ட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும்.


ட்விட்டர்  என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று. 

அந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும்? அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய் இருந்தேன்.

இருப்பினும் உமேஷின் பதிவுகளை படிக்கச் செல்லும்போதெல்லாம் ட்விட்டர் என் கவனம் பெறும். வலைப்பதிவு ஒரு Open Diary என்பது போல் ட்விட்டர் ஒரு Open SMS என்ற நுட்பம் விளங்கியது. 

அதில் ஒரு கணக்கு திறந்தேன். ஆனாலும் What are you doing now? என்ற ட்விட்டரின் கேள்விக்கு பதில் அளிக்கத் தோன்றாமல் எதுவும் பதியாமலே இருந்தேன்.  வலைப்பதிவை எடுத்த எடுப்பில் நான் சிறுகதை எழுத பயன்படுத்தியது போல இதையும் வேறு எதற்காவது பயன்படுத்தலாம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது.  ட்விட்டர் பக்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் திருக்குறள்தான் நினைவுக்கு வந்தபடி இருந்தது. சரி மூன்று வரிகளில் சிறுகவிதை எழுதினால் உசிதமாயிருக்கும் என்று முடிவு செய்தேன். 

இந்த சமயத்தில் ட்விட்டர் API புகழ் பெற்று அதைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் விரிவடைந்திருந்ததால் வரிகள்  என்றொரு வேர்ட் ப்ரஸ் தளம் உருவாக்கி மென்பொருள் துறை குறித்த மூன்று வரி கவிதைகள் சில எழுதி பதிவிட்டேன். இங்கே நான் பதியும் ஒவ்வொரு சிறுகவிதையையும் என் ட்விட்டர் கணக்கில் உடனே வெளியிடும் வேலையை TwitterFeed என்ற தளம் கவனித்துக்கொண்டது.

இச்சமயம் ட்விட்டர் மரக் கிளைகளில் நம் வலைப்பதிவு நண்பர்கள் பலரும் அமர்ந்து கீச்சிட்டு வருவது தெரிந்தது.  பின்னூட்டப் பெட்டிகள் எப்படி Group Discussion கான்சப்ட்டை அபகரித்துக் கொண்டதோ அது போல ட்விட்டர் அரட்டைப் பெட்டிகளின் இடத்தை நிரப்பிக் கொண்டது. வலைப்பதிவு நண்பர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து பாருங்கள் தெரியும்.

இன்று ட்விட்டரில் அரட்டை மட்டுமல்ல, பத்திரிகை தொ.கா ஊடகங்களை முந்திக்கொண்டு நடப்பு செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன.  http://search.twitter.com/-ல் #economy என்று தேடிப்பாருங்கள். கார்ப்பொரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கும், விளம்பரப்படுத்துதலுக்கும் இதைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அரசு துறைகள் பலவும் ட்விட்டர் மூலமாக பொது மக்களுக்கு உதவலாமா,  தகவல் அளிக்கலாமா என கூட்டம் கூடி விவாதித்து வருகின்றன.  இன்று கூகிளிங் போல ட்விட்டரிங் ஒரு வினைச்சொல் ஆகி விட்டது.

இப்படி எல்லோரும் ட்விட்டரை சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்ததே எனக்கு ட்விட்டரை சிறுகதை எழுதவும் பயன்படுத்த இயலும் என்ற தைரியம் தந்தது. ஒரு சோதனை முயற்சியாக சிறுகதை ஒன்றை #சி என்ற ட்விட்டர் ஹேஷ் போட்டு எழுத ஆரம்பித்தேன். ட்விட்டரில் எழுதுவதால் என்ன நன்மை?

  • ஒன்றுமே எழுதாமல் இருப்பதை விட அவ்வப்போது ஓரிரு வரியாய் கோர்த்து நாளாவட்டத்தில் ஒரு on-the-go சிறுகதையை முழுதாக முடித்து விடலாம்.
  • சொற்சிக்கனம் சிறுகதையின் அடிப்படைத் தேவை. ட்விட்டரின் 140 எழுத்து கட்டுப்பாடு உங்கள் கதையின் வாக்கிய அமைப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இது ஒரு சவால் என்பது ட்விட்டரில் எழுதிப் பார்த்தால் தெரியும்.
  • ட்விட்டர் ஒரு ஜம்ப் ஸ்டார்ட்டர் மாதிரியும் பயன்படலாம்.

அப்படித்தான் ஒன்பதிலிருந்து ஐந்து வரை என்ற கதையை ட்விட்டரில் ஆரம்பித்து பாதி எழுதிய பின், நோட்பேடில் மீதியை எழுதி முடித்தேன்.

ட்விட்டரில் எழுதியது இங்கே [தலைகீழ் கால வரிசையில் படிக்கவும் :-)].

முழுக் கதையும் இங்கே.