தப்பு


இன்று வாகன காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவதற்காகப் போனபோது அந்த அலுவலகத்தில் ஒரு மானேஜர் உட்பட 4 பெண் ஊழியர்கள். நிசப்தம் பூசிய குளிர்சாதன அறை. ஆளுக்கொரு கம்ப்யூட்டர். இன்னும் காலாவதியாகாத டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள். மூலையில் தேமே என்று ஒரு ஆண் ஊழியர். குப்பைத்தொட்டி. அதில் நிரம்பி வழிந்த காகிதக் குப்பைகள். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றதே என்ற ஆச்சரியத்துடன் ஒரு மேசையை அணுகினேன்.
trash
விவரங்கள் கேட்டுவிட்டு என்னை உட்காரச் சொல்லிவிட்டு மேற்படி கம்ப்யூட்டரில் என் காப்பீட்டுக் கணக்கு வழக்கை மேய ஆரம்பித்தார் ஒரு அம்மணி. அந்த அறைக்குள் ஒரு வாடிக்கையாளார் எதிரில் அமர்ந்திருக்கிறாரே என்கிற பாவனை எதுவுமற்று பிறகு சத்தமாய் உரையாடத் தொடங்கினார்கள். எல்லாமே ஆங்கிலத்தில்தான்.

நடுவாந்திர மேசையில் கண்ணாடியணிந்த நடுத்தர வயது குண்டு பெண்மணி, தான் நேற்று “balanced diet” ப்ரோக்ராம் ஒன்றில் பங்கு கொண்டதை சத்தமாக அறிவித்தார். “பட்.. யு நோ.. அயம் அல்ரெடி ஃபால்லோயிங் தட் யா” என்றார்.

“உண்மையாகவா? இன்னும் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓட்ஸ்தான் எடுத்துக் கொள்கிறாயா?” கம்யூட்டரில் என் விவரங்களைத் தட்டியபடி இந்தப் பெண்மணி.

“பின்னே? என்னைப் பற்றி என்னவென்று நினைத்தாய்?” என்று கண்ணாடிக்குள்ளிருந்து விழி உருட்டிப் பார்த்தார் கு.பெண்மணி.

கம்ப்யூட்டர் பெண்மணி திரையிலிருந்து பார்வையை விலக்கி மூன்று பேரைத்தாண்டி “ஸார்.. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் படித்திருக்கிறீர்களா?” என்றார் மூலையைப் பார்த்து.

“சேத்தன் பகத்-தானே. படித்திருக்கிறேன்” என்று குரல் வந்தது.

“ஓ நீங்கள் அப்டுடேட் ஸார்”.

இன்னும் சில பல அரட்டைகள்.

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில், சர் சர் என்று காப்பீட்டுக் காகிதங்களை அச்சிட்டுக் கிழித்து, ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ”Balanced diet” பெண்மணியிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்து என்னிடம் பணம் பெற்று ரசீது கொடுத்து…

எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. காகிதங்களை வாங்கி சரி பார்த்துவிட்டு சொன்னேன். “மேடம்… பேப்பர்ஸ்-ல வண்டி நம்பர் தப்பா என்ட்ரி பண்ணிருக்கீங்க..”

கம்ப்யூட்டர் பெண்மணி லேசாய் அசடு வழிந்தது. விரயம்: மூன்று காகிதங்கள் + கார்பன் + டாட் மேட்ரிக்ஸ் ரிப்பன் + என்னுடைய மற்றும் அவரின் மேலும் பத்து நிமிடங்கள்.

தப்பான காகிதங்களை டர்ரென்று கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் எப்படி இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றது என்கிற என் ஆச்சரியத்துக்கு பதில் கிடைத்துவிட்டது.

கம்யூட்டரைக் கண்டு பிடித்தது மிகப் பெரிய தப்பு என்று நினைக்கிறேன்.