பேருந்துகளின் நிர்வாணம்


எப்படி கடல் அலையில் கால் நனைத்தால் உள்ளங்காலில் மணல் குறுகுறுப்பதை அனுபவித்தால்தான் உணர முடியுமோ, அப்படித்தான் டீஸல் மணமும், அதைக் கையில் நனைத்ததும் உள்ளங்கையின் உட்புறம் பூராவும் உண்டாகும் ஜிலுஜிலுப்பு இதயம் வரை பரவுவதையும் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

தொழில் நுட்ப பள்ளியில் பத்தாவது படிக்கும்போது சேரன் போக்குவரத்துக் கழகத்துக்குள் intern-ஆக நுழைந்தபோதுதான் மேற்படி அனுபவம். அதுகாறும் சாலையில் மட்டுமே பார்த்துப் பழகிய பிரம்மாண்ட அலுமினிய ஊர்திகள் தாறுமாறாய் டிப்போவுக்குள் நின்றிருக்கும் ஒழுங்கீனம் என் பார்வைக்கு அழகாய் தெரிந்தது.

Sangamam - Bus Contest

Sangamam - Bus Contest


முதல் முதலாக தன்னந்தனியனாய் நான் ஒருவனே ஹைட்ராலிக் ஜேக்கின் உதவியால் பஸ்ஸை தலைக்கு மேல் தூக்கி நிறுத்திய போது சஞ்சீவி மலையை ஒற்றை விரலில் தூக்கிய அனுமன் போலுணர்ந்தேன். அண்ணாந்து மேலே பார்த்த போது தரிசித்த பஸ்ஸின் நிர்வாணம் பிரமிப்பூட்டியது. ப்ரொப்பெல்லர் ஷாஃப்ட். கிராங்க் கேஸ். டிஸ்ட்ரிபூஷன் பாக்ஸ், Chassis சட்டங்கள் எல்லாவற்றிலும் கடல் நுரை போல் திட்டுத் திட்டாய்ப் படர்ந்திருந்த தடிமனான அழுக்கு. தொட்டுப் பார்த்தால் விரல் அளவுக்கு ஓட்டை விழும். பஸ்ஸுக்கு அடியில் 27 இடங்களில் துப்பாக்கியால் புசுக் புசுக்கென்று க்ரீஸ் அடிப்பது அங்கிருந்த மெக்கானிக்குகளுக்கு வேலை. எனக்கோ விளையாட்டு.

இரவு ஷிஃப்ட் என்றால் மேலும் உள்ளம் துள்ளும். ராத்திரி 11:30-க்கு கேண்ட்டீனில் இலவச சாப்பாடு. அதைத் தொடர்ந்து இருட்டுக்குள் இளைப்பாறும் பஸ்களுக்குள் பதுங்கி intern-கள் எல்லோருக்கும் அரட்டை அடிப்பதுதான் வேலை. பஸ் டிரைவர் ஒழுங்கான வேகத்தில் ஓட்டுகிறாரா என்று அறிய ஸ்பீடாமீட்டருக்குக் கீழே வட்டமாக ஒரு க்ராஃப் அட்டை பொருத்தியிருப்பார்கள். அதைக் கழற்றி பஸ்ஸுக்கு பஸ் மாற்றி வைக்கும் குறும்புத்தனம் நண்பன் விஸ்வகுமாரிடமிருந்து கற்றுக் கொண்டேன். நானும் அவனும் ராத்திரி ஒரு மணி வரை பஸ் பஸ்ஸாக ஏறி இறங்குவோம்.

பெரிய பச்சை கேட்டும், பரந்த ஷாப் ஃப்ளோரும், ‘சோதனைக்காக’ என்று போர்டு போட்ட பஸ்ஸில் லொட லொட என சகலமும் ஆட காலியாகப் பயணம் செய்வதும், மற்ற சமயங்களில் அடையாளம் தெரிந்து வாங்க தம்பி என்று இலவசமாய் கூட்டிச் செல்லும் ஓட்டுனர் நடத்துனர்களுமாய் சேர்ந்து இங்கேதான் வேலை பார்க்க வேண்டும் என்ற சங்கல்பம் அழுத்தமாய் மனசில் உருவானது.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற விவேகானந்தரின் வரிகள் பொய்யில்லை. டிப்ளமோ முடித்ததும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக மதிப்பெண்கள் அடிப்படையில் பைசா செலவில்லாமல் CTC வேலை கிடைத்தது. (வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜியார்!). விஸ்வகுமார், நான் உட்பட நாங்கள் பத்துப் பேர் பல்வேறு கிளைகளில் பணியில் அமர்த்தப்பட்டோம்.

இன்டெர்ன்ஷிப் வேறு, நிஜமான வேலை வேறு என்ற நிதர்சனம் எங்களில் பலருக்கு மெல்ல மெல்ல அப்போதுதான் புரிபட ஆரம்பித்தது. திட்டமிட்ட பராமரிப்புக்காக காத்திருக்கும் பஸ்கள் ஏராளம். ஷாப் ஃப்ளோரில் நிறுத்துமிடமோ குறைவு. தலை கீழாக நின்று வேலை வாங்கினாலும் பல பஸ்களை பராமரிப்பில்லாமலே பல நாள் சாலையில் ஓட்ட வேண்டிய கட்டாயம். இடையில் உடனடி கவனம் பெற வேண்டிய நடு வழியில் மூர்ச்சையடைந்த பேருந்துகள். லீவு கேட்டு வந்து நிற்கும் மெக்கானிக்குகள். ஏன் லீவு கொடுத்தாய் என்று சீறும் மேலதிகாரிகள். 15B ஏன் இன்னிக்கு லைன்ல போகலை? சரியாக பராமரிக்காத வண்டி விபத்தில் மாட்டிக் கொண்டால் கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்.

இத்தனை அழுத்தத்தை விஸ்வகுமாரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான் வேலைக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். விஸ்வகுமாரின் அப்பா சே.போ.க-வில் மெக்கானிக்காக வேலை பார்ப்பவர். பையன் அங்கேயே எஞ்சினீயராக வர வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்தவருக்கு அவனின் போக்கு பேரிடி. வீட்டில் தினமும் வாய்ப் போராட்டம். ஒரு துரதிர்ஷ்ட நாளில் இருவருக்குமான சண்டை முடிவுக்கு வந்தது.

விஸ்வகுமார் தூக்கில் தொங்கி விட்டான்.

நல்ல வேளை என்னை பிரான்ச்சில் போடவில்லை. தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவு அலுவலகம் ஒன்றிருக்கிறது. கிளைகள் எல்லாம் ஒழுங்காய் இயங்குகிறதா என அவ்வப்போது அதிரடி சோதனை நடத்துவதே இதன் வேலை. தவிர எஞ்சின், கியர்பாக்ஸ் போன்ற முக்கிய உறுப்புகளின் வாரண்ட்டி க்ளெயிம் நிர்வகிப்பது, எரிபொருள் சிக்கனத்தை கழக அளவில் அமல்படுத்துவது ஆகியவை இதர பணிகள். நானும், எனது பாஸும் ஸ்மோக் டிடெக்டருடன் ஒரு மெக்கானிக்கை கூட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாகப் போய் தற்போக்காக சில வாகனங்களில் புகை சோதனை நடத்துவோம்.

பாஸ் ரத்தினம் படு கண்டிப்பானவர். கார்பன் அளவு அதிகமாயிருந்தால் சம்பந்தப்பட்ட பிரான்ச் எஞ்சினியரையும், வண்டியில் வேலை பார்த்த மெக்கானிக்கையும் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சியெடுத்து விடுவார். மஞ்சள் காகிதம் எனப்படும் மெமோக்கள் பறக்கும். லீகல் செக்’ஷனில் விசாரணை நடக்கும். சம்பளக் குறைப்பு கூட நடக்கும். மொத்தத்தில் பலருக்கும் அவர் ஒரு சிம்ம சொப்பனம்.

திடீரென்று சாயந்தரம் இன்னிக்கு ராத்திரி பழனி போலாம் என்பார். எதிர்பாராமல் பழனி கிளைக்குள் நடு ராத்திரியில் நுழைவோம். பராமரிப்பு வேலைகள் எப்படி நடக்கிறதென சோதனை இடுவோம். ஒழுங்கீன மெக்கானிக்குகளை கையும் களவுமாய் பிடித்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேள்விகளால் புரட்டி எடுப்பார். எதிராளி மாட்டிக் கொண்டால் அவர் முகத்தில் ஒரு இன்பமான புன்னகை பரவுவதை நான் கவனித்திருக்கிறேன்.

அன்றைக்கு என் சொந்த ஊரான பொள்ளாச்சி பிரான்ச்சில் சோதனைக்கு போகலாம் என்று அவர் சொன்னதும், உற்சாகமாகக் கிளம்பினேன். ரத்தினத்திடம் தயங்கித் தயங்கி வீட்டுக்கு ஒரு எட்டு போய் வருகிறேன் என்று அனுமதி கேட்டேன். மனுஷன் சரி என்று தலையாட்டி விட்டார். வீட்டில் போய் டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்கு லேட் ஆகி விட்டது. ராத்திரி பத்து மணிக்கு பிரான்ச்சில் இருப்பதற்கு பதிலாக பதினோரு மணி ஆகி விட்டது. ரத்தினம் வாய்க்கு வந்தபடி எல்லார் முன்னாலும் என்னை கத்தப் போகிறார் என்ற பயத்தோடே பிரான்ச்சுக்குள் நுழைந்தேன்.

ஷாப் ப்ளோரில் கடும் பரபரப்பு கூச்சல். அதிரடி சோதனைக்காக நாங்கள் எப்போதும் கூட்டிச் செல்லும் மெக்கானிக் சந்திரன் பேயறைந்த மாதிரி நின்றிருக்கிறான். அவன் பஸ்ஸுக்கடியில் போய் சோதனை நடத்தும்போது ‘நச்’சென்று சத்தம் கேட்டிருக்கிறது. வெளியே தவழ்ந்து வந்து பார்த்தால் பாஸ் ரத்தினம் பஸ் சக்கரத்துக்கடியில் ரத்த வெள்ளத்துக்குள் பிணமாய்க் கிடக்கிறார். அவரால் ரொம்பவுமே கார்னர் செய்யப்பட்ட பணியாள் ஒருவன் ஜாக்கி லீவர் எனப்படும் இரும்புக் கழியால் அவர் பின்னந்தலையில் தாக்கி விட்டான்.

போக்குவரத்துக் கழக வட்டாரத்தில் நான் சந்தித்த இரண்டாவது மரண சம்பவம்.

இன்னும் சில துர் மரணங்கள் இருக்கின்றன. அவற்றை விவரிக்க இந்த ஒரு பதிவு போதாது. எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் மோசமான அனுபவங்களே! அந்தப் பணியில் தொடர விருப்பமில்லாமல் போனேன். கிடைத்த கவுரவமிக்க அரசு வேலையை ஒரு சுப யோக சுப தினத்தில் ராஜினாமா செய்து விட்டேன். கம்ப்யூட்டர் துறை நோக்கி நகர்ந்தேன்.

சுழலும் பெரிய பஸ் சக்கரங்கள் கண்ணில் படும்போது, அவைகளின் நடுவே – போக்குவரத்துக் கழகத்தில் என்னோடு பணியாற்றி அகால மரணமடைந்தவர்களின் முகங்கள் தெரிகின்றன.

[சங்கமம் போட்டிக்காக]