திண்ணை


சில அறிமுகங்கள் நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விடும்.

நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் எனக்கு அப்படித்தான். நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அமெரிக்காவில் இருக்கிறார். முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு இந்திய விஜயத்தின் போது ராத்திரி பனிரெண்டு மணிக்கு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும், அப்போது புதிதாய் வாங்கியிருந்த வெட் கிரைண்டரை பார்த்து, “பரவாயில்லையே… இந்திய சமையலறைகளும் இயந்திர மயமாகி வருதே.” என்று வியப்பை தெரிவித்து விட்டுப் போனது சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்றாக இன்னும் மனதில் இருக்கிறது.

அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், “போய் பார்த்து பேசிட்டு வா” என்று சொல்லி பக்கத்து ஊரிலிருக்கும் அவர் வீட்டுக்கு அம்மா என்னை அனுப்பி வைப்பாள். எனக்கு சில சமயம் கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கும். பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்திருக்கும் அவரைப் பார்க்க பல பேர் வருவார்கள், போவார்கள். அங்கே என்னைப் போல பொடியனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. இதெல்லாம் அந்த விவரம் தெரியாத வயதில் நமக்குள் தோன்றும் எண்ணங்களே தவிர பக்கத்தில் உட்கார்ந்து பத்து நிமிஷமாவது அவர் பேசாமல் இருக்க மாட்டார். விடை பெறும்போது மறக்காமல் கொஞ்சம் சாக்லேட்டுகளும், சின்ன பரிசுப் பொருளும் தந்தனுப்புவார்.

தெரிந்தோ தெரியாமலோ அந்த சந்திப்புகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏதோ ஒரு வெளிநாட்டில் என்றாவது வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதின் ஆழத்தில் ஒரு நீரோட்டம் போல ஓட விட்டிருக்கிறது. அடி மனதின் ஆசைகள்தான் கிடைக்கிற சந்தர்ப்பங்களை முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தை அளிக்கின்றன.

ஆறேழு வருஷங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து சேர்ந்தது அதிசயம்தான். அப்போது என்னிடம் கார் இல்லை என்பதால் அவரே வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். அன்றுதான் திண்ணை என்ற மின்னிதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். “என் நண்பர் ராஜாராம்தான் இதை நடத்தறார். இதிலே கதை எழுதறியா?”

திண்ணையின் ஓரிரு இதழ்களை படித்துப் பார்த்தவன் அதிலிருந்த கட்டுரைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்து மிரண்டு போனேன். சிற்றிதழ்வாதிகளுக்கு இருப்பது போலவே வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர்களுக்கும் ஒருவகை சிற்றிதழ் அலர்ஜி உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகள் தவிர வேறெதிலும் நான் அதுவரை கதைகள் எழுதியதில்லை. ச. மஞ்சுளாதேவி நடத்தி வந்த ‘வேறு திசைகள்’ என்ற பத்திரிகை மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு.

ஆனந்த் அவர்களிடம் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சிந்தனை வட்டம் விழாவுக்குப் போன போது, ஆனந்த் வீட்டில் தங்க நேர்ந்தது. திரு ராஜாராம் அவர்களும் அன்று அங்கே தங்கியிருந்தார். நான் எழுதுவேன் என்று தெரிந்து, “திண்ணைக்கு அனுப்புங்க.” என்று அவரும் சொன்னார்.

“இல்லைங்க நான் குமுதத்தில் எல்லாம் எழுதிட்டிருந்தவன். ரொம்ப இலக்கியத்தரமா எழுத வராது.” என்றேன்.

”அப்படி எல்லாம் இல்லை. நீங்க அனுப்புங்க.” என்றார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் எழுதுவது மிகவும் குறைந்து போயிருந்ததால் அப்போது திண்ணைக்கு அனுப்ப முடியவில்லை. வேறொரு சமயம் மறுபடியும் திரு. ராஜாராம் அவர்களை ஆனந்த் அவர்களின் வீட்டில் சந்திக்க நேர்ந்தது. கதைகளைப் பற்றி பேச்சு வந்த போது, “நான் கேட்டேன். நீங்கதான் அனுப்பவே இல்லை.” என்றார்.

அப்போதிருந்தே எனக்கு உறுத்திக் கொண்டே இருந்ததால், பத்து நாளுக்கு முன்னால் மிச்சம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். திண்ணையில் இந்த வாரம் (28 ஆகஸ்ட் 2009) வெளிவந்துள்ளது.


மிச்சம்
சிறுகதை
~ சத்யராஜ்குமார் ~


சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.

”ஏன் இப்படி இருக்கிங்க?”

வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.

”எப்படி இருக்கோம்?”

….

மேலும் படிக்க…