இல்புல இமிலி – அல்புல ஆம் 

இதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம்.

இதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்று கமர்கட்டு என்ற நம் பற்களை வலுவுறச் செய்த ஒரு `கடக் முடக்’ சாதனத்தின் சுவையைக் கொண்டிருந்தது. சின்னவயது தின்பண்ட சந்தோஷங்களின் பொற்காலம் திரும்ப வந்துவிட்டது என்று மகிழ்வுறும் முன்பே மார்க்கெட்டிலி்ருந்து திடீரென்று  இவைகள் காணாமல் போய்விட்டன. ஒரிஜினல் இலந்தவடை,  கமர்கட்டைப் போன்று இவை இல்லை என்ற காரணத்தால் யாரும் வாங்கவில்லையோ என்னமோ. அதற்கப்புறம் இவைகள்  எங்கேயும் கிடைக்கவில்லை.

இலந்தவடை கம்மர்கட்டுகள் போன்றவைகள் இன்றைக்கு நகர்ப்புறங்களில் மறைந்து,  இப்போது ஒரு தலைமுறை தாண்டிய கால மாற்றத்தில் தின்பண்டங்களும் பரிணாம வளர்ச்சி கொண்டுவிட்டன.  கீழ்கண்ட லிஸ்ட்டைப் பார்த்தால் எப்படி என்று புரியும்.

பஞ்சுமிட்டாய், பம்பாய் மிட்டாய், கடலை உருண்டை, கடலை பர்பி, மிட்டாய், கமர்கட்டு, எலந்தப் பழம், பொரிவிளங்காய் உருண்டை, குழல் (குடல்), நெல்லிக்காய், குச்சிக் கிழங்கு, சக்கரவள்ளிக் கிழங்கு, புளிப்பு மிட்டாய், பல்லி மிட்டாய், தேங்காய் பர்பி, இஞ்சி முரப்பா, குச்சி ஐஸ், எள்ளுரண்டை, எலந்தவடை, குருவி பிஸ்கெட், தேங்கா பன், ரஸ்க், வர்க்கி, நுங்கு, பாப்பின்ஸ், தேன் மிட்டாய், தேன் குழல், பபிள்கம், நகாப்பழம், சர்பத், டொரினோ, கோலி சோடா, பால்ஐஸ், கப் ஐஸ், ஆரஞ்சு மிட்டாய், முந்திரி கேக், கீற்று மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு, பட்டாணிக்கடலை, அச்சுவெல்லம், பொட்டுக்கடலை, வறுகடலை, பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், தட்டை முறுக்கு, சீடை, சுண்டல், அப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, இட்லி, வடை, உப்புமா, பொங்கல், தோசை, பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, லட்டு, ஜிலேபி,மைசூர்பா, பாதுஷா, குலோப் ஜாமூன், காபி, டீ, பால், ரோஸ்மில்க், டைரிமில்க், காராமில்க், 5ஸ்டார், ஜெம்ஸ், லேக்டோகிங், பெர்க், மில்கிபார், மஞ்ச், காஃபி பைட், ஆல்ஃபென் லிபி, கிண்டர்ஜாய், செண்டர் ஃப்ரெஷ், செண்டர் ப்ஃரூட், புபாலு, பூமர், லேஸ், குர்குரே, பைட்ஸ், எக்ளேர்ஸ், ஃபிப்டி-ஃபிப்டி, குட் டே, சாக்கோஸ், கார்ன்ப்ஃளேக்ஸ், சீட்டோஸ், சீஸ் பர்கர், ஸ்ப்ரிங் ரோல், ஃப்ரென்ஞ் ஃப்ரைஸ், சமோசா, வெஜ் பஃப்ஸ், கட்லெட், சாக்கோ ட்ரஃபிள்,ஸாண்ட்விச், மாகி நூடுல்ஸ், பாஸ்தா,  மாக்ரோணி, பீட்சா, கார்லிக் ப்ரெட், பேல்பூரி, பாணி பூரி, பாவ் பாஜி, அமெரிக்கன் கார்ன், கார்னெட்டோ ஐஸ்க்ரீம், வனிலா, பிஸ்தா,ஸ்ட்ராபெரி,கஸாட்டா, கோக், பெப்ஸி, மிராண்டா, ஸ்லைஸ், ஆப்பி, மாஸா, ட்ராப்பிகானா, ஸ்வீட் கார்ன் சூப், பட்டர் நான், ரோட்டி, குல்ச்சா, புல்கா, புலாவ், சில்லி கோபி, கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா,  ஃபலூடா, ப்ரெட் ச்சன்னா, காஜு கத்லி, தந்தூரி சிக்கன் 65, காப்பிச்சினோ, எக்ஸ்பிரஸ்ஸ்ஸோ, காம்ப்ளான், மைலோ, பூஸ்ட்.. இன்னபிற..

பையனுக்கு குர்குரே வாங்க கடைக்குப் போகும்போது கடலை உருண்டை பாக்கெட் கண்ணில் பட்டால் உடனே வாங்கி வந்து விடுகிறேன்.