காசி கேட்ட கேள்விகள்


காசி கேட்டுக் கொண்டபடி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய பதில்களை இங்கே வெளியிடுகிறேன். அவர் தொகுத்திருந்தால், நீக்க வேண்டியதை நீக்கி உங்களையும் என்னையும் காப்பாற்றியிருப்பார். இப்போது வேறு வழியில்லை. நீங்கள் படித்துதான் ஆக வேண்டும்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

வலைப்பூக்கள் துளிர் விடத் துவங்கியபோது இருந்ததை விட இப்போது பல்மடங்கு அதிகமாய் உள்ளடக்கங்கள் பெருகியுள்ளன. பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற தொழில்முறை ஊடகங்களோடு ஒப்பிட்டால் எழுத்து நயம் குறைவாகவே இருந்தாலும் (என் தளத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) கருத்தளவில் விரும்பத்தக்க உள்ளடக்கங்கள் நிறைய வாசிக்க கிடைக்கின்றன. தேவையான அளவுக்கு உள்ளதா என்றால் இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். படிப்பவர்களும், படைப்பவர்களும் எழுத்து நயத்தை பொருட்படுத்தாமல் பொருளடக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால் இந்த நிலை மாறும். அவரவர்க்கு தெரிந்த விஷயங்களை அவரவர் பாணியில் அளித்தாலே போதுமானது. கவர வேண்டும் என்ற நோக்கத்தை விட, பகர வேண்டும் என்ற நோக்கம் அதிகரித்தல் ஆரோக்கியமானது.

கேள்வியின் இரண்டாம் பாகத்துக்கான பதில் இணையத்துக்கு வெளியே துவங்குவதாக நினைக்கிறேன். இணையம் மற்றும் கணினியில் நிகழ்வன பெரும்பாலும் நிஜ வாழ்க்கையின் நகல் செயல்பாடுகளாகும். வெளியே தமிழ் புழக்கம் அதிகரித்தால் இணையம், கணினிகளிலும் வேறு வழியே இல்லாமல் அவை நிகழும்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இலக்கியம், இதழ்கள் அளவில் தமிழர் சமூகத்தின் ஒரு குறைந்த சதவீதம் மட்டுமே அனுபவிக்கிறது. மின்னஞ்சல், மின்னரட்டை போன்றவற்றிற்கும் இது பொருந்தும். மின் வணிகம், அரசாளுமை பற்றி எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை இவைகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறதென்று நினைக்கிறேன்.

தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா என்பதை விட தகவல்-நுட்பப் புரட்சியின் பயனை முழு தமிழர் சமூகமும்
அனுபவிக்கிறதா என்ற கேள்வியே முக்கியமானது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

இன்றைக்கு இணையத்திலும், கணினியிலும் தமிழின் பயன்பாடு அதிகரிக்க தொண்ணூறு சதவீதம் உதவியுள்ளது தன்னார்வலர்களின் பங்களிப்பும், அளவிடற்கரிய அவர்களின் உழைப்பும்தான். அதில் கொஞ்சமேனும் தமிழை வைத்துப் பிழைக்கும் அரசியலமைப்புகள் செய்திருந்தால் இன்னும் பல தூரம் போயிருப்போம். அவர்களுக்கு அதற்கு நேரமோ, அக்கறையோ இல்லை.

மேலேடுத்துச் செல்ல முக்கியமானதாக நான் கருதுவது செல்பேசி வழி தமிழ் மென்பொருள்கள். நுறு சதவித மின் தமிழ் ஆட்சி அதன் மூலமே சாத்தியப்படும். ஒலிப் பதிவுகளும், ஒளிப் பதிவுகளும் சாத்தியமாகி விட்ட இத்தருணத்தில் எழுத படிக்க தெரியாதவர்களின் கையிலும் இருக்கும் கைப்பேசிகளே தமிழுக்கான மின் தூதுவர்கள்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

கேள்வி #3-ல் குறிப்பிட்ட படி கைப்பேசி சார்ந்த தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துவேன். அதிலே இணைய இணைப்பு சுலபமாக, நியாயமான செலவில் பெற வழி வகை செய்வேன்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ் வலைப்பதிவுகள் தக்க பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. ‘மொக்கை’ என்று அழைக்கப்பட்ட கலாசாரம் விரைவிலேயே அதன் ஆதரவை இழந்து விட்டது போல் தெரிகிறது. உருப்படியான பதிவுகள் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரின் வலைப்பதிவுகளில் எதிரொலிக்கிறது. அதை ஊக்குவிக்கும் வண்ணம் பல தளங்கள் போட்டிகள் வைத்து முன்னெடுத்துச் செல்கின்றன.

புதியவர்களுக்கான யோசனை? நான் வலைப் பதிய ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு கருத்தைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். எழுத்து நயம் பற்றி கவலைப்பட வேண்டாம். அது காலப் போக்கில் அகப்படும். ஒவ்வொருவரின் பார்வையும் அவரவர் பெருவிரல் ரேகை போன்றது. அதை பதிவு செய்ய முயன்றாலே போதும்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழில் திரட்டிகளின் முன்னோடியாக விளங்கிய தமிழ்மணத்தின் ஐந்து ஆண்டு சேவை அபாரம். பல வகையிலும் அது தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்ததை கண்கூடாகப் பார்த்தோம். வரும் ஆண்டுகளில் அது செய்ய வேண்டியது கைப் பேசி தளத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே ஆகும்.