவத்துக்கு அழகாகக் கை கொடுக்கும் ஓர் உத்தி. ஆட்கள் அறிமுகத்திலேயே பாதி கதை நகர்ந்து விடும். 

தான் ராஜேஷ்குமார், ப.கோ பிரபாகர் ஆகியோருக்கெல்லாம் முந்தைய தலைமுறை; சுஜாதா, நானெல்லாம் ஒரு ஜெனரேஷன் என்பதை பேச்சினூடே ஓரிரு முறை அழுத்தி சொன்னார். 

அடுத்த நாள் விழாவில் சூடாக இட்லி வடை சாப்பிட்ட பின், காலை பத்தரை மணிக்கு, ”  வாப்பா. ஒரு வாக் போய்ட்டு வரலாம். ” என்றார்.

மெதுவாய் நானும், அவரும்  பூ மார்க்கெட் தெருவில் நடக்கும் போது, ” ராஜேஷ்குமாரோட சாயல் இல்லாம இருந்தா உன் கதைகள் நல்லா இருக்கும். ” என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். என் சிறுகதைகளை இவர் படித்திருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். 

” குமுதத்தில் பத்து சிறுகதை எழுதிட்டு ஒரு நாவல் எழுது. ஹிட் ஆயிடும். ” என்றார்.

அந்த இரண்டு அறிவுரைகளும் அந்த சமயத்தில் எனக்கு மிகவும் உபயோகமானவை. நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மனிதரிடமிருந்து கிடைத்ததுதான் ஆச்சரியம்.

அந்த விழாவில் கிடைத்த பத்திரிகை ஆசிரியர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, சில மாத நாவல்கள் எழுதியது பற்றி தமிழோவியத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். அந்த தொடர் அனுபவங்களை தொடர்ந்து எழுத நேரமிருந்திருந்தால் இந்தப் பதிவும் அதில் ஓர் அத்தியாயமாயிருந்திருக்கும்.

இது வரை எழுதியதில் துரதிர்ஷ்டம் எங்கே வந்தது என்று நீங்கள் யோசித்தால், அது இனிமேல்தான் வருகிறது. என்னுடைய முதல் நாவலை வெளியிட்ட அன்பர் தெரிந்தோ தெரியாமலோ அதை ஒரு விவகாரமாக்கியிருந்தார்.

ராஜேந்திரகுமாரின் நாவல் வெளிவருவதாக அறிவித்த இதழில் அதற்கு பதிலாக என் நாவலை வெளியிட்டு விட்டார்.

நாவல் ஏமாற்றமளிக்கவில்லை; ராஜேந்திரகுமார், சத்யராஜ்குமார் இரண்டுமே தமிழில் எட்டு எழுத்துக்கள்தான் என்றெல்லாம் வினோத ஆராய்ச்சி செய்து வாசகர்கள் போஸ்ட் கார்டில் பாராட்டினார்கள்.  ஆனால் ராஜேந்திரகுமார் இந்த விஷயத்தில் படு கோபம் அடைந்திருக்கிறார்.

அடுத்த முறை நாவல் வாங்கப் போன போது, ” அந்தப் பையன் கிட்டேயே போய் வாங்கிப் போடுங்க. ” என்று அவர்களை விரட்டி விட்டதாகத் தெரிகிறது. இதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் இதற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

மறுபடி அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.