Updates from ஜூன், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சித்ரன் ரகுநாத் 8:50 pm on June 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  தப்பு 

  இன்று வாகன காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவதற்காகப் போனபோது அந்த அலுவலகத்தில் ஒரு மானேஜர் உட்பட 4 பெண் ஊழியர்கள். நிசப்தம் பூசிய குளிர்சாதன அறை. ஆளுக்கொரு கம்ப்யூட்டர். இன்னும் காலாவதியாகாத டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள். மூலையில் தேமே என்று ஒரு ஆண் ஊழியர். குப்பைத்தொட்டி. அதில் நிரம்பி வழிந்த காகிதக் குப்பைகள். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றதே என்ற ஆச்சரியத்துடன் ஒரு மேசையை அணுகினேன்.
  trash
  விவரங்கள் கேட்டுவிட்டு என்னை உட்காரச் சொல்லிவிட்டு மேற்படி கம்ப்யூட்டரில் என் காப்பீட்டுக் கணக்கு வழக்கை மேய ஆரம்பித்தார் ஒரு அம்மணி. அந்த அறைக்குள் ஒரு வாடிக்கையாளார் எதிரில் அமர்ந்திருக்கிறாரே என்கிற பாவனை எதுவுமற்று பிறகு சத்தமாய் உரையாடத் தொடங்கினார்கள். எல்லாமே ஆங்கிலத்தில்தான்.

  நடுவாந்திர மேசையில் கண்ணாடியணிந்த நடுத்தர வயது குண்டு பெண்மணி, தான் நேற்று “balanced diet” ப்ரோக்ராம் ஒன்றில் பங்கு கொண்டதை சத்தமாக அறிவித்தார். “பட்.. யு நோ.. அயம் அல்ரெடி ஃபால்லோயிங் தட் யா” என்றார்.

  “உண்மையாகவா? இன்னும் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓட்ஸ்தான் எடுத்துக் கொள்கிறாயா?” கம்யூட்டரில் என் விவரங்களைத் தட்டியபடி இந்தப் பெண்மணி.

  “பின்னே? என்னைப் பற்றி என்னவென்று நினைத்தாய்?” என்று கண்ணாடிக்குள்ளிருந்து விழி உருட்டிப் பார்த்தார் கு.பெண்மணி.

  கம்ப்யூட்டர் பெண்மணி திரையிலிருந்து பார்வையை விலக்கி மூன்று பேரைத்தாண்டி “ஸார்.. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் படித்திருக்கிறீர்களா?” என்றார் மூலையைப் பார்த்து.

  “சேத்தன் பகத்-தானே. படித்திருக்கிறேன்” என்று குரல் வந்தது.

  “ஓ நீங்கள் அப்டுடேட் ஸார்”.

  இன்னும் சில பல அரட்டைகள்.

  டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில், சர் சர் என்று காப்பீட்டுக் காகிதங்களை அச்சிட்டுக் கிழித்து, ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ”Balanced diet” பெண்மணியிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்து என்னிடம் பணம் பெற்று ரசீது கொடுத்து…

  எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. காகிதங்களை வாங்கி சரி பார்த்துவிட்டு சொன்னேன். “மேடம்… பேப்பர்ஸ்-ல வண்டி நம்பர் தப்பா என்ட்ரி பண்ணிருக்கீங்க..”

  கம்ப்யூட்டர் பெண்மணி லேசாய் அசடு வழிந்தது. விரயம்: மூன்று காகிதங்கள் + கார்பன் + டாட் மேட்ரிக்ஸ் ரிப்பன் + என்னுடைய மற்றும் அவரின் மேலும் பத்து நிமிடங்கள்.

  தப்பான காகிதங்களை டர்ரென்று கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் எப்படி இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றது என்கிற என் ஆச்சரியத்துக்கு பதில் கிடைத்துவிட்டது.

  கம்யூட்டரைக் கண்டு பிடித்தது மிகப் பெரிய தப்பு என்று நினைக்கிறேன்.

   
  • msathia 10:18 பிப on ஜூன் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சித்ரன்,
   உங்களுக்காவது ஒருநாளில் சிறிது நேரத்தில் வேலை முடிந்தது.
   எனக்கு 2 நாள் அலையவிட்டு கொடுத்தார்கள்.

   -msathia

   • சித்ரன் 12:04 முப on ஜூன் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    சத்யா! ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் ஒரு டெபிட்/ஏட்டியெம் கார்டு பெறுவதற்காக 5 தடவை லோ..லோ என்று அலைந்தேன். அதை வைத்து நாலு வலைப்பதிவு எழுதலாம்.

  • என். சொக்கன் 12:50 முப on ஜூன் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   எங்கள் ஏரியாவில் இருக்கும் வாகனக் காப்பீட்டு அலுவலகமும் அச்சு அசல் இதேமாதிரிதான் இருக்கும் (குப்பைத் தொட்டி உள்பட) – பெங்களூர் வந்து பார்த்தமாதிரி எழுதியிருக்கிறீர்கள் 🙂 பிரமாதம்!

   – என். சொக்கன்,
   பெங்களூர்.

  • kuppan_yahoo 1:45 முப on ஜூன் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Indian (Tamilnadu) software engineers all helped USA, Europe to cpmputerise the Insurance companies, Govt offices, Hospitals, PSU’s., and left out India.
   \
   Indian firms still have paper and file cultures.

  • சத்யராஜ்குமார் 6:30 முப on ஜூன் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சித்ரன், உங்கள் அனுபவத்தின் ஊடே ஒரு முக்கிய பிரச்சனையை சொல்லியிருக்கிறீர்கள்.

   @kuppan_yahoo, USA-லும் கம்ப்யூட்டரால் உண்டாகிற பேப்பர் குப்பைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கம்ப்யூட்டர் மரங்களைக் காக்கவில்லை.

  • SnapJudge 11:56 முப on ஜூன் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   ஹ்ம்ம்ம்!

  • சந்திர சேகரன் 5:30 முப on ஜூன் 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   thank god, you still had time to post this in spite of getting your time wasted. Be happy, for you at least had an option to vent…

   There are many such occasions I had faced, frustrating and irritating.

   But just to add, this is not with the female species… The same butter in a different pan is what you experience with the male species too – insurance, banks, telephones, RTO et al.

 • சத்யராஜ்குமார் 8:41 am on June 8, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மைய விலக்கு 


  ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

  ~ சத்யராஜ்குமார் ~

  பரிசுக்குரிய கதையாக தேர்வு செய்த உரையாடல் குழுவினருக்கு நன்றி.


  செல்போனை உடைக்கலாம் போல ஆத்திரம்.

   எதிர்முனையில் பேசியது நிஷா. கோபம் அவள் மேல் இல்லை. அந்த வயசான ஜன்மத்தின் மேலே. அதாவது அவன் அப்பா. இன்னும் கொஞ்சம் மரியாதையாய் குறிப்பிடலாம். ஆனால் கோபத்தில் மரியாதை எப்போதும் நேரெதிர் விகிதம்.

  “நிஷா, நீ இப்ப வீட்டில் கத்தி ரணகளம் பண்ணாதே. எதுவா இருந்தாலும் நான் வந்து பேசிக்கறேன்.”

  “அவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சிவா. குழந்தைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிருக்கார். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ் எனி மோர்.”

  “நான் மீட்டிங்கிலிருக்கேன். சாயந்தரம் அவர் கிட்டே பேசிக்கறேன். போனை வெக்கறியா?”

  நிஷா வைக்கப் போவதில்லை. போனில் இன்னும் பேச்சுக் குரல். இணைப்பைத் துண்டித்து, ஸ்விட்சையும் அழுத்தியதில் மொத்தமாய் அடங்கியது போன். எதிரே இருந்த வெள்ளைக்காரர்கள் சிவந்து போன அவன் முகம் பார்த்து, “எனிதிங் ராங் ஷீவா?” என்றார்கள்.

  பாட்டில் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து ஆசுவாசப்படுத்தியபடி தலையாட்டினான். “நோ, நோ. லெட்ஸ் கோ அஹெட்.” அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங் அறையில் அந்த அமெரிக்கர்கள் பேசியது மண்டைக்குள் ஏறவில்லை. அப்பாவின் முகம் கிட்டத்தில், தூரத்தில் என்று கண் முன்னே ஆடியது.

  ‘அமெரிக்கா வேண்டாம்டா சிவா. எல்லாருமே மெட்ராஸ் போயிரலாம்.’

  எட்டாவது மாடியிலிருந்து சரசரவென கீழிறங்கியது கார். ஸ்டாப் பலகையை மதிக்காமல் போய் வெள்ளைக்காரியிடம் ஹாரனில் திட்டு வாங்கிய பின், நெடுஞ்சாலை. ரியர் வ்யூ கண்ணாடி எதிலும் கண்ணுக்கெட்டிய வரை போலிஸ் தெரியாததால் சரக்கென்று எண்பது மைல். ரேடியோ அலைவரிசையில் அவன் காரை உணர்ந்து மேலேறியது கராஜ் கதவு.

  யுத்தம் முடிந்த பூமி போல் வீட்டுக்குள் பயங்கர நிசப்தம். விடியோ கேம் இசை, கார்ட்டூன் அலறல் என்று எப்போதும் களேபரமாய் இருக்கும் குழந்தைகளின் அறை கூட மவுனப்படம் போலிருந்தது. ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

  “அம்மா எங்கடா?”

  பெரியவனைக் கேட்டதும், சின்னப் பெண்ணிடமிருந்து பதில் வந்தது. “மேலே மாஸ்டர் பெட்ரூமில் படுத்திருக்கா.”

  “கோபமாயிருக்கா.” – என்றான் பெரியவன் பிற்சேர்க்கையாய்.

  “தாத்தா?”

  “பூஜை ரூம்ல.”

  மவுஸை அசைத்து ஸ்க்ரீன் ஸேவர் ஓடிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை தட்டியெழுப்பினான். இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

  பூஜை அறை கதவைத் தள்ளி, “அப்பா. நீங்க சாமி கும்பிட்டது போதும். கொஞ்சம் என் கூட வாங்க.”

  பார்க்கில் கறுப்பு, பழுப்பு, சிவப்பு என்று கலர் கலராய் குழந்தைகள். நாய்க்குட்டியோடு வாக்கிங் போகும் வெள்ளைக்கார பெண்கள். ஒரு மர பெஞ்ச்சை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான் சிவா. கிரிதரன் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்ததும், “மறுபடி ஆரம்பிச்சிட்டிங்களாப்பா? இந்தியாவில் கார்ல ஸீட் பெல்ட் கூட போட வேண்டியதில்லை. சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா வீட்டுக்குள் அடைஞ்சிருக்கத் தேவையில்லை. தெருவில் விளையாடலாம். இது மாதிரி இன்னும் என்னென்னமோ சொல்லி குழந்தைகளை தூண்டி விட்டிங்களா?”

  “நிஜத்தைத்தாண்டா சொன்னேன்.”

  “அப்பா, நீங்க அவங்களை டிமாரலைஸ் பண்றிங்க. இங்க குழந்தைங்க அவங்களா மனசு வெச்சுப் படிச்சாத்தான் உண்டு. நானும் நிஷாவும் ரொம்ப பாடுபட்டு அவங்களை போக்கஸ்டா கொண்டு போய்ட்டிருக்கோம். இப்படி வேண்டாததை நீங்க பேசினா வீட்ல பிரச்சனை ஜாஸ்தியாகும்.”

  “நீயும், நிஷாவும் அங்க படிச்சித்தானே இங்க வந்திருக்கிங்க? ப்ரீ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா ஒரு டாக்டர் அல்லது என்ஜினியராக்கி வெளியே தள்ளிடுவாங்க. நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.”

  “எனக்குக் கோபம் வரதுக்குள்ள இந்த பல்லவியை விட்டுருங்க. எங்களுக்கு இங்கதான் வேலை. இங்கதான் இருந்தாகணும்.”

  “என்ன பெரிய வேலை. இந்த வெள்ளைக்காரன் கம்பெனியைப் பத்தி எனக்குத் தெரியாதா? எந்த நிமிஷம் வேணா சீட்டைக் கிழிச்சு ஃபயர் பண்ணுவான். கடைசி வீட்டு சர்தார்ஜி இல்லே… அவனுக்கு வேலை போயிருச்சு. கடனில் வாங்கின வீட்டுக்கு மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு மொத்தமா ஊருக்குத் திரும்பிப் போறான்.”

  சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. அடக்கிக் கொண்டு பொறுமையாய் சொன்னான். “எங்க வேலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அம்மாவும் போயாச்சு. சும்மா முரண்டு பிடிக்காம ரிட்டயர்ட் வாழ்க்கையை நிம்மதியா இங்க பார்க், லைப்ரரின்னு கழிங்க. மெட்ராஸ் வீட்டை விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”

  “முடியாது.”

  “முடியாதுன்னா இப்படி வீடு போர்க்களமா இருப்பது எனக்கும் பிடிக்காது. நீங்க மட்டும் ஊருக்குப் போக வேண்டியதுதான். கடைசி காலத்தில் பையன் கவனிக்கலைன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதிங்க.”

  “டேய் சிவா…” கிரிதரன் கலங்கின கண்களோடு அவனைப் பார்த்தார். உடைந்து போன குரலில் மெல்லமாய் சொன்னார். “சரி எனக்கு டிக்கட் போட்டுருடா. இந்த லைஃப் ஸ்டைல் ஒத்து வராது. தினமும் காலைல நடேசன் பார்க் போய் ஃப்ரெண்சோட அரசியல் பேசணும். ரோட்டோர கடையில் டீ குடிக்கணும். திண்ணையில் உக்காந்து ஹிண்டு பேப்பர் படிக்கணும். கல்யாணம், காதுகுத்துக்குப் போகணும். நிறைய மனுஷங்க வேணும். நாப்பது அம்பது வருஷமா வாழ்ந்து பழகின வாழ்க்கையை சட்னு என்னால விட முடியாது..”

  “போயிடுங்க. பசங்க எதிர்காலத்தைப் பத்தி உங்களுக்கு அக்கறையில்லை. கல்யாணமும், காதுகுத்தும்தான் முக்கியம். அங்கயே போயிடுங்க.”

  சிவாவுடைய மனதின் ஆழத்தில் இருந்த மிக மெல்லிசான குற்ற உணர்ச்சி கூட நிஷாவுக்கு இருக்கவில்லை. “அவரால நமக்கு தொல்லைதான் அதிகம். பிள்ளைங்க கெட்டுப் போயிருவாங்க. டிராவல் ஏஜன்ட்கிட்ட இன்னிக்கே பேசிடறேன்.” என்றாள்.

  அந்த வாரக் கடைசியில் ஏர்போர்ட். பேரக் குழந்தைகளை வாஞ்சையாய் அணைத்து தலையில் முத்தமிட்டார். இது கடைசி முத்தமா, இன்னும் பாக்கி இருக்கிறதா?

  மெட்ராஸ் வெய்யிலும், இரைச்சலும், வியர்வை நாற்றமும் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. ஜெட் லேக் சரியானதும், தகர உடம்பு லொட லொடவென நடுங்க, மண் புழுதி கிளப்பிக் கொண்டு செல்லும் தனியார் பஸ்சில் கொங்கலபட்டி போனார் கிரிதரன். வயல்வெளிக்கு நடுவே தாழ்வான ஓட்டு வீடு.

  சுருக்கங்களே முகமாய்ப் போன எண்பது வயதுக் கிழவி, இடுங்கிய கண்களால் அவரை உற்றுப் பார்த்து, “கிரிதரா…” என்றது.

  பிளாஸ்டிக் மாலையுடன் சுவரில் மாட்டியிருந்த கறுப்பு வெள்ளை படத்துக்கு முன்னே போய் நின்றார். கண்ணில் கரகரவென்று கண்ணீர். “அப்பா, உங்க மனசைப் புரிஞ்சிக்க எனக்கு முப்பத்தஞ்சு வருஷமாச்சு.”

  oo00oo

   
 • சத்யராஜ்குமார் 7:41 pm on June 7, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  நயாகரா 

  நயாகரா நமக்கு இன்னொரு காசி ராமேஸ்வரமாகி விட்டது. எங்கே திரும்பினாலும் இந்திய முகங்கள். இந்த முறை அத்தையை கூட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. இப்போது நான் இருக்கும் இடத்திலிருந்து காரில் செல்ல எட்டு மணி நேரம். விமானமா, காரா என வீட்டுக்குள் சொல்லரங்கம் நடந்து கார் என்று முடிவானது. கொஞ்சம் டிட்டிபாசனா மட்டும் தெரிந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இங்கே சுலபமாய் கார் ஓட்டலாம்.
  Niagara Falls
  பல முறை போய் வந்து விட்ட படியால் அங்கே செய்யத்தக்கவை, தகாதவை எல்லாம் எனக்கு மனப்பாடமாகி விட்டது. எத்தனை முறை சென்று பார்த்தாலும் Maid of the Mist படகுப் பயணம் பரவசமூட்டும் தெய்வீக அனுபவம். கோகெயின் போன்ற போதை வஸ்துக்கள் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் இப்படித்தான் சோவென்ற இரைச்சலுடன் மசமசவென நாலாபுறமும் தண்ணீர் புகை மாதிரி சூழ, அங்கங்கே வானவில் பளிச்சிட்டுக் கொண்டு சொர்க்கம் மாதிரி இருக்கும் என்பது அனுமானம்.

  நயாகராவுக்கு பக்கத்து ஊரான Buffalo என்னும் ஊரில் லாட்ஜ் எடுத்தால் விலை மலிவாக இருக்கும் என்று யாராவது அறிவுரை சொன்னால் வாயை துடைத்த நாப்கினோடு சேர்த்து இதையும் தொட்டியில் போட்டு விடுங்கள். நயாகரா உள்ளூருக்குள் Buffalo Avenue-வை ஒட்டி பல ஹோட்டல்கள் உள்ளன. முப்பதோ, நாப்பதோ கூட போனாலும் அங்கே அறை எடுப்பது உத்தமம். அருவி இருக்கும் இடத்துக்கு நடந்து போகலாம்.

  குறிப்பிட்ட நாள் இரவுகளில் அருவிக்கு மேலே வாணவேடிக்கை நிகழ்ச்சியும், விளக்கொளி நிகழ்ச்சிகளும் இருக்கும். இருட்டினதும் ஆரம்பிக்கும் (வெயில் காலத்தில் இங்கே இருட்டுவதற்கு ராத்திரி ஒன்பது மணியாகும்) இந்த நிகழ்ச்சிகள் சும்மா பத்துப் பதினைந்து நிமிஷம்தான் எனினும் நம்ம ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும். ஆக நிகழ்ச்சி நடக்கும் நாட்களை இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு சாயந்தரம் போல இங்கே அறை எடுத்தால், அன்றைய மாலை சின்ன வாக்கிங் போய் ஒரு நயாகரா ட்ரெயிலர் காட்டி விட்டு வரலாம்.

  நயாகரா வெல்கம் சென்ட்டர் என்று ஒரு பெரிய கட்டிடம் போனவுடன் கண்ணில் படும். உள்ளே விசாரணை கவுன்ட்டரில் நீங்கள் என்ன கேட்டாலும் சினேகமாய் பதில் சொல்லும் வரவேற்பாளர்கள் $60 மதிப்புள்ள டூர் பேக்கேஜ் டிக்கட்டை உங்கள் தலையில் கட்டி விட நிறைய வாய்ப்புண்டு. அவர்களை அலட்சியம் செய்து, கொஞ்சம் பூங்காவுக்குள் நடந்து சென்றால் அபிஷியல் விசிட்டர் சென்ட்டர் பார்க்கலாம். சின்ன ட்ராம் வண்டியில் ஆறு முக்கிய இடங்களை சுற்றிக் காட்ட $30-க்கு அங்கே டிக்கட் கிடைக்கும்.
  Cave of the Winds

  என்னைக் கேட்டால் அங்கே முக்கிய சங்கதிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று Maid of the Mist. இன்னொன்று Cave of the Winds. முன்னது கமல். பின்னது அதிரடி ரஜினி. இருநூறடி உயரத்திலிருந்து விழும் அந்த காட்டாற்று அருவியில் கிட்டத்தட்ட நீங்கள் குளிக்கலாம். இருதய பலஹீனமானவர்களும், மூச்சுத்திணறல் உபாதை உள்ளவர்களும் இந்த காற்று குகை பகுதிக்கு வர வேண்டாம் என்று கொட்டை கொட்டையாய் சிவப்பு எழுத்து எச்சரிக்கை பலகைகள் நிறைய பார்க்கலாம். இந்த முறை நான் போன போது, மூர்ச்சையடைந்த நம்ம ஊர் பெரியவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

  அமெரிக்கா வந்த பின் அடர்ந்த காடுகளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போவதுண்டு. நான் வசிக்குமிடம் வருடத்தில் பாதி நாள் குளிர் பிரதேசம் என்பதால், ஒரு தடவை கூட பாம்பை கண்ணில் பார்த்ததில்லை. முதல் தடவையாக Cave of the Winds ஸ்தலத்தில், செடி கொடிகளுக்கிடையில் நிம்மதியாய் படுத்திருந்த ஒரு பாம்பை பார்த்தேன்.

  அது படம் எடுக்கவில்லை. அதை நான் எடுத்த படம் கீழே.

  Snake

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி