கதை vs தொழில்நுட்பம்


ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

அன்புள்ள சத்யராஜ்குமார்

உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
வேலைகளுக்கு.
மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

விஷயத்துக்கு வருகிறேன்.

மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
சொல்லிவிட்டன.

அன்புடன், வாழ்த்துகளுடன்
பாரா

இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.