மைய விலக்கு‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

~ சத்யராஜ்குமார் ~

பரிசுக்குரிய கதையாக தேர்வு செய்த உரையாடல் குழுவினருக்கு நன்றி.


செல்போனை உடைக்கலாம் போல ஆத்திரம்.

 எதிர்முனையில் பேசியது நிஷா. கோபம் அவள் மேல் இல்லை. அந்த வயசான ஜன்மத்தின் மேலே. அதாவது அவன் அப்பா. இன்னும் கொஞ்சம் மரியாதையாய் குறிப்பிடலாம். ஆனால் கோபத்தில் மரியாதை எப்போதும் நேரெதிர் விகிதம்.

“நிஷா, நீ இப்ப வீட்டில் கத்தி ரணகளம் பண்ணாதே. எதுவா இருந்தாலும் நான் வந்து பேசிக்கறேன்.”

“அவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சிவா. குழந்தைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிருக்கார். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ் எனி மோர்.”

“நான் மீட்டிங்கிலிருக்கேன். சாயந்தரம் அவர் கிட்டே பேசிக்கறேன். போனை வெக்கறியா?”

நிஷா வைக்கப் போவதில்லை. போனில் இன்னும் பேச்சுக் குரல். இணைப்பைத் துண்டித்து, ஸ்விட்சையும் அழுத்தியதில் மொத்தமாய் அடங்கியது போன். எதிரே இருந்த வெள்ளைக்காரர்கள் சிவந்து போன அவன் முகம் பார்த்து, “எனிதிங் ராங் ஷீவா?” என்றார்கள்.

பாட்டில் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து ஆசுவாசப்படுத்தியபடி தலையாட்டினான். “நோ, நோ. லெட்ஸ் கோ அஹெட்.” அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங் அறையில் அந்த அமெரிக்கர்கள் பேசியது மண்டைக்குள் ஏறவில்லை. அப்பாவின் முகம் கிட்டத்தில், தூரத்தில் என்று கண் முன்னே ஆடியது.

‘அமெரிக்கா வேண்டாம்டா சிவா. எல்லாருமே மெட்ராஸ் போயிரலாம்.’

எட்டாவது மாடியிலிருந்து சரசரவென கீழிறங்கியது கார். ஸ்டாப் பலகையை மதிக்காமல் போய் வெள்ளைக்காரியிடம் ஹாரனில் திட்டு வாங்கிய பின், நெடுஞ்சாலை. ரியர் வ்யூ கண்ணாடி எதிலும் கண்ணுக்கெட்டிய வரை போலிஸ் தெரியாததால் சரக்கென்று எண்பது மைல். ரேடியோ அலைவரிசையில் அவன் காரை உணர்ந்து மேலேறியது கராஜ் கதவு.

யுத்தம் முடிந்த பூமி போல் வீட்டுக்குள் பயங்கர நிசப்தம். விடியோ கேம் இசை, கார்ட்டூன் அலறல் என்று எப்போதும் களேபரமாய் இருக்கும் குழந்தைகளின் அறை கூட மவுனப்படம் போலிருந்தது. ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

“அம்மா எங்கடா?”

பெரியவனைக் கேட்டதும், சின்னப் பெண்ணிடமிருந்து பதில் வந்தது. “மேலே மாஸ்டர் பெட்ரூமில் படுத்திருக்கா.”

“கோபமாயிருக்கா.” – என்றான் பெரியவன் பிற்சேர்க்கையாய்.

“தாத்தா?”

“பூஜை ரூம்ல.”

மவுஸை அசைத்து ஸ்க்ரீன் ஸேவர் ஓடிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை தட்டியெழுப்பினான். இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

பூஜை அறை கதவைத் தள்ளி, “அப்பா. நீங்க சாமி கும்பிட்டது போதும். கொஞ்சம் என் கூட வாங்க.”

பார்க்கில் கறுப்பு, பழுப்பு, சிவப்பு என்று கலர் கலராய் குழந்தைகள். நாய்க்குட்டியோடு வாக்கிங் போகும் வெள்ளைக்கார பெண்கள். ஒரு மர பெஞ்ச்சை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான் சிவா. கிரிதரன் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்ததும், “மறுபடி ஆரம்பிச்சிட்டிங்களாப்பா? இந்தியாவில் கார்ல ஸீட் பெல்ட் கூட போட வேண்டியதில்லை. சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா வீட்டுக்குள் அடைஞ்சிருக்கத் தேவையில்லை. தெருவில் விளையாடலாம். இது மாதிரி இன்னும் என்னென்னமோ சொல்லி குழந்தைகளை தூண்டி விட்டிங்களா?”

“நிஜத்தைத்தாண்டா சொன்னேன்.”

“அப்பா, நீங்க அவங்களை டிமாரலைஸ் பண்றிங்க. இங்க குழந்தைங்க அவங்களா மனசு வெச்சுப் படிச்சாத்தான் உண்டு. நானும் நிஷாவும் ரொம்ப பாடுபட்டு அவங்களை போக்கஸ்டா கொண்டு போய்ட்டிருக்கோம். இப்படி வேண்டாததை நீங்க பேசினா வீட்ல பிரச்சனை ஜாஸ்தியாகும்.”

“நீயும், நிஷாவும் அங்க படிச்சித்தானே இங்க வந்திருக்கிங்க? ப்ரீ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா ஒரு டாக்டர் அல்லது என்ஜினியராக்கி வெளியே தள்ளிடுவாங்க. நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.”

“எனக்குக் கோபம் வரதுக்குள்ள இந்த பல்லவியை விட்டுருங்க. எங்களுக்கு இங்கதான் வேலை. இங்கதான் இருந்தாகணும்.”

“என்ன பெரிய வேலை. இந்த வெள்ளைக்காரன் கம்பெனியைப் பத்தி எனக்குத் தெரியாதா? எந்த நிமிஷம் வேணா சீட்டைக் கிழிச்சு ஃபயர் பண்ணுவான். கடைசி வீட்டு சர்தார்ஜி இல்லே… அவனுக்கு வேலை போயிருச்சு. கடனில் வாங்கின வீட்டுக்கு மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு மொத்தமா ஊருக்குத் திரும்பிப் போறான்.”

சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. அடக்கிக் கொண்டு பொறுமையாய் சொன்னான். “எங்க வேலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அம்மாவும் போயாச்சு. சும்மா முரண்டு பிடிக்காம ரிட்டயர்ட் வாழ்க்கையை நிம்மதியா இங்க பார்க், லைப்ரரின்னு கழிங்க. மெட்ராஸ் வீட்டை விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”

“முடியாது.”

“முடியாதுன்னா இப்படி வீடு போர்க்களமா இருப்பது எனக்கும் பிடிக்காது. நீங்க மட்டும் ஊருக்குப் போக வேண்டியதுதான். கடைசி காலத்தில் பையன் கவனிக்கலைன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதிங்க.”

“டேய் சிவா…” கிரிதரன் கலங்கின கண்களோடு அவனைப் பார்த்தார். உடைந்து போன குரலில் மெல்லமாய் சொன்னார். “சரி எனக்கு டிக்கட் போட்டுருடா. இந்த லைஃப் ஸ்டைல் ஒத்து வராது. தினமும் காலைல நடேசன் பார்க் போய் ஃப்ரெண்சோட அரசியல் பேசணும். ரோட்டோர கடையில் டீ குடிக்கணும். திண்ணையில் உக்காந்து ஹிண்டு பேப்பர் படிக்கணும். கல்யாணம், காதுகுத்துக்குப் போகணும். நிறைய மனுஷங்க வேணும். நாப்பது அம்பது வருஷமா வாழ்ந்து பழகின வாழ்க்கையை சட்னு என்னால விட முடியாது..”

“போயிடுங்க. பசங்க எதிர்காலத்தைப் பத்தி உங்களுக்கு அக்கறையில்லை. கல்யாணமும், காதுகுத்தும்தான் முக்கியம். அங்கயே போயிடுங்க.”

சிவாவுடைய மனதின் ஆழத்தில் இருந்த மிக மெல்லிசான குற்ற உணர்ச்சி கூட நிஷாவுக்கு இருக்கவில்லை. “அவரால நமக்கு தொல்லைதான் அதிகம். பிள்ளைங்க கெட்டுப் போயிருவாங்க. டிராவல் ஏஜன்ட்கிட்ட இன்னிக்கே பேசிடறேன்.” என்றாள்.

அந்த வாரக் கடைசியில் ஏர்போர்ட். பேரக் குழந்தைகளை வாஞ்சையாய் அணைத்து தலையில் முத்தமிட்டார். இது கடைசி முத்தமா, இன்னும் பாக்கி இருக்கிறதா?

மெட்ராஸ் வெய்யிலும், இரைச்சலும், வியர்வை நாற்றமும் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. ஜெட் லேக் சரியானதும், தகர உடம்பு லொட லொடவென நடுங்க, மண் புழுதி கிளப்பிக் கொண்டு செல்லும் தனியார் பஸ்சில் கொங்கலபட்டி போனார் கிரிதரன். வயல்வெளிக்கு நடுவே தாழ்வான ஓட்டு வீடு.

சுருக்கங்களே முகமாய்ப் போன எண்பது வயதுக் கிழவி, இடுங்கிய கண்களால் அவரை உற்றுப் பார்த்து, “கிரிதரா…” என்றது.

பிளாஸ்டிக் மாலையுடன் சுவரில் மாட்டியிருந்த கறுப்பு வெள்ளை படத்துக்கு முன்னே போய் நின்றார். கண்ணில் கரகரவென்று கண்ணீர். “அப்பா, உங்க மனசைப் புரிஞ்சிக்க எனக்கு முப்பத்தஞ்சு வருஷமாச்சு.”

oo00oo