ஆதிமூலம்


பூச்சி புழுக்கள் தோன்றி, பிறகு நானும் நீங்களுமாக ஆனதற்குக் காரணம் DNA இல்லையாம். DNA-வின் ஒன்று விட்ட அண்ணன் RNA என்று ஒரு ஆங்கிலேய ரசாயனக்காரர் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார்.

குளம் குட்டை ஓரமாய் ஒரு வெம்மையான மாலைப்பொழுதில் சூரியனின் புற ஊதா கதிர்களோடு நிகழ்ந்த ரசாயன மாற்றத்தில் முதல் முதலாய் ஒரு RNA எப்படி தோன்றியிருக்கும் என சோதனைக் குடுவையில் செய்து காட்டியிருக்கிறார்.

DNA நிரவகிக்கும் பரம்பரை தகவல்களை ஆதி காலத்தில் RNAதான் கையாண்டிரு்க்கும் என்பது இவர் வாதம்.

DNA, RNA இதெல்லாம் என்னண்ணே என்று கேட்டால் செல்களை ஆக்கவும் அழிக்கவுமான ஜெனட்டிக் சங்கதிகளை DNA சேமித்து வைத்திருக்கிறதாம். தபால்காரர் கணக்காக அந்தத் தகவல்களை எடுத்துக் கொண்டு போய் செல்களிடம் சேர்ப்பதோடன்றி சிக்கலான ஜெனட்டிக் சங்கேத தகவல்களை செல்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்துச் சொல்லும் வேலையையும் RNA பார்த்துக் கொள்கிறதாம்.

4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உயிர்கள் தோன்றிய போது பரம்பரை தகவல்களை சேமிப்பது, பரிமாறுவது என இரண்டு வேலையையும் RNA பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வேலைப்பளு தாங்காமல் DNA-விடம் பாதி வேலையைப் பிரித்துக் கொடுத்து விட்டதால் இத்தனை நாளாய் விஞ்ஞானிகள் டிராக் மாறி DNA-தான் உயிர்கள் தோன்றவும், பரிமாண விருத்திக்கும் காரணமாயிருக்கும் என்று தப்பாட்டம் ஆடி வந்திருக்கிறார்கள் என்கிறார் John D. Sutherland என்னும் இந்த ராசாயனவியலாளர்.

புரட்சிகரமான இந்த ஆய்வு முடிவை வெளியிட்டவர் எதற்கும் இருக்கட்டுமென, “இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் நிறைய இருக்கிறது. நான் சொன்ன அத்தனையுமே தப்பாகக் கூட இருக்கலாம்.” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டார். இதுதான் விஞ்ஞானிகள் டச்சா?