ஒளி வட்டம்


சுஜாதா இருந்திருந்தால் இந்த வார கற்றதும் பெற்றதும்-ல் இதைப் பற்றி ஒரு பத்தி நிச்சயம் எழுதியிருப்பார்.

இனி எங்கே சென்றாலும் உங்களை சுற்றி ஒரு ஒளி வட்டம் சுழலும் சாத்தியம் இருக்கிறது. ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ’ என்று ஒரு அந்தரங்க இணையக் குமிழி உங்களை சுற்றிச் சுற்றி வரும். Wi-Fi Network இனிமேல் பழசு. Mi-Fi என்னும் இந்த Personal Network புதுசு. விசிட்டிங் அட்டை சைசில் இருக்கும் ஸ்மார்ட் கார்ட் செய்யும் மாயம் இது.

Mi-Fi Card

Mi-Fi Card

இந்த ஸ்மார்ட் கார்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அது 3G அலைவரிசை வழியே இணைய இணைப்பு பெற்று உங்களைச் சுற்றி முப்பது அடி வட்டத்துக்குள் வலுவுடன் ஒரு Wi-Fi Network உருவாக்கித் தருகிறது. ஹாட் ஸ்பாட் தேடி காபிக் கடை காபிக் கடையாய் அலைய வேண்டியதில்லை. நீங்கள் அனுமதித்தால் இந்த இணைய வட்டத்துக்குள் இன்னும் ஐந்து பேர் இணைந்து தளங்களில் உலாவலாம். அல்லது உங்கள் லாப் டாப், ஐ-பாட், ஐ-போன் என்று ஐந்து கருவிகள் வரைக்கும் இணைத்துக் கொள்ளலாம்.

அடுத்து இந்த ஸ்மார்ட் அட்டையை ஒரு சில்லு அளவுக்கு சிறிதாக்கி உங்கள் தோலுக்கடியில் வைத்து தைத்து விடுவதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். (என்று நான் சரடு திரித்தால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்)