உரையாடல் முடிவுகள்: சலசலப்பு


பல சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். பரிசுகள் கிடைத்துள்ளன. கிடைக்காமலும் போயுள்ளன. கிடைத்த போது மகிழ்ந்திருக்கிறேன். கிடைக்காத போது வருந்தியதில்லை.

ஆரம்பத்தில் போட்டிகள் நடக்கும் திசையில் தலை வைத்துக் கூட படுக்காமல் இருந்தவன்தான். இத்தனைக்கும் வாரா வாரம் ஏதாவது ஒரு பத்திரிகையில் கதை வந்து கொண்டிருக்கும். மாத நாவல்களும் கொஞ்சம் எழுதினேன். வீடு தேடி வந்து சந்தித்துச் செல்லும் வாசகர்கள். தினமும் ஒரு கத்தை போஸ்ட் கார்டு கடிதங்கள். புகழின் ருசியை லேசாக அனுபவிக்க முடிந்தது.

ஒரு வாசகர்தான் எனக்கு ஸ்பீட் ப்ரேக் போட்டார். சிந்தெடிக் கதைகளால் உங்களுக்கு பேர் கிடைக்கப் போவதில்லை. பத்து நல்ல சிறுகதைகளாவது எழுதுவது ரொம்ப முக்கியம். உங்களால் முடியும் என்பதால் சொல்கிறேன்.

குமுதம் அப்போது மாவட்டம் தோறும் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பரீட்சை எழுதுவது போல கதை எழுதித் தர வேண்டும். போலீஸ் நிலைய வன்புணரலை மையமாக வைத்து வழக்கம் போல க்ரைம் கலந்த ஒரு கதை எழுதினேன். எனக்கு நன்கு அறிமுகமான க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முக்கிய நடுவர். இருந்தும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. சூசன் எழுதிய ‘அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் சூசனின் கதையில் இருந்தது. அதை நான் மறக்காமல் உள்வாங்கிக் கொண்டேன். அடுத்து பல நாட்களுக்கு கதை எதுவும் எழுதாமல் நிறைய சிறுகதைகளை தேடித் தேடி வாசித்தேன். மனசுக்குள் அச்சிறுகதைகளை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பது வாடிக்கையானது. அதற்கப்புறம்தான் கல்கியில் அந்நிய துக்கம், உள்காயம், ஒரு வினாடியும் ஒரு யுகமும், குறுநில மன்னர்கள் என வரிசையாய் பரிசுகள் கிடைத்தன. கலைமகள், அமுத சுரபியிலும் பரிசுகள் வாங்கினேன்.

இங்கே நான் சொல்ல வந்தது கிடைத்த பரிசுகள் பற்றி அல்ல. கிடைக்காத பரிசு பற்றி. அன்றைக்கு நான் மனம் சோர்ந்திருந்தால் கல்கியில் இத்தனை சிறுகதைகள் எழுதியிருக்க மாட்டேன்.

பத்திரிகையோ, வலைப்பதிவோ… சில போட்டி அறிவிப்புகளைப் பார்த்தால் கலந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. பங்கேற்கிறேன். சில மாதங்களுக்கு முன் சிறில் அலெக்ஸ் நடத்திய விஞ்ஞான சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். அமரர் சுஜாதா நினைவு சிறுகதைப் போட்டியிலும் பங்கெடுத்தேன். என் கதை இந்த இரு போட்டிகளிலும் தேர்வாகவில்லை. அதனாலென்ன, கலந்து கொண்டிருக்கா விட்டால் அந்த இரு கதைகளையும் எழுதியிருக்காமல் போயிருப்பேன்.

யோசித்துப் பார்த்தால் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட கதைகள்தான் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கின்றன. ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். இதையே உங்கள் கதை பற்றிய கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லும் அந்த சின்ன சீட்டுக்கள் பத்து திருக்குறள் அதிகாரங்கள் போதிப்பதை மவுனமாக போதித்தன. ஏன் நிராகரித்தார்கள் என்று யாரையும் விளக்கமெல்லாம் கேட்க முடியாது. நாமாக புரிந்து கொள்ள வேண்டும்.

எழுதுவது என் கடமை. அமைப்புகள் அவற்றை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவர்கள் சவுகரியம். இந்தப் பக்குவம் எழுத்தாளர்களுக்கு முக்கியம். பிரசுரிக்காத நிறுவனத்தை திட்டுவதும், பரிசு கொடுக்காத அமைப்புகளை கண்டிப்பதும் நம்மை வளர்த்தப் போவதில்லை. மேலும் மேலும் படிப்பதும், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருப்பதுமே நாம் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும்.

வாய் பேசக் கூட தெரியாத குழந்தைகள் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, சிரித்து தானாகவே சகலமும் கற்றுக் கொள்ளும் வித்தையை கூர்ந்து பார்த்தால் புரியும் இதுதான் இயற்கையான Learning Process என்னும் சூட்சுமம். உங்கள் படைப்புகளுக்கு நீங்களே நீதிபதியாவது முக்கியம். நீதிபதி என்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பெழுதுபவர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

நம் கதையில் என்ன பிரச்சனை என்று நம்மைத்தான் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறு யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அந்த நேரத்தில் பத்து சிறுகதைகள் படித்தால் அவை நமக்கு பதில் சொல்லும்.


தொடர்புள்ள இடுகை:- சிதைவுகள்: சிறுகதைப் போட்டி முடிவுகள்