தடுக்கிப்பீடியா


Google T-shirt

Google T-shirt

முதலிலெல்லாம் எந்தச் சமாச்சாரத்தைத் தேடவேண்டுமென்றாலும் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாமல் நேராக கூகிளுக்கு போய் தட்டிவிடவேண்டியதுதான். கோடிக்கணக்கில் இறைந்து கிடக்கும் வலைப்பக்கங்களிலிருந்து நீ கேட்டது இதுதானா பார் என்று பொறுக்கியெடுத்து ஒரு கை அள்ளிக் கொணர்ந்து கூகுள் கொடுக்கும் பிரசாதத்தில் நமக்குத் தேவைப்படுகிற முந்திரிப்பருப்பு நிச்சயம் ஒன்றிரண்டாவது கிடைத்துவிடும்.

இவ்வாறாக இட்லி, வடை என்று எதைத் தேடுவதென்றாலும் கூகிள் கை கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. வேறு எந்த தேடலியந்திரமும் கிட்டே நெருங்க முடியாத அளவு வளர்ச்சியடைந்து இப்போது நெ.1 என்று ஆகிவிட்டது. Search Engine என்ற வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு engine பிடிக்கலாம். சிலருக்கு யாஹூ, சிலருக்கு பிங்கு (Bing). எனக்கு கூகுள் சொந்த மாமா பையன் என்பது மாதிரி உறவாகிவிட்டது.

“Sometimes when I am alone I google myself” என்கிற வாசகத்தைத் தாங்கிய ஒரு சிவப்பு பனியனை கடையில் பார்த்தவுடனே பிடித்துப் போய், விருப்பமான உடையாய் அவ்வப்போது ரொம்ப நாளைக்கு அணிந்திருந்தேன். மேலும் என்னுடைய google talk ஸ்டேடஸ் செய்தியாக இதையே சில நாள் போட்டு வைத்திருந்தேன். ‘சில நேரம் நான் தனியாக இருக்கும் போது என்னை நானே தேடிப்பார்க்கிறேன்’ என்று அதை அர்த்தப்படித்தி வைத்திருந்தேன். தெருவில், ரயிலில், அலுவலகத்தில் என்று எதிரே வருகிறவர்களின் பார்வை என் பனியன் வாசகத்தின் மேல் படிவதை லேசாக நான் ரசிக்காமலில்லை. இதன் மூலம் நான் வாழ்வாதாரத்துக்கான உத்யோகமாய் கம்ப்யூட்டரைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்பதை எல்லோருக்கும் பிரஸ்தாபித்துவிடுகிற ஒரு தற்பெருமை. என் பனியனைப் படிக்கிற இணையம் பற்றி அறியாதவர்கள் “இன்னாதிது கூகுள்னா?” என்று புருவம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. Google Talk chat-ல் வந்த ’விவகாரம்’ பிடித்த நண்பரொருவர் வேண்டுமென்றே “ஒரு சின்ன சந்தேகம். google-ன்னா கெட்ட வார்த்தையா?” என்று கேட்க திடுக்கிட்டு உடனே ஸ்டேட்டஸ் செய்தியை மாற்றிவிட்டேன்.

ஆனால் இப்போதெல்லாம் கூகிளில் எதைத் தேடினாலும் முதல் பக்கத்தில் ஒரு நான்கைந்து ஸர்ச் ரிசல்டுக்குள்ளாகவே ஒரு விக்கிப்பீடியா பக்கத்திலும் நாம் தேடுவது இருக்கிறது என்று கூகிள் காட்ட ஆரம்பித்தது. இது அடிக்கடி தொடரவே மாமா பையனுக்கு எதற்கு சிரமம் கொடுப்பானேன் என்று நேராக விக்கிப் பீடியாவுக்கே போக ஆரம்பித்துவிட்டேன். விக்கிக் பீடியா கிட்டத்தட்ட ஒரு அட்சய பாத்திரமாக ஆகிவிட்டது. எதைக்கேட்டாலும் பரமாத்மா மாதிரி எடுத்துக் கொடுக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேடப்போனால் தேடியது தவிர அது சம்பந்தப்பட்ட குறிச்சொற்கள் அந்தந்தப் பக்கங்களில் கொட்டிக்கிடப்பதால் அதைக் கிளிக்கி இதைக் கிளிக்கி ஒரு பத்து நிமிடத்தில் விக்கிப் பீடியா என்கிற அடர்ந்த கானகத்தே தொலைந்து போய் காணாமல் போய் விட நேரிடும். ஏதோ ஒரு சில பக்கங்களில் விளையாட்டுப் போல விக்கியை ஆரம்பித்து இப்போது அதை எல்லையில்லா என்சைக்ளொப்பீடியாவாக மாற்றிய மிகப் பெரிய மூளைக்காரர்களுக்கு இந்தப் பொன்னான வேளையில் சிரம் தாழ்த்தி கண்ணம்மாபேட்டை இணைய இளைஞர் மனமகிழ் மன்றம் சார்பாக இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து …

இப்போது போய்ப் பார்த்தால் நான் எழுதிய வலைப்பதிவுகளில் இடையிடையே சொல்லப்படும் விஷயங்களுக்கான இணைப்புப் பக்கமாய் விக்கிப்பீடியாவின் சுட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. இட்லி என்று தேடினால் அதற்கொரு பக்கம், ரவா தோசைக்கு ஒரு பக்கம். இது மாதிரி மைலாப்பூர், சைதாப்பேட்டை, கருணாநிதி, விஜயகாந்த் என்று எதைத் தேடினாலும் அதற்கு ஒரு பக்கம் இருக்கிறது. ஆக விக்கிப்பீடியாவானது “நம்மாளு” என்கிற மாதிரி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது.

ஒருதடவை மருந்துக் கடையில் வாங்கி வந்த ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தின் பட்டையில் அதன் பெயர் இல்லாததால் அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன். பையனுக்கு ஸ்கூலில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க்குகளுக்குக்கூட (நாமதாங்க பண்ணனும்) பெரும்பாலும் இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவையே பெருமளவில் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் பொதிந்திருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு “ப்ரீத்தி மிக்ஸி” அளவுக்கு கியாரண்டி இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் 2 மார்க் ஸ்கூல் வினாக்களுக்கு சில தகவல்கள் எதேஷ்டம்.

நேற்று ஒரு ஹோம் ஒர்க்குக்காக இந்தியாவில் Deciduous காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதென்று தேடிக்கொண்டிருந்தேன். அருகில் வந்து நின்ற மனைவி மானிட்டரை கண்ணுற்றுவிட்டு “தடுக்கி விழுந்தா விக்கிப்பீடியாலதான் போய் விழுகறீங்க போல” என்று சொன்னதால் இப்படியொரு தலைப்பில் இப்படியொரு பதிவு.

-சித்ரன்