நயாகரா


நயாகரா நமக்கு இன்னொரு காசி ராமேஸ்வரமாகி விட்டது. எங்கே திரும்பினாலும் இந்திய முகங்கள். இந்த முறை அத்தையை கூட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. இப்போது நான் இருக்கும் இடத்திலிருந்து காரில் செல்ல எட்டு மணி நேரம். விமானமா, காரா என வீட்டுக்குள் சொல்லரங்கம் நடந்து கார் என்று முடிவானது. கொஞ்சம் டிட்டிபாசனா மட்டும் தெரிந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இங்கே சுலபமாய் கார் ஓட்டலாம்.
Niagara Falls
பல முறை போய் வந்து விட்ட படியால் அங்கே செய்யத்தக்கவை, தகாதவை எல்லாம் எனக்கு மனப்பாடமாகி விட்டது. எத்தனை முறை சென்று பார்த்தாலும் Maid of the Mist படகுப் பயணம் பரவசமூட்டும் தெய்வீக அனுபவம். கோகெயின் போன்ற போதை வஸ்துக்கள் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் இப்படித்தான் சோவென்ற இரைச்சலுடன் மசமசவென நாலாபுறமும் தண்ணீர் புகை மாதிரி சூழ, அங்கங்கே வானவில் பளிச்சிட்டுக் கொண்டு சொர்க்கம் மாதிரி இருக்கும் என்பது அனுமானம்.

நயாகராவுக்கு பக்கத்து ஊரான Buffalo என்னும் ஊரில் லாட்ஜ் எடுத்தால் விலை மலிவாக இருக்கும் என்று யாராவது அறிவுரை சொன்னால் வாயை துடைத்த நாப்கினோடு சேர்த்து இதையும் தொட்டியில் போட்டு விடுங்கள். நயாகரா உள்ளூருக்குள் Buffalo Avenue-வை ஒட்டி பல ஹோட்டல்கள் உள்ளன. முப்பதோ, நாப்பதோ கூட போனாலும் அங்கே அறை எடுப்பது உத்தமம். அருவி இருக்கும் இடத்துக்கு நடந்து போகலாம்.

குறிப்பிட்ட நாள் இரவுகளில் அருவிக்கு மேலே வாணவேடிக்கை நிகழ்ச்சியும், விளக்கொளி நிகழ்ச்சிகளும் இருக்கும். இருட்டினதும் ஆரம்பிக்கும் (வெயில் காலத்தில் இங்கே இருட்டுவதற்கு ராத்திரி ஒன்பது மணியாகும்) இந்த நிகழ்ச்சிகள் சும்மா பத்துப் பதினைந்து நிமிஷம்தான் எனினும் நம்ம ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும். ஆக நிகழ்ச்சி நடக்கும் நாட்களை இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு சாயந்தரம் போல இங்கே அறை எடுத்தால், அன்றைய மாலை சின்ன வாக்கிங் போய் ஒரு நயாகரா ட்ரெயிலர் காட்டி விட்டு வரலாம்.

நயாகரா வெல்கம் சென்ட்டர் என்று ஒரு பெரிய கட்டிடம் போனவுடன் கண்ணில் படும். உள்ளே விசாரணை கவுன்ட்டரில் நீங்கள் என்ன கேட்டாலும் சினேகமாய் பதில் சொல்லும் வரவேற்பாளர்கள் $60 மதிப்புள்ள டூர் பேக்கேஜ் டிக்கட்டை உங்கள் தலையில் கட்டி விட நிறைய வாய்ப்புண்டு. அவர்களை அலட்சியம் செய்து, கொஞ்சம் பூங்காவுக்குள் நடந்து சென்றால் அபிஷியல் விசிட்டர் சென்ட்டர் பார்க்கலாம். சின்ன ட்ராம் வண்டியில் ஆறு முக்கிய இடங்களை சுற்றிக் காட்ட $30-க்கு அங்கே டிக்கட் கிடைக்கும்.
Cave of the Winds

என்னைக் கேட்டால் அங்கே முக்கிய சங்கதிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று Maid of the Mist. இன்னொன்று Cave of the Winds. முன்னது கமல். பின்னது அதிரடி ரஜினி. இருநூறடி உயரத்திலிருந்து விழும் அந்த காட்டாற்று அருவியில் கிட்டத்தட்ட நீங்கள் குளிக்கலாம். இருதய பலஹீனமானவர்களும், மூச்சுத்திணறல் உபாதை உள்ளவர்களும் இந்த காற்று குகை பகுதிக்கு வர வேண்டாம் என்று கொட்டை கொட்டையாய் சிவப்பு எழுத்து எச்சரிக்கை பலகைகள் நிறைய பார்க்கலாம். இந்த முறை நான் போன போது, மூர்ச்சையடைந்த நம்ம ஊர் பெரியவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

அமெரிக்கா வந்த பின் அடர்ந்த காடுகளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போவதுண்டு. நான் வசிக்குமிடம் வருடத்தில் பாதி நாள் குளிர் பிரதேசம் என்பதால், ஒரு தடவை கூட பாம்பை கண்ணில் பார்த்ததில்லை. முதல் தடவையாக Cave of the Winds ஸ்தலத்தில், செடி கொடிகளுக்கிடையில் நிம்மதியாய் படுத்திருந்த ஒரு பாம்பை பார்த்தேன்.

அது படம் எடுக்கவில்லை. அதை நான் எடுத்த படம் கீழே.

Snake