மணியின் மரணம்


மணி இறந்து விட்டதாக காலை என்னை எழுப்பியது. விபத்தில் இறந்து விட்டானாம். அவன் இத்தோடு நான்காவது தடவை இறந்து போகிறான். இந்த முறை உண்மையாக. மணி. முழுப்பெயர் மணிமாறன். நல்ல உயரம். நல்ல நிறம். அழகான மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. மனைவியும் ஏதோவொரு வேலை பார்க்கிறார்கள். மணியிடம் சரளமாய் வெளிப்படும் ஆங்கிலம் ஆச்சர்யப்படுத்தும். ஒரு பிரபல வங்கியில் பணி. ஆனால் அடிக்கடி எல்லோரிடமும் அவன்தான் கடன் கேட்பான். பொழுதுபோக்கு குடிப்பது. மேலும் போரடித்தால் விழுவது. எப்பொழுதாவது என்னை வழியில் நிறுத்தி பேசுவான். நான் சினிமாவில் வேலை பார்ப்பதால் பேச்சுக்கள் அது குறித்து தொடங்கி பிறகு அவன் எதற்காக நிறுத்தினானோ அதில் வந்து முடியும்.
mani
“என்ன ஸார் ஒரு கட்டிங்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா..” என்பான்.

“நிச்சயமா.. எனக்குத் தெரிஞ்ச நண்பந்தான் பக்கத்தில சலூன் வச்சிருக்கான்.. வாங்க போலாம்..” என்பேன்.

“அட போங்க ஸார்.. “ என்று சிரித்தபடி நகர்ந்து போவான்.

மணியின் மகள் சமீபத்தில் பெரிய மனுஷியாக இனிமேல் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ள வீட்டில் விவாதம் நடந்ததாம். மணி உறுதியாக தலையசைத்தாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்தது. உடனே ஒரு சாமிக்கு வேண்டி கழுத்தில் மாலையுடன் அவனை பார்க்க முடிந்தது. பேச்சில் இன்னும் மரியாதையும் அன்பும் தெரிந்தது. அதற்கெல்லாம் ஆயுள் அற்பநாட்கள்தான். அதற்கு பிறகு ஒரு வாரத்திலேயே குடித்த நிலையிலேயே இருந்தான். நான் சிரித்தபடி அவனை பார்த்தேன். அவன் கழுத்தில் அந்த மாலை இல்லை. அவன் வழக்கம் போல் என்னிடம் நின்று பேசிவிட்டு நகர்ந்தான்.

இதுதான் மணி. அடிக்கடி எங்காவது குடித்துவிட்டு விழுந்து விட்டதாக தகவல் வரும். இறந்து விட்டதாகவும் பேசிக்கொள்வார்கள். அவனது அம்மாவும் மனைவியும் தலைதெறிக்க ஓடுவார்கள். அவனது குழந்தையும் அழுதபடி ஓடிப்போய் கேட் அருகே நின்று அவர்கள் வரும்வரை நின்று அழும். ஒரு ஆட்டோவில் போட்டு மணியை தூக்கி வருவார்கள். உயிர் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நினைவு தப்பியிருப்பான். அவனது கனத்த உடம்பை இறக்கமுடியாமல் உதவிக்கு ஆள் கூப்பிடுவார்கள். நானும் போய் இருக்கிறேன். இந்த அனுபவங்கள் அடிக்கடி நடக்க எல்லோருக்கும் பழகிவிட்டது. இவனுக்கான விஷயங்களை அனைவரும் பதட்டமின்றி பார்த்தோம். ஒரு முறை கீழே விழுந்து மரண தருவாயில் ஆஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு காப்பாற்றப்பட்டான். செய்த ஆபரேசனில் உடம்பெங்கும் பிளேட்டுகள் வைக்கப்பட்டது. இரும்பு கடையில இவனை விலைக்கு போட்ட நல்ல காசு கிடைக்கும் என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு பிளேட்டுகள். பல லட்சம் செலவானது. பிழைத்து வந்த போது அவன் நடை முற்றிலும் மாறி இருந்தது. அடிபட்ட தழும்புகளில் முகம் லட்சணம் போயிருந்தது. அவன் பேச்சிலும் தெளிவில்லை. இனி ஆளே மாறி விடுவான் என்று நானும் உறுதியாய் நம்பினேன்.

அதற்கு பிறகு அவர்கள் இருந்த வீடு ராசி இல்லையேன வேறு வீடு மாறி போனார்கள். ஆனால் அவன் மாறவில்லை. குடித்து கண்கள் சிவந்த நிலையில் அவனை மீண்டும் பார்த்தேன். எல்லாம் அடிபட்டால் திருந்துவிடுவார்கள் என்பார்கள். பல முறை அடிபட்டும் அவன் திருந்தவில்லை. திருந்துகிற அளவிற்கு அவன் அடிபடவில்லையோ என்று எனக்கு தோன்றியது. நான் பேசவில்லை. பேச பிடிக்கவில்லை. நகர்ந்து போனேன். அவன் மனைவி கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு போனார்களாம். அவர்கள் வீட்டில் அதைவிட பிரச்சனை போலும் உடனே திரும்பி வந்துவிட்டார்கள். எல்லாம் செய்தியாய் கேட்டுக்கொண்டேன்.

சில நாட்களுக்கு பிறகு மணி இறந்து விட்டதாக செய்தி என்னை எழுப்பியது. அதுவும் நேற்று இரவு மழை நேரத்தில் ராயப்பேட்டை ஆஸ்பிடல் அருகில் ஒரு கவர்மெண்ட் பஸ்ஸில் அடிபட்டும் அவன் பிழைக்கவில்லை. இறந்து விட்டானாம். எனக்கு வழக்கம் போல் எந்த பதற்றமும் இல்லை. அவனை பற்றிய மோசமான நினைவுகள் மட்டும் என்னை மீறி வந்து போனது. என்ன சொல்வது?

குடிப்பது மட்டுமே வாழ்க்கையாய் இருந்து பல முறை அடிப்பட்டு திருந்தாமல் மீண்டும் அதே நிலையில் பஸ்ஸில் அடிப்பட்டு இறந்ததை எப்படி விபத்தென்று சொல்ல முடியும்? என்னை பொறுத்தவரையில் மணி செய்துக்கொண்டது தற்கொலை.!

  • சரசுராம்