சில்லறை வரங்கள்


beach
எலியட்ஸ் பீச் கடற்கரை. வானத்தில் கருமேகங்களுக்கு நடுவில் சற்றே தேய்ந்த பவுர்ணமி. மழைவரும் போல அடிக்கிற காற்றில் ஆர்ப்பரிக்கிற கடல். அலை வந்து திரும்புகிற இடத்தில் நான், சரசுராம், பொன்.சுதா மூவரும் அமர்ந்திருந்தோம். நீண்ட நாட்களுக்கப்புறம் நிகழ்ந்த சந்திப்பின் உற்சாகத்தில் இலக்கியம் திரைப்படம் என்று நிறைய கலந்து நிறைந்திருந்தது பொழுது. சுஜாதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, சதத் ஹஸன் மாண்டோ, கிம்கி டுக், கோங்லி என மானாவாரியாக எடுத்துக் கோர்த்துக்கொண்டிருந்தோம். கடலில் கால் நனைக்கிற கூட்டம், டிஜிட்டல் கேமராக்களின் பளிச்சிடல், தீப்பொறி பறக்க மக்காச்சோள வண்டி, பஞ்சு மிட்டாய் கிணிமணி என்று எதுவும் கவர்ந்து கவனத்தைக் கலைத்துவிடவில்லை.

ஆனால், இடையிடையே மிகப் பெரிய தொந்தரவாக பிச்சைக்காரர்கள். என்றைக்கும் பார்த்திராத அளவுக்கு இன்றைக்கு மிக மிக அதிகமாக. சிறுவர்கள், சிறுமிகள், தூங்கும் குழந்தையை தோளில் போட்ட இளைஞன், வெற்றிலையைக் குதப்பியபடி ஒரு யுவதி, முதுமை தள்ளாட்டத்துடன் மிக வயதானவர்கள் என்று விதவிதமாக, பரவலாக கடற்கரையெங்கும் பிச்சையெடுக்கிறார்கள். திரும்புகிற, நகர்கிற இடமெல்லாம் கண்முன்னே வந்து நிற்கிறார்கள். மனதில் வழக்கமாக ஓடுகிற “கையும் காலும் நல்லாதானே இருக்கு. உழைச்சு சாப்புடறதுக்கென்ன?” மற்றும் “பிச்சைக்காரர்களை என்கரேஜ் பண்றது ரொம்ப தப்பு” போன்ற வசன வரிகளை ஒரு சில சமயம் ஒரு மூன்றாந்தர மனிதாபத்தோடு புறந்தள்ளிவிட்டு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ சில்லறை இருப்பைப் பொறுத்து அளிப்பதும் நடந்துவிடுகிறதுதான்.

இந்தப் ”பெரிய மனசு” எப்போது வெளிப்படுகிறதென்றால் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் மூன்றாவது அல்லது நான்காவது பிச்சைக்காரர் எதிரில் வந்து நிற்கும்போதுதான். முதல் இரண்டு பேரை மேற்கண்ட வசனங்களை மனதிற்குள் ஓடவிட்டு புறக்கணித்து விடுவது வழக்கமாகிவிடுகிறது. மேலும் சில பேர் நகராமல் நின்று கொண்டு தொடந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கும் போது வேறு வழியில்லாமல் ஒரு தப்பித்தலுக்காக கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் மூன்று பேரும் இருந்த சில்லறைகளை தலா ஒருவருக்கோ இருவருக்கோ கொடுத்து காலியாகிவிட்டது.

பேச்சு சுவாரஸ்யமாய் எங்கெங்கோ போய்விட்டிருந்தது. ஒரு கூன்விழுந்த கிழவி அருகில் வந்தாள். அவள் முகம் இருளில் சரியாய்த் தெரியவில்லை. என்னைப்பார்த்து கையை நீட்டினாள். ’செல்லம்.. எதுனா குடுப்பா’ என்றாள். ’பசிக்கிறது’ என்றாள். பேச்சு தடைபட்டதில் நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் போகவில்லை. நண்பர்களும் அவளை விரட்ட முயற்சிக்க, எதுவும் பலிக்கவில்லை. இன்னும் ஈனமான குரலில் “மகனே” என்றாள் என்னைப்பார்த்து.

“போச்சுடா” என்று சிரித்தேன் நான். ”எதுனா குடு மகனே” என்று கெஞ்சல் அதிகமானது. கிழவி போகிற மாதிரி தெரியவில்லை.

“மகனேஏஏஏஏ.. செல்லம்ம்ம்ம்ம்ம்..”

இதென்ன வம்பாகப் போயிற்று என்று நினைத்தேன். என்னையே குறிவைத்து செண்டிமெண்டாய் அம்புவிடுகிற கிழவியை நிமிர்ந்து பார்த்தேன். அவள் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்து நகர்கிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் ”மகனேஏஏ” என்றாள். அதற்குமேல் தாங்காதவனாக நான் சில்லறையைத் தேட நல்ல வேளையாக ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடைத்தது. ‘இந்தா..” என்று கொடுத்தேன்.

“மவராசனா இரு.. உனக்கு நல்லதா ஒருத்தி பொண்டாட்டியா வருவா” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

இன்னொரு நல்ல பெண்டாட்டியா?