சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1
முன் கூட்டியே திட்டமிட்டு நடக்கும் சந்திப்புகளைக் காட்டிலும் எதிர்பாராமல் நிகழ்பவை சுவாரஸ்யமானவை.
அப்போதெல்லாம் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் முன்பதிவு செய்து அவ்வப்போது கோவை – சென்னை சென்று வருவது வழக்கம். ரயில் எட்டு முப்பத்தைந்துக்கு கோவையில் கிளம்பி – ஆறேகால், ஆறரை மணி போல் சென்னை சென்று சேரும்.

கார்த்திகா ராஜ்குமாரின் படம் கிடைக்காததால் அவர் ஊர் ஊட்டி!
பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள். ரயில் கிளம்பியதும், ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டே லுங்கிக்கு மாறி, ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லி சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை எழுப்பி, பர்த்தை விரித்து செயின் போடுவார்கள். மெத் மெத்தென்று இரண்டு லேயருக்கு படுக்கை விரிப்பை விரித்து, சுருட்டி வைத்த தலையணையை ஊதிப் பெருக்குவார்கள். நடுத்தரங்கள் மறக்காமல் தலையில் மப்ளர் கட்டிக் கொள்வார்கள்.
நான் பொதுவாக போட்டுக் கொண்ட பேண்ட் சர்ட்டோடு ப்ரீப்கேசில் தலை வைத்து பர்த்தில் படுத்து விடுவேன். பயணங்களில் தூக்கம் வராது. புக் ஸ்டாலில் வாங்கிய புத்தகம் கொஞ்ச நேரம் படிப்பேன். அதன் பின் மனதில் தங்கிய கதைகளை அசை போடுவதில் மிச்ச நேரம் கழியும்.
அன்றைக்கு புத்தகத்தை விரித்து உட்கார்ந்திருந்த போது – எதிர் சீட்டுக்கு வந்தமர்ந்த ப்ரெஞ்ச் தாடி இளைஞர் என்னுடைய இருக்கை எண்ணை சரி பார்த்து விட்டு, ”நீங்க சத்யராஜ்குமாரா?” என்றார்.
”ஆமா. எப்படித் தெரியும்?”
”ரிசர்வேஷன் சார்ட்டில் பேர் பார்த்தேன். நான் கார்த்திகா ராஜ்குமார்.”
குப்பென்று ஒரு பரவசம் மனசுக்குள் ஓடியது. அந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறுகதை எழுத்தாளர்கள் இல்லை. மிகவும் பிரபலமான எழுத்தாளர்களை தவிர ஒரு முப்பது நாற்பது பேர்தான் எல்லா பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்கள். எனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பலரும் இவர் கதைகளைப் பற்றி மறக்காமல் குறிப்பிடுவார்கள். இருவர் பெயரும் ராஜ்குமாரில் முடிவதால் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் என்னை விட மூத்த எழுத்தாளர். அந்த சமயத்தில் நான் எழுதி வந்த கதைகளில் பல குப்பை என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுவேன். அவரோ தரமான, முதிர்ச்சியான கதைகள் எழுதி வந்தவர்.
”நீங்க சீக்கிரம் தூங்கிருவீங்களா? அப்படி இல்லேன்னா நாம பன்னண்டு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே?” என்றார்.
”ஓ எஸ். பேசலாம்.” என்று தலையாட்டினேன்.
மேல் பர்த்துக்கு தாவி உட்கார்ந்தோம். என் கையில் இருந்த கணையாழியைப் பார்த்துக் கொண்டே, ”சமீபத்தில் நீங்க எழுதின கதை ஒண்ணு படிச்சேன். ட்ரான்சிஷன் பீரியட்ல இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.” – என்றார் கார்த்திகா ராஜ்குமார்.
அன்றைக்குத்தான் வாழ்க்கையில் முதல் முறையாய் கணையாழியை வாங்கினேன் என்று ஏனோ அப்போது அவரிடம் சொல்லவில்லை. பெரிசாய் இலக்கியங்கள் படைத்துக் கொண்டிருக்கவில்லையென்றாலும் அவர் சொன்ன மாதிரி என்னுடைய எழுத்தில் சில மெல்லிய மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த பருவம்தான் அது. அந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் அப்போது படிக்கத் துவங்கியிருந்த சா.கந்தசாமி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோருடைய சிறுகதை தொகுப்புகள்.
திரு.மாலன், பட்டுகோட்டை பிரபாகர் ஆகியோருடனான திசைகள் பத்திரிகை அனுபவங்களை பற்றி எல்லாம் அவர் நிறைய பேசிக் கொண்டு வந்தது மங்கலாக ஞாபகம் இருக்கிறது.
படுக்கப் போவதற்கு முன், ”ராஜ்குமார் உங்க பேர். கார்த்திகா உங்க மனைவியா?” என்று கேட்டேன்.
சிரித்துக் கொண்டே மறுத்தார். ”கார்த்திகா என் கல்லூரி சீனியர். என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்தவர். அவர் நினைவா அந்தப் பெயரை புனை பெயரா வெச்சிகிட்டேன்.” என்றார்.
காலையில் குட் பை சொல்லிக் கொண்டோம். மறுபடி எங்கேயும் அவரை சந்திக்கவில்லை. பக்கா ரயில் ஸ்நேகம்.
இலவசக்கொத்தனார் 9:34 பிப on ஓகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் |
இப்படித்தாங்க நான் ஒரு எழுத்தாளரை அவர் வீட்டுக்கே போய் பார்த்தேன். அடுத்த வாரமே அவரு வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுப் போயிட்டாரு! 🙂
சத்யராஜ்குமார் 2:58 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
LOL :-))
SnapJudge 9:54 பிப on ஓகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் |
கலக்கல் விவரிப்பு.
கொத்ஸ்… அவர் யாரு?!.
சத்யராஜ்குமார் 2:59 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
வீடு மாறிட்டேன் பா.பா 🙂
என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள்//
//நான் பொதுவாக போட்டுக் கொண்ட பேண்ட் சர்ட்டோடு ப்ரீப்கேசில் தலை வைத்து பர்த்தில் படுத்து விடுவேன்//
நான் ஒவ்வொரு பயணத்திலும் நினைக்கிறதை நீங்க அப்படியே எழுதிட்டமாதிரி இருக்கு 🙂
என் மனைவி, ஒவ்வொரு ரயில் பயணத்துக்கும் ஒரு பை நிறைய போர்வைகளை அள்ளிச் செல்வார், ‘ஒரு ராத்திரிக்கு இத்தனை சௌகர்யம் தேவையா?’ என்றால், ‘அதெப்படி?’ என்று பதில் வரும் – நான் இன்றுவரை எந்த ரயில் பயணத்திலும் போர்வை கொண்டுபோனதில்லை, தூக்கம் கலைந்ததும் இல்லை 🙂
கார்த்திகா ராஜ்குமார் எழுத்துகள் படித்திருக்கிறேன், இப்போது அவ்வளவாக நினைவில் இல்லை, அவருடைய தொகுப்பு ஏதும் வைத்திருக்கிறேனா என்றுகூடத் தெரியவில்லை, தேடிப் பார்க்கவேண்டும்.
– என். சொக்கன்,
பெங்களூர்.
சத்யராஜ்குமார் 3:01 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
இந்த பாரா எழுதும்போது அட இது சொக்கன் மேட்டராச்சேன்னு நினைச்சிகிட்டேதான் எழுதினேன். அந்த அளவுக்கு பிராண்ட் பண்ணிட்டிங்க. 🙂
என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம்
என் முதல் மகள் பிறந்தபோது, ஒவ்வொரு வார இறுதியிலும் பெங்களூரிலிருந்து கோவைக்கு ரயிலில் பயணம் சென்றேன் – அப்போது ’ரயிலடிக் குறிப்புகள்’ன்னு டைரியில தொடர்ந்து எழுதிகிட்டிருந்தேன், இந்தப் பதிவு அதையெல்லாம் ஞாபகப்படுத்தியது 🙂
– என். சொக்கன்,
பெங்களூர்.
vijayashankar 1:14 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//பக்கா ரயில் ஸ்நேகம்//
🙂 True
பி.எஸ்.ஜியில் படிக்கும் பொது மூன்று மாதத்திற்கு ரூ 75க்கு ட்ரெயின் பாஸ் கிடைக்கும். சில சமயம் பீளமேடு ஸ்டேசன். லேட்டானால் பெரும்பாலும், நண்பர்களோடு மொபட்டில் / பைக்கில் சென்று கோவை ரயில்வே ஸ்டேசனில் இறங்கிக்கொள்வேன்.
கோவையிலிருந்து திருப்பூருக்கு ட்ரெயின் எடுத்தால் ( இரவு ப்ளூவில் அவர் கதை டி.டி.ஆர். மூலம். ஜி.அசோகனுக்கு பயணிக்கும் ) சில சமயம் சந்திப்பது ராஜேஷ்குமார். ரோஜா பாக்கு மென்றுக்கொண்டு பேசுவார். வித்தியாசமான தலைப்பு நாவலுக்கு வைப்பதில் கில்லாடி. ஒரு முறை சந்தித்த பொது சும்மா ஒரு தலைப்பு சொல்லுங்க என்றார். திருமரண அழைப்பிதழ் என்றேன். பாக்கெட் நாவலில் அந்த தலைப்பில் ஒரு 84 பக்க கதை வந்தது. ( ஜெப்ரி ஆர்ச்சரின் ட்வெல்வ் ரெட் ஹெர்ரிங்க்ஸ் கதை போல இருக்கும் ).
இமெயில் மூலம் நான் நிறைய விவாதம் செய்தது எழுத்தாளர் சுஜாதாவுடன்.
இப்போது மிக பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!
சத்யராஜ்குமார் 3:06 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//சில சமயம் சந்திப்பது ராஜேஷ்குமார்//
ஆமாம். ராஜேஷ்குமார் ப்ளூவில்தான் சென்னை செல்வார். பிஸ்கட் கலர் ப்ரீப்கேசின் மேல் முழு நீள தாளை வைத்து ஓடும் ரயிலில் கூட எழுத ஆரம்பித்து விடுவார்.
//எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!//
எழுத்தாளர்கள் என்றில்லை. முகம் தெரியாத ஆனால் அறிமுகமான பல பேரை நேரில் ஒரு முறை பார்த்து விட்டால் புஸ்சென்று போய் விடும்.
REKHA RAGHAVAN 2:31 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//எதிர்பாராமல் நிகழ்பவை சுவாரஸ்யமானவை //
எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நல்ல சந்திப்பு. மொத்தத்தில் எங்களுக்கு ஒரு விறுவிறுப்பான பயண அனுபவத்தை படித்த திருப்தி.
ரேகா ராகவன்.
சத்யராஜ்குமார் 3:06 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரேகா ராகவன்.
பினாத்தல் சுரேஷ் 2:56 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
வீட்டின் சௌகர்யங்கள் கொஞ்சம் கூட ரயில் பயணத்தில் குறைந்துவிடாமல் மூன்று மணிநேரப் பயணத்துக்கு முதல் அரை மணிநேரம் கொண்டுவந்ததைப் பிரிக்க, கடைசி அரை மணிநேரம் அடைக்க என்று தன் கெட்டது போதாதென்று அடுத்தவனையும் டார்ச்சர் செய்யும் பிரகிருதிகளை பசித்த புலி தின்னட்டும் 🙂 நாம் நாமுண்டு, இரண்டு செட் துணியடங்கிய பைத்தலையணை உண்டென்றிருப்போம் 🙂
ரயில் சினேகங்கள் அதிக நேரம் தாங்குவதில்லை – ஆனால் மிகச்சில அதிகநாள் கழித்தும் தாக்கும் – உங்கள் அனுபவம்போல 🙂
சத்யராஜ்குமார் 3:14 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//ரயில் சினேகங்கள் அதிக நேரம் தாங்குவதில்லை//
சிநேகங்கள்தான் தாங்காதே ஒழிய நினைவுகள் அப்படியல்ல. இரவு பயணம் த்ரில்லர் + ரொமான்ஸ் என்றால் பகல் பயணங்கள் டி.வி சீரியல். இந்த மெகா தொடரை கல கலக்க வைக்கும் தனித்திறமையோடு பெட்டிக்கு ஒருவர் ரிசர்வேஷன் செய்து வந்து விடுவார். போகுமிடம் சேரும் வரை பேசப் பிறந்த அவர் காட்டில் மழைதான்.
சித்ரன் 4:09 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
கார்த்திகா ராஜ்குமார் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். நானும் நிறைய படித்திருக்கிறேன். ஆனால் சொக்கன் சொன்னது மாதிரி எதுவும் நினைவிலில்லை. கிடைத்தால் மறுபடி படிக்க ஆசை.
ரயில் பயண அனுபவங்களை சலிக்க சலிக்க எழுதலாம். அத்தனை இருக்கிறது.
சித்ரன்
http://chithran.com
சித்ரன் 4:16 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
கார்த்திகா ராஜ்குமார் கதைகளை நிறைய படித்திருக்கிறேன். அவரின் எழுத்துக்கள் இப்போதெல்லாம் கண்ணில் தென்படுவதில்லை. கிடைத்தால் மறுபடி படிக்க ஆசை.
ரயில் பயண அனுபவங்களைப் பற்றி ஒரு ரயில் அளவுக்கு நீளமாய் எழுதிக்கொண்டே போகலாம்.
ரயில் பற்றி நான் முன்பொருமுறை எழுதின கவிதையை அப்படியே இங்கே விளம்பரம் செய்து விடுகிறேன். http://chithran.wordpress.com/2007/08/26/reservation/
சித்ரன்
http://chithran.com
சத்யராஜ்குமார் 3:16 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//
சென்ற முறை விபத்தில்
உயிர்களை பலிகொண்ட
பாலத்தின்மேல்
பயமில்லாமல் தடதடக்கிற ரயில்.
//
இது எனக்குப் பிடித்தது.
சுதாகர் 9:40 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
//பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள். ரயில் கிளம்பியதும், ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டே லுங்கிக்கு மாறி, ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லி சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை எழுப்பி, பர்த்தை விரித்து செயின் போடுவார்கள். மெத் மெத்தென்று இரண்டு லேயருக்கு படுக்கை விரிப்பை விரித்து, சுருட்டி வைத்த தலையணையை ஊதிப் பெருக்குவார்கள். நடுத்தரங்கள் மறக்காமல் தலையில் மப்ளர் கட்டிக் கொள்வார்கள்//
வாரா வாரம் நீங்க இரயில்ல போனா உங்களுக்கும் தெரியும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஆபிஸில் தூங்கி வழிய வேண்டி வரும். அதற்கு இந்த மாதிரி தூங்கிக் கொண்டு போவது நல்லது. இந்த மாதிரி வாரா வாரம் ஊருக்கு வரவங்க, வாரக் கடைசியல தான் எல்லா வேலயயும் செய்ய வேண்டியிருக்கும். படிக்கிற பசங்கள பாக்குறது, சொந்தங்களை பாக்குறது, விழாக்களுக்கு போறது-ன்னு. அதுனால அவங்களுக்கு இரயில்ல தான் ஓய்வு எடுக்க முடியும். எனக்கென்னமோ இது தப்பா தோனல…
சத்யராஜ்குமார் 1:28 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் |
சுதாகர் உங்கள் கருத்தை வரவேற்கிறேன். பலத்த ஏற்பாடுகளோடு செல்வதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லவில்லை. அது ஒரு அப்சர்வேஷன். அவ்வளவே. பொதுவாக குறைந்த லக்கேஜ் மகிழ்ச்சியான பயணம் என்பது என் பாலிசி. பயணங்களின் போது சிலவற்றை அசவுகரியமாக கருத வேண்டாமே என்பதும் அதில் அடக்கம்.
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாகவே ஓடும் ரயிலிலோ பஸ்ஸிலோ நான் அதிகம் தூங்க மாட்டேன். ஆனால் போர்வை தலையணை இன்றியே நன்றாக தூங்கி விடுவேன் என்று முந்தைய பின்னூட்டத்தில் சொக்கன் சொல்கிறார்.
//வாரா வாரம் நீங்க இரயில்ல போனா உங்களுக்கும் தெரியும்.//
சுமார் ஒரு வருடம் நான் வாரா வாரம் சென்னைக்கு ரயிலில் சென்று வந்து கொண்டிருந்தேன். பல சமயம் முன் பதிவு கிடைக்காமல் போய் அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டும் கூட! 🙂
Eswar 12:39 பிப on ஓகஸ்ட் 30, 2009 நிரந்தர பந்தம் |
இன்னொரு அசௌகர்யம் , சாப்பாடு முன்னேற்பாடுகள் முக்கியமா மீன் பிரியர்கள். கோச்சுகள் தாண்டி லெமன் ரைசும் , மசால் வடை உள்ளே தள்ளி கொண்டு , நித்திர தேவியை தேடும் வாரந்தர பயணிகளின் நாசியில் வந்து விழும் குழம்பு வாசனை. உண்ட மயக்கம் போதாதென்று சொந்த (களுடன்) கதை பேசுவது.
சத்யராஜ்குமார் 4:11 பிப on ஓகஸ்ட் 30, 2009 நிரந்தர பந்தம் |
இரவில் விளக்குகளை எரிய விடுவதையும், சத்தம் போட்டு பேசுவதையும் தவிர்க்கலாம்தான்!
சித்ரன் 12:53 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
ஒரு இரவில் ரயிலில் பச்சிளம் குழந்தையை எப்படித் தூங்கவைப்பது என்று முழித்துக் கொண்டிருந்த இளம் தம்பதியினரிடம் நானும் என் மனைவியும் ஒரு புடவை வாங்கி இரண்டு பெர்த்துக்கும் நடுவில் அழகாக ஒரு தூளிகட்டி படுக்கவைக்க, ரயிலின் ஆட்டத்தில் சுகமாகத் தூங்கிக் கொண்டு வந்தது குழந்தை. தம்பதிகள் ஆச்சரியப்பார்வையுடன் ’சூப்பர் ஐடியாங்க’ என்றார்கள். நாங்கள் கைக்குழந்தையுடன் இரவு ரயிலில் பயணம் செய்யும்போதும் இப்படித்தான் செய்துகொண்டிருந்தோம் என்றோம். (கைக்குழந்தை இப்போது வளர்ந்து அவனுக்கு‘அரை டிக்கட்’ வாங்க வேண்டியிருக்கிறது)
சத்யராஜ்குமார் 5:29 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் |
வட இந்திய பயணத்தின் போது அப்படிப்பட்ட தொட்டில்களை பார்த்திருக்கிறேன். இங்கே தென்றல் பிறந்த போது பெரியதாய் crib வாங்க நேர்ந்த போது அந்த ரயில் தொட்டில்கள் எனக்கு ஞாபகம் வந்தது.
பத்மா 5:46 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் |
சொக்கன்
பெண்கள் போர்வை கொண்டு போவது சவுகரியத்துக்காக இல்லை, சில அசவுகரியங்களை தவிர்க்க. நானெல்லாம் சென்னையில் இருந்து தில்லிக்கு /ஜனதாவகுப்பில் பயணம் செய்த காலங்களில் தூங்கியதே இல்லை. ஒருவித கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். சில கசப்பான (மோசமானது இல்லை என்றாலும்) அனுபவங்களும் உண்டு.
சத்யராஜ்குமார் 6:02 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் |
கோவை – டில்லி இரண்டு நாள் பயணம் செமத்தியான அனுபவமாய் இருந்தது. அப்புறம் பல ரயில் கதைகள் எழுதினேன்.
என். சொக்கன் 12:01 முப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் |
பத்மா,
இந்தக் கோணத்தில் நான் யோசிக்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி!
– என். சொக்கன்,
பெங்களூர்.
சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2 « இன்று – Today 7:24 பிப on ஜூன் 1, 2010 நிரந்தர பந்தம் |
[…] – சத்யராஜ்குமார் சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1 […]