மாலைக்காட்சி


ஞாயிறு மாலை பாதி தியேட்டர் நிரம்பியிருந்தால் அது பெரிய விஷயம். பல படங்கள் தியேட்டரில் நான் மட்டுமே உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.

கொஞ்ச நாள் முன்னால் Chronicles of Narnia: Prince Caspian அகிலையும், தென்றலையும் கூட்டிப் போன போது கூட மொத்தமாய் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தோம். தென்றல் அடம் பிடிக்க ஆரம்பிக்கவே, அவளை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டதால் அகில் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்து விட்டு வந்தான். 

முழு தியேட்டரும் நிரம்பி வழிய இங்கே பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். Quantum of Solace, The Bourne Ultimatum, சந்திரமுகி, சிவாஜி போன்றவை.

நேற்று போனது Slumdog Millionaire. அன்றைக்கு டீனேஜ் கும்பல் அதிகமாயிருந்தது. யாஹூ! மூவீஸ் போன்ற திரைத்தளங்களில் 70 சதம் ரசிகர்கள் அற்புதம் என்று பாராட்டியும் மீதிப் பேர் அப்படி ஒன்றும் இது பிரமாதமில்லை என்று லேசாகவும் எழுதியிருந்தார்கள். இருந்தாலும் Netflix உபயத்தில் ஜோதா அக்பர் பார்த்த பின் – அதன் பிரம்மாண்டமான இசையமைப்பை கேட்ட பின் – ஏ. ஆர். ரஹ்மானுக்காகவாவது இந்தப் படத்தை பார்த்து விட வேண்டுமென போன என்னை ARR சற்றே ஏமாற்றி விட்டார். ஆனால் தொலைக்காட்சி விளையாட்டோடு பிணைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதை கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது. 

முதல் சேரிக் காட்சியின்போதே Nachos நொறுங்கும் சப்தங்கள் தியேட்டரில் நின்று விட்டன. இந்தியப் பழங்கவிஞர் பற்றிய கேள்விக்கப்புறம் மறுபடி சேரி குப்பை மேட்டில் சின்னப் பையன்கள் குதித்தோடும் காட்சி வந்ததும் பின்னிருக்கையில் இருந்த நடுத்தர வயது அமெரிக்கப் பெண்மணி எழுந்து வெளியே போய் விட்டார். திரும்பி வரவேயில்லை.   

மற்றபடி மீதி ஜனம் படம் முடிந்த பிறகு வந்த extra fitting பாலிவுட் மசாலா நடனத்தைக் கூட விடாமல், ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் நாகரீகம் கருதி நானும் உட்கார்ந்திருந்தேன்.