சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1


முன் கூட்டியே திட்டமிட்டு நடக்கும் சந்திப்புகளைக் காட்டிலும் எதிர்பாராமல் நிகழ்பவை சுவாரஸ்யமானவை.

அப்போதெல்லாம் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் முன்பதிவு செய்து அவ்வப்போது கோவை – சென்னை சென்று வருவது வழக்கம். ரயில் எட்டு முப்பத்தைந்துக்கு கோவையில் கிளம்பி – ஆறேகால், ஆறரை மணி போல் சென்னை சென்று சேரும்.

கார்த்திகா ராஜ்குமாரின் படம் கிடைக்காததால் அவர் ஊர் ஊட்டி!

கார்த்திகா ராஜ்குமாரின் படம் கிடைக்காததால் அவர் ஊர் ஊட்டி!


பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள். ரயில் கிளம்பியதும், ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டே லுங்கிக்கு மாறி, ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லி சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை எழுப்பி, பர்த்தை விரித்து செயின் போடுவார்கள். மெத் மெத்தென்று இரண்டு லேயருக்கு படுக்கை விரிப்பை விரித்து, சுருட்டி வைத்த தலையணையை ஊதிப் பெருக்குவார்கள். நடுத்தரங்கள் மறக்காமல் தலையில் மப்ளர் கட்டிக் கொள்வார்கள்.

நான் பொதுவாக போட்டுக் கொண்ட பேண்ட் சர்ட்டோடு ப்ரீப்கேசில் தலை வைத்து பர்த்தில் படுத்து விடுவேன். பயணங்களில் தூக்கம் வராது. புக் ஸ்டாலில் வாங்கிய புத்தகம் கொஞ்ச நேரம் படிப்பேன். அதன் பின் மனதில் தங்கிய கதைகளை அசை போடுவதில் மிச்ச நேரம் கழியும்.

அன்றைக்கு புத்தகத்தை விரித்து உட்கார்ந்திருந்த போது – எதிர் சீட்டுக்கு வந்தமர்ந்த ப்ரெஞ்ச் தாடி இளைஞர் என்னுடைய இருக்கை எண்ணை சரி பார்த்து விட்டு, ”நீங்க சத்யராஜ்குமாரா?” என்றார்.

”ஆமா. எப்படித் தெரியும்?”

”ரிசர்வேஷன் சார்ட்டில் பேர் பார்த்தேன். நான் கார்த்திகா ராஜ்குமார்.”

குப்பென்று ஒரு பரவசம் மனசுக்குள் ஓடியது. அந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறுகதை எழுத்தாளர்கள் இல்லை. மிகவும் பிரபலமான எழுத்தாளர்களை தவிர ஒரு முப்பது நாற்பது பேர்தான் எல்லா பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்கள். எனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பலரும் இவர் கதைகளைப் பற்றி மறக்காமல் குறிப்பிடுவார்கள். இருவர் பெயரும் ராஜ்குமாரில் முடிவதால் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் என்னை விட மூத்த எழுத்தாளர். அந்த சமயத்தில் நான் எழுதி வந்த கதைகளில் பல குப்பை என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுவேன். அவரோ தரமான, முதிர்ச்சியான கதைகள் எழுதி வந்தவர்.

”நீங்க சீக்கிரம் தூங்கிருவீங்களா? அப்படி இல்லேன்னா நாம பன்னண்டு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே?” என்றார்.

”ஓ எஸ். பேசலாம்.” என்று தலையாட்டினேன்.

மேல் பர்த்துக்கு தாவி உட்கார்ந்தோம். என் கையில் இருந்த கணையாழியைப் பார்த்துக் கொண்டே, ”சமீபத்தில் நீங்க எழுதின கதை ஒண்ணு படிச்சேன். ட்ரான்சிஷன் பீரியட்ல இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.” – என்றார் கார்த்திகா ராஜ்குமார்.

அன்றைக்குத்தான் வாழ்க்கையில் முதல் முறையாய் கணையாழியை வாங்கினேன் என்று ஏனோ அப்போது அவரிடம் சொல்லவில்லை. பெரிசாய் இலக்கியங்கள் படைத்துக் கொண்டிருக்கவில்லையென்றாலும் அவர் சொன்ன மாதிரி என்னுடைய எழுத்தில் சில மெல்லிய மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த பருவம்தான் அது. அந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் அப்போது படிக்கத் துவங்கியிருந்த சா.கந்தசாமி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோருடைய சிறுகதை தொகுப்புகள்.

திரு.மாலன், பட்டுகோட்டை பிரபாகர் ஆகியோருடனான திசைகள் பத்திரிகை அனுபவங்களை பற்றி எல்லாம் அவர் நிறைய பேசிக் கொண்டு வந்தது மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

படுக்கப் போவதற்கு முன், ”ராஜ்குமார் உங்க பேர். கார்த்திகா உங்க மனைவியா?” என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே மறுத்தார். ”கார்த்திகா என் கல்லூரி சீனியர். என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்தவர். அவர் நினைவா அந்தப் பெயரை புனை பெயரா வெச்சிகிட்டேன்.” என்றார்.

காலையில் குட் பை சொல்லிக் கொண்டோம். மறுபடி எங்கேயும் அவரை சந்திக்கவில்லை. பக்கா ரயில் ஸ்நேகம்.