கள்ளக் காதலுக்கு மரியாதை


புதிதாய் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது. தொகுப்பின் பெயர் ‘கள்ளக்காதல்’ . எழுதியவர் கவிஞர் வசுமித்ரா ஆதிரன். நவீன கவிதைகள். நான் இன்னும் படிக்கவில்லை. படித்த நண்பரிடம் கேட்ட போது ‘கள்ளக் காதல்’ – இந்த வார்த்தையை சமூகம் தவறாக பயன்படுத்துகிறது. அதற்குள் இருக்கும் உண்மைகளைச் சொல்ல முயற்சிக்கிறது இந்தத் தொகுப்பு என்றார்.

பொன்.சுதா பிரபல கவிஞர். விருதுகள் பல பெற்ற ‘மறைபொருள்’ குறும்படத்தை இயக்கியவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘நடந்த கதை’ என்ற குறும்படம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொன்.சுதா ‘இன்று’வில் இனி அவ்வப்போது எழுதுவார். அவரின் முதல் பதிவு இதோ.

காதல் என்றால் அப்பா, அம்மாவிற்குத் தெரியாமல் செய்வது. கள்ளக்காதல் என்றால் கணவன் – மனைவிக்குத் தெரியாமல் செய்வது என்று சொல்லலாமா?

பிறனில் விழையாமை என்று 2000 வருடங்களுக்கு முன்பே வள்ளுவன் எழுதிய காலத்திலிருந்து தொடரும் விசயம் தான் இது என்றாலும், இன்று கள்ளக்காதல் கொலைகள் இல்லாமல் செய்தித் தாள்களைப் படிக்க முடிவதில்லை என்பது தவிர்க்க முடியாத உண்மை .

இத்தகைய உணர்வுகளுக்கும், உறவுகளுக்குமான காரணம், சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிரான கலகமா, விடுதலை உணர்வா? இயல்பூக்கமாகவே நிகழும் உடலின் இராசாயன மாற்றமா? விருப்பு வெறுப்புகள் பார்க்காமல் பொருளாதாரத்தை மட்டும் முன்னிருத்தும் கடமைக் கல்யாணங்களா? இல்லை அவசர யுகத்தின் அசுர இயங்குதலில் பகிர்தலுக்கும் புரிதலுக்கும் நேரம் ஒதுக்க முடியாத ஓட்டமா? உடல் தேவையா? மனத் தேவையா? இப்படி எண்ணற்ற கேள்விகள் நீள்கின்றன.

இது சரியா தவறா என்கிற பட்டிமன்றங்கள் அவசியமற்றவை. நேற்றைய தவறுகள் இன்றைய சரிகளாக மாறியும் இருக்கின்றன என்பது வரலாறு.

நாகரீக சமூகங்களில் இப்படி விருப்ப மாறுபாடுகள் தோன்றும் போது அவை விவாகரத்தில் சுமுகமாக முடிந்து மறுமணம் செய்து கொள்வது எளிதாய் நிறைவேறுகின்றது. ஆனால் நமது சமூகத்தில் இத்தகைய உறவுகள் பெரும்பாலும் உயிர்ப்பலியில் முடிகின்றன. அதிகபட்சம் கொலைகளாகவும், குறைந்தபட்சம் தற்கொலைகளாகவும். சமீபத்தில் மதுரையில், உறவுக்குத் தடையாய் இருக்கிறான் என்று ஒரு தாய் 20 வயதுக்கும் மேற்பட்ட தன் மகனை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

அப்படியா இல்லையே என்று கண்மூடிக் கொள்வதால் கண் எதிரே இருப்பவை இல்லாமல் போவதில்லை. எனவே இதைப் பற்றிய வெளிப்படையான விவாதங்களும், ஆய்வுகளும், மனோ தத்துவ ரீதியிலான விளக்கங்களும், புரிந்துணர்வும் அவசியமாகிறது.

இதற்கு முன் இலக்கியத்தில் கூட சில இடங்களில் தான் இது பற்றி கையாளப்பட்டிருக்கிறது. (குறிப்பாக தி.ஜானகிராமனின் சில படைப்புகள்). எங்கேயோ கேட்ட குரல், விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று போன்ற படங்கள் போகிற போக்கில் இது பற்றி பேசுகின்றன.

இந்த கவிதைப் புத்தகத்திற்கான தேவையை மறுக்க இயலாது என்றே படுகின்றது.

சிறிது காலத்திற்கு முன் வந்த கால பைரவனின் கவிதைத் தொகுப்பின் பெயர் என்ன தெரியுமா ‘ஆதிராவின் அம்மாவை நான் ஏன் தான் காதலித்தேனோ?’

  • பொன்.சுதா