ராப் என்கிற கலைஞன்


டோராவுக்கு அடுத்தபடியாக நான் ரசித்துப்பார்க்கிற இன்னொரு நிகழ்ச்சி POGO – வில் வருகிற MAD. இந்த நிகழ்ச்சியை நான் வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் பார்ப்பதற்கு காரணம் நிகழ்ச்சியை நடத்துகிற ROB என்று செல்லமாய் குழந்தைகளால் அறியப்படுகிற Harun Robert.

போகோ-வை எனக்குப் பொதுவாகவே பிடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அதன் கிரியேட்டிவிட்டி. அடுத்தது எந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் கலர்ஃபுல்லாக இருப்பது. நிகழ்ச்சிகளின் டைட்டில் அனிமேஷன்கள், ட்ரைலர்களைப் பார்த்தாலே நான் சொல்ல வருவது புரியும்.

இந்த ராப் என்கிற ஆசாமிக்கு கிரியேட்டிவிட்டி கொஞ்சம் ஜாஸ்திதான். கையில் எது கிடைத்தாலும் கொஞ்சம் வர்ணங்கள், இத்துனூண்டு பசை, ஒரு கத்திரிக்கோல் இத்யாதிகளை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு அழகான பொருளாக அதை மாற்றிவிடுகிற கைங்கரியம் இருக்கிறதே!! அது பல சமயங்களில் ‘அட’ என்று சொல்ல வைக்கும். எங்கிருந்து இந்த மனிதருக்கு மட்டும் இப்படிக் கற்பனை ஊற்றெடுக்கிறதென்று ஆச்சரியமாக இருக்கும்.

ராப் ஒரு அருமையான ஓவியர். அனிமேஷனில் மிகத் தேர்ச்சிபெற்றவர். டன் டன்னாக கலைத் திறமை கொட்டிக்கிடக்கிற படைப்பாளி. 

ஸ்டைலான ஒரு குறுந்தாடி, தலையில் ஒரு பெரிய கர்சீப் அல்லது தொப்பி, வரிசைப் பல் சிரிப்பு , கலர்ஃபுல் பனியன் என்று அசத்தலான கெட்டப்பில் வருகிற ராபுக்கு தன் கிரியேட்டிவிட்டி மூலம் குழந்தைகளை ஸ்நேகமாய் ஈர்க்கத் தெரிந்திருக்கிறது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இறுதியில் அவர் ஒரு சின்ன டீமுடன் அல்லது தனியாக உருவாக்குகிற  “தி பிக் பிக்சர்” அமர்க்களமான ஒன்று. 

குழந்தைகளின் படைப்புத்திறனை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் MAD-ஐ பார்க்க ஊக்குவிக்கலாம்.

  • சித்ரன்