ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல்


maskமெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் ப்டம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள்.

மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ!

பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில:

1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது.

2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை.

3. Calcarea Carb – 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம்.

4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?)

5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.

6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல்.

7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம்.

8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம்.

இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன.

‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார்.

அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.