Updates from மார்ச், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 5:16 am on March 19, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    கல்லறை ஆட்டம் 


    சங்கமம் – கல்லூரி போட்டிக்காக!

    சங்கமம்-கல்லூரி-போட்டி

    இரண்டாம் இடம் அளித்த வாசகர்கள், நடுவர்கள் மற்றும் சங்கமத்துக்கு நன்றி. பரிசு பெற்ற வெட்டிப் பயல், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.


    நகரத்துக்கு வெளியே இருந்த ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜின் ஆஸ்டல் ப்ளாக்கில் 113-வது அறை. அறைக்குள் இருந்த மூன்று பேரும் ஜன்னலை மொய்த்திருந்தார்கள். தாடைப் பிரதேசத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியை அணிந்திருந்த ஜெயராஜ் ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான். 

    ” நெட்டையா ஒரு மொட்டை மரம் தெரியுதா? ”

    ஜெயராஜ் கை காட்டிய திசையில் ஹாஸ்டல் பிளாக்கை விட்டு சொற்ப தொலைவில் மயானம் தெரிந்தது. மயானம் பூராவும் நிற்க வைத்த சிலுவைக் குறிகள். கல்லறைகள். அங்கங்கே நின்று கொண்டிருந்த அடர் மரங்களுக்கு மத்தியில் அவன் காட்டிய மொட்டை மரம் பளிச்சென்று தெரிந்தது. 

    கிருபாவும், நடேஷும் தலைகளை ஆட்டினார்கள்.

    ” தெரியுது. ”

    ” அந்த மரத்துக்கு நேர் கீழே கறுப்பா ஒரு கல்லறை தெரியுதா? ”

    ” ம். சொல்லு. ”

    ” அதுக்குள்ளே யாரைப் புதைச்சிருக்காங்க தெரியுமா? ”

    ” கண்டிப்பா யாராவது மனுஷனைத்தான் புதைச்சிருக்கணும். ”

    கடி ஜோக் அடிக்க முயன்ற நடேஷை ஜெயராஜ் ரசிக்கவில்லை. ” நடேஷ், நான் சீரியசா பேசறேன். ”

    கிருபா நடேஷின் வாயைப் பொத்தி விட்டு ஜெயராஜிடம் திரும்பினான். ” நான் சீரியஸா கேக்கறேன். நீ சொல்லும்மா! ”

    ” நாம இந்த காலேஜில் சேர்றதுக்கு முன்னாடி ‘வில்லியம்’ன்னு ஒரு சீனியர் படிச்சிட்டிருந்தார். பைனல் இயர் படிக்கிறப்போ ஏதோ வீட்டுப் பிரச்சனை காரணமா தற்கொலை பண்ணிக்கிட்டார். ”

    ” எப்படி? ”

    ” அந்த மயான மொட்டை மரத்துல தூக்கு போட்டுகிட்டார். ”

    ” மை காட். இதெல்லாம் உனக்கு யார் சொன்னா? ”

    ” மத்யானம் பிசிக்ஸ் ப்ரொபஸார் டயனமிக்ஸை ராவிட்டிருந்தார். ரம்பம் ரம்பம் ஆரம்பம்ன்னு கத்தினோம். லெக்சரை நிறுத்திட்டு செத்துப் போன வில்லியம் பத்தி சொன்னார். இன்னொரு விஷயம் கேட்டா ராத்திரி நேரம் இந்த ஜன்னலை திறக்கவே மாட்டிங்க. ”

    ” என்ன அது? ”

    ” மாசா மாசம் எட்டாம் தேதி… அதாவது வில்லியம் செத்துப் போன தேதியில் அவரோட ஆவி மயானத்தை சுத்துதாம். 

    கிருபா உதட்டோரம் புன்னைகையை மாட்டினான். 

    ” இது கப்ஸா. ”

    ” நிஜம்டா. ”

    ” என்னால நம்ப முடியாது. ஆவி கீவி சமாசாரமெல்லாம் சரியான ரீல். ”

    ” நடேஷ், நீ என்னடா சொல்றே? ”

    ” ஆவி அனுபவமெல்லாம் எனக்கு இது வரைக்கும் இல்லை. ஆனா ஆவியே இல்லைன்னு ஒரேடியா மறுக்கவும் மாட்டேன். நமக்கு புரியாத சமாசாரங்கள் எத்தனையோ இருக்கு. ”

    ” உங்களை மாதிரி பயந்த ஆசாமிங்க பத்துப் பேர் இருந்தா போதும். ஆவி என்ன, அதுக்கு மேல வேறேதாவது கூட உலாவுதுன்னு கதை கட்டி விடுவான்க. ”

    ” நீ பெரிய தைரியசாலியாடா? ”

    ” கண்டிப்பா. ”

    ” அப்படின்னா நாங்க உன் தைரியத்துக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறோம். நீ தயாரா? ”

    ” தயார். ”

    ” நடேஷ், எட்டாம் தேதி எப்படா வருது? ”

    ” வர்ற புதன் கிழமை எட்டாம் தேதிதான். ”

    ஜெயராஜ் கிருபாவிடம் திரும்பினான். ” கிருபா, வர்ற புதன் கிழமை ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு நீ தன்னந்தனியா அந்த மயானத்துக்குப் போய்… வில்லியம் தூக்கு போட்டு செத்துப் போன மொட்டை மரத்துல ஒரு ஆணியை ஸ்ட்ராங்கா அடிச்சிட்டு வரணும். வருவியாடா? ”

    ” நான் அடிச்சிட்டு வரத் தயார். ஆனா இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே மட்டும்தான் இருக்கணும். பசங்க கிட்டே விஷயம் பரவினா வார்டன் காதை எட்டிடும். அப்புறம் வார்டன் கன்னா பின்னான்னு திட்டி, என்கொயரி வெச்சு, அம்மா அப்பாவையெல்லாம் அனாவசியமா இங்கே வரவழைச்சுருவார். ”

    ” ஓக்கே. நாங்க யார் கிட்டேயும் சொல்லலை. ”

    0O0

    புதன் கிழமை. தேதி எட்டு. நேரம் நள்ளிரவு 11:55. கிருபா வாட்டர் ட்ரெயினேஜ் பைப் வழியே ஹாஸ்டல் பிளாக்கின் வெளிப்பகுதிக்கு வந்து, பொட்டல் வெளியில் மயானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

    வலது தோளில் பட்டையை பதித்திருந்த ஜோல்னா பையில் சில இரும்பு ஆணிகள். சுத்தியல்.

    மயானத்தின் குட்டையான பின் பக்க காம்பௌண்ட் சுவரை தொட்டான்.  அதை சுலபமாய் தாண்டிக் குதிக்க முடிந்தது. குதித்த நிமிஷம் ஒரு உயரமான கல்லறையின் மேல் அவன் நிழல் பட்டு நகர, திடுக்கென்று தைரியத்தின் சில சதவிதங்களை இழந்து, மீண்டும் வளர்த்திக் கொண்டான். 

    ‘ ஆவியாவது, மண்ணாவது! ‘ மனசுக்குள் சொலிக் கொண்டே வில்லியமின் கல்லறையை நெருங்கினான். மொட்டை மரம் திம்மென்று நிமிர்ந்து நின்றிருந்தது. அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தின் இலைகளினூடே சடச்சடவென இறக்கைகளை படபடத்து இரண்டொரு ஆந்தைகள் இரைச்சலிட்டன. 

    ஜோல்னா பையை வில்லியமின் கல்லறை மேல் கிடத்தி, ஜிப்பை பிரித்தான். ஒரு நீளமான ஆணியையும், சுத்தியலையும் உள்ளிருந்து உருவினான்.

    ஆணியை மரத்தில் வைக்கப் போன போது – கைகளில் லேசாய் தயக்கம். மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.

    ‘ இத்தனை தூரம் வந்து விட்டு பயந்து திரும்புவதா கிருபா? எடு ஆணியை. ‘

    எடுத்தான்.

    ‘ மரத்தில் வை. ‘

    ஆணியின் கூர் முனையை மொட்டை மரத்தில் பதித்தான்.

    ‘ சுத்தியலை உயர்த்து. அடி. ‘

    உயர்த்தினான். ‘நச்’.

    ஆணி அந்த வைரம் பாய்ந்த மரத்தில் சிரமமாய் ஒரே ஒரு மில்லி மீட்டர் இறங்கியது.

    ‘நச்’.

    அடுத்த சுத்தியலடியை ஆணியின் மேல் பிரயோகித்த போது,

    ‘சர்ரக்… சர்ரக்… சர்ரக்… சர்ரக்.. ‘

    முதுகுக்குப் பின்னால் காலடிச் சத்தம். குபுக்கென்று வியர்த்துக் கொட்டி, விசுக்கென்று திரும்பினான். ஒரு மச மச உருவம் ஒரு அடி முன்னால் அவன் கண்ணில் மோதியது. முதுகுத் தண்டில் துவங்கி கபாலம் வரை ஒரு ஐஸ் துண்டம் சர்ரென பயணமாக, நடு நடுங்கும் குரலில் கேட்டான்.

    ” யா… யாரு? ”

    உருவத்திடம் இருந்து  ஜல்லிக் கற்களை உரசுகிற குரலில் பதில் வந்தது. 

    ” நான் வில்லியம். ”

    oO0

    ட்ரெயினேஜ் பைப் பயத்தில் கிருபாவை வழுக்கி வழுக்கி விட்டது. மயானத்திலிருந்து பின்னங்கால் பின்னந்தலையில் பட ஜெட்தனமாய் ஓடி வந்ததில் ஏராளமாய் மூச்சு வாங்கினான். கஷ்டப்பட்டு மேலேறி வராந்தாவில் குதித்தான். 

    அறைக்குள் நுழைந்த போது வியர்வை நயாகராவாய் பெருகிக் கொண்டிருக்க, சொத சொதவென ஈரத்தில் குளித்திருந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு எகிற பொத்தென்று படுக்கையில் விழுந்தான். 

    ஜெயராஜும், நடேஷும் பதறிப் போய் கிருபாவை பார்த்தார்கள். 

    ” கிருபா… என்னாச்சு ? ”

    ” அ.. அ… அங்கே… ”

    கோர்வையில்லாமல் குரல் வெளியாக வார்த்தை குழறினான் கிருபா.

    ” என்னடா ஆச்சு? ”

    நடந்ததை கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியபடி சொல்லி முடித்தான். 

    ” நல்ல வேளை கிருபா… வில்லியமோட ஆவி உன்னை எதுவும் செய்யலை. ”

    ” ஜெயராஜ் அது ஆவிதானா? ”

    ” பின்னே என்னவாம்? யாருன்னு நீ கேட்டப்ப நான் வில்லியம்ன்னு சொல்லலை? ”

    ” ஆமாடா. எனக்கு குழப்பமா இருக்கு. யாராவது என்னை பயமுறுத்தணும்ன்னே… இந்த மாதிரி… ”

    ” ஏண்டா இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா? யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும்? அது ஆவிதான். ”

    ” வாடா, நாம மூணு பேருமா சேர்ந்து மறுபடியும் அங்கே போய் பார்க்கலாம். ”

    ” ஏன் நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? தூங்குடா பேசாம. ”

    விளக்கு அணைக்கப்பட, தூக்கம் ரொம்ப நேரம் கழித்து கிருபாவை கட்டிப் பிடித்தது. கெட்ட கெட்ட கனவுகள். திரும்பத் திரும்ப ஒரு கறுப்பு உருவம் அவன் மேல் மோதுகிற மாதிரியே இருந்தது. 

    மறு நாள் காலையில் 102 டிகிரி கொதிக்கிற காய்ச்சலின் பிடியில் சிக்கியிருந்தான் கிருபா.

    0O0

    இரண்டாம் நாள். 

    காய்ச்சல் கட்டுக்குள் வந்திருக்க, இரண்டொரு புத்தகங்களை அள்ளிக் கொண்டு ஹாஸ்டலிலிருந்து வகுப்புக்கு புறப்பட்டான். வராந்தாவில் நடக்கும் போதும் அதே நினைவுகள்.

    வில்லியமின் ஆவி நிஜமா?

    இந்தக் கேள்வி அவனுக்குள் புகைச்சலாய் அலைந்து கொண்டே இருந்தது. வராந்தாவில் வார்டன் எதிர்ப்பட்டார்.

    ” குட்மார்னிங் ஸார். ”

    ” ஒரு நிமிஷம் என் ரூம் வரை வந்துட்டுப் போ. ”

    அவரோடு நடந்து அறைக்குள் நுழைந்தான்.

    ” எந்த டாக்டரை பார்த்தே? ”

    ” வெறும் காய்ச்சல்தான் ஸார். பாரசிட்டமால் எடுத்துகிட்டெஎன். சரியாய்டுச்சு. ”

    ” உன்னோட உடமைகள் என் கிட்டே இருக்கு. ஒப்படைக்கத்தான் கூப்பிட்டேன். ”

    மேஜை டிராயரை திறந்து அதை எடுத்துப் போட்டார்.

    திடுக்கிட்டான் கிருபா.

    நேற்று முன் தினம் மயானத்திலேயே போட்டு விட்டு வந்த ஜோல்னா பை. சுத்தியல்.

    ” அன்னிக்கு ரவுண்ட்ஸ் போலாம்ன்னு ரூமை விட்டு வெளியே வந்தேன். ட்ரெயினேஜ் பைப் வழியே வெளியே போற உன்னை பார்த்தேன். அந்த ராத்திரி வேளையில் எங்கே போறேன்னு உன்னை பாலோ பண்ணினேன். மயானத்து மொட்டை மரத்தில் ஆணி அடிச்சிட்டிருந்தே. என்னை பார்த்ததும் தலை தெறிக்க ஹாஸ்டலுக்கு ஓடி வந்துட்டே. உனக்கு என்ன ஆச்சு? இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”

    வார்டன் சொல்லச் சொல்ல திகைப்பானான். 

    கூடவே அந்த விஷயம் அப்போதுதான் அவன் மனசில் உறைத்தது,

    வார்டனின் பெயரும் – வில்லியம்தான்.


     
  • சத்யராஜ்குமார் 5:26 am on March 16, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    ட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும். 

    ட்விட்டர்  என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று. 

    அந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும்? அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய் இருந்தேன்.

    இருப்பினும் உமேஷின் பதிவுகளை படிக்கச் செல்லும்போதெல்லாம் ட்விட்டர் என் கவனம் பெறும். வலைப்பதிவு ஒரு Open Diary என்பது போல் ட்விட்டர் ஒரு Open SMS என்ற நுட்பம் விளங்கியது. 

    அதில் ஒரு கணக்கு திறந்தேன். ஆனாலும் What are you doing now? என்ற ட்விட்டரின் கேள்விக்கு பதில் அளிக்கத் தோன்றாமல் எதுவும் பதியாமலே இருந்தேன்.  வலைப்பதிவை எடுத்த எடுப்பில் நான் சிறுகதை எழுத பயன்படுத்தியது போல இதையும் வேறு எதற்காவது பயன்படுத்தலாம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது.  ட்விட்டர் பக்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் திருக்குறள்தான் நினைவுக்கு வந்தபடி இருந்தது. சரி மூன்று வரிகளில் சிறுகவிதை எழுதினால் உசிதமாயிருக்கும் என்று முடிவு செய்தேன். 

    இந்த சமயத்தில் ட்விட்டர் API புகழ் பெற்று அதைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் விரிவடைந்திருந்ததால் வரிகள்  என்றொரு வேர்ட் ப்ரஸ் தளம் உருவாக்கி மென்பொருள் துறை குறித்த மூன்று வரி கவிதைகள் சில எழுதி பதிவிட்டேன். இங்கே நான் பதியும் ஒவ்வொரு சிறுகவிதையையும் என் ட்விட்டர் கணக்கில் உடனே வெளியிடும் வேலையை TwitterFeed என்ற தளம் கவனித்துக்கொண்டது.

    இச்சமயம் ட்விட்டர் மரக் கிளைகளில் நம் வலைப்பதிவு நண்பர்கள் பலரும் அமர்ந்து கீச்சிட்டு வருவது தெரிந்தது.  பின்னூட்டப் பெட்டிகள் எப்படி Group Discussion கான்சப்ட்டை அபகரித்துக் கொண்டதோ அது போல ட்விட்டர் அரட்டைப் பெட்டிகளின் இடத்தை நிரப்பிக் கொண்டது. வலைப்பதிவு நண்பர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து பாருங்கள் தெரியும்.

    இன்று ட்விட்டரில் அரட்டை மட்டுமல்ல, பத்திரிகை தொ.கா ஊடகங்களை முந்திக்கொண்டு நடப்பு செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன.  http://search.twitter.com/-ல் #economy என்று தேடிப்பாருங்கள். கார்ப்பொரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கும், விளம்பரப்படுத்துதலுக்கும் இதைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அரசு துறைகள் பலவும் ட்விட்டர் மூலமாக பொது மக்களுக்கு உதவலாமா,  தகவல் அளிக்கலாமா என கூட்டம் கூடி விவாதித்து வருகின்றன.  இன்று கூகிளிங் போல ட்விட்டரிங் ஒரு வினைச்சொல் ஆகி விட்டது.

    இப்படி எல்லோரும் ட்விட்டரை சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்ததே எனக்கு ட்விட்டரை சிறுகதை எழுதவும் பயன்படுத்த இயலும் என்ற தைரியம் தந்தது. ஒரு சோதனை முயற்சியாக சிறுகதை ஒன்றை #சி என்ற ட்விட்டர் ஹேஷ் போட்டு எழுத ஆரம்பித்தேன். ட்விட்டரில் எழுதுவதால் என்ன நன்மை?

    • ஒன்றுமே எழுதாமல் இருப்பதை விட அவ்வப்போது ஓரிரு வரியாய் கோர்த்து நாளாவட்டத்தில் ஒரு on-the-go சிறுகதையை முழுதாக முடித்து விடலாம்.
    • சொற்சிக்கனம் சிறுகதையின் அடிப்படைத் தேவை. ட்விட்டரின் 140 எழுத்து கட்டுப்பாடு உங்கள் கதையின் வாக்கிய அமைப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இது ஒரு சவால் என்பது ட்விட்டரில் எழுதிப் பார்த்தால் தெரியும்.
    • ட்விட்டர் ஒரு ஜம்ப் ஸ்டார்ட்டர் மாதிரியும் பயன்படலாம்.

    அப்படித்தான் ஒன்பதிலிருந்து ஐந்து வரை என்ற கதையை ட்விட்டரில் ஆரம்பித்து பாதி எழுதிய பின், நோட்பேடில் மீதியை எழுதி முடித்தேன்.

    ட்விட்டரில் எழுதியது இங்கே [தலைகீழ் கால வரிசையில் படிக்கவும் :-)].

    முழுக் கதையும் இங்கே.

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி