நீ மேகம் ஆனால் என்ன?
அபபோது எனக்கு என்ன வயது என்று தெரியாது
– சத்யராஜ்குமார்
ஆனால் ஒண்ணாம் வகுப்புகூட சேரவில்லை. சமத்தூர் அரண்மனை வீதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். தினமும் சாயங்காலம் ஆனால் ஓலை கொட்டகையில் பாட்டு வைப்பார்கள். ஒரு நான்கு பாடல்கள். அதற்குப் பின்னால் உள்ளே ரிக்கார்டு போட்டு விட்டார்கள் என்று அவசர அவசரமாக சினிமாவுக்கு ஓடுவார்கள். எங்கள் வீட்டில் எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப்போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் மட்டுமே தெரியும். ஒரு நாள் ஏதோ ஷூட்டிங் எடுப்பதாகச் சொன்னார்கள்
படத்தின் பேர் தாயில்லாக் குழந்தை. விஜயகுமார் கதாநாயகன். கதாநாயகி ஜெயசித்ரா. அரண்மனை வீதி கூட்டத்தில் நிறைந்தது. மாட்டு வண்டி ரேஸ் காட்சிக்காக நிறைய மாட்டு வண்டிகள் வந்திருந்தன.
வரிசையாக மாட்டு வண்டிகள் நிற்க ஒரு ஆள் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். திருவிழாக் கூட்டம் போல மக்கள் இரண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நான் கால்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தர் இரக்கப்பட்டு எனக்கு வழி விட நான் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அடுத்த நாள் மாட்டு வண்டிகள் ஒவ்வொன்றாக ஓடின. மற்றொருநாள் வரிசையாக கார்கள் வந்தன
ஒரு காரில் ஜெயசித்ரா வந்தார். கலர் பொம்மை மாதிரி எனக்குத் தெரிந்தார். விஜயகுமாரைப் பார்க்க முடியவில்லை. நான் காமிராவைப் பார்த்தேன். அந்தப் படம் ஒரு நாள் எங்கள் ஊர் ஓலைக் கொட்டகைக்கு வந்தது.
எல்லாரும் ஓடிஓடிப் பார்த்தார்கள். நான் பள்ளிக்கூடம் போகத் துவங்கியிருந்த சமயம். எங்கள் வீட்டில் அழைத்துப் போகவில்லை. வகுப்பில் அந்தப் படத்தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டார்கள். நான் வீட்டில் சினிமாவுக்கு கூட்டிப் போகச் சொன்னேன். அப்பா அனுமதிக்கவில்லை. படத்தில் நாங்கள் குடியிருந்த வீடெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு அதைப் பர்க்க ஆசையாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தப் படம் கருப்பு வெள்ளையா? ஈஸ்ட்மெண்ட் கலரா என்றுகூடத் தெரியாது. ஆனால் ஒரு பாட்டு மட்டும் நினைவில் இருக்கிறது. நீ மேகம் ஆனால் என்ன? நான் தோகை ஆன பின்னே… எப்போதாவது டிவியில் போடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
- கனகராஜன்
சித்ரன் 11:31 பிப on செப்ரெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
கனகு, சுத்தமாய் விவரம் தெரியாத குட்டிப் பையனாய் இருந்தபோது அப்பா அம்மாவுடன் டெண்ட் கொட்டகையில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களின் தலைப்புகள் ஒரு சில தெள்ளத்தெளிவாய் ஞாபகம் இருக்கின்றன. அவள் ஒரு தொடர்கதை, தாலியா சலங்கையா, மயங்குகிறாள் ஒரு மாது, தீபம் அவைகளில் சில. ஆனால் கதையோ நடிகர்களோ சுத்தமாய் நினைவில்லை.
சித்ரன்
http://chithran.com
கனகராஜன் 6:51 முப on செப்ரெம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் |
இப்போது ஓலைக் கொட்டைககளே இல்லாமல் போய்விட்டன ரகு.
REKHA RAGHAVAN 11:56 பிப on செப்ரெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். சின்ன வயசில் நடந்த சம்பவங்களை அசை போடுவதில் எல்லோருக்கும் ஒரு அலாதி பிரியம்தான் (என்னையும் சேர்த்து).
ரேகா ராகவன்.
கனகராஜன் 6:52 முப on செப்ரெம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் |
உண்மைதான் ராகவன் சார்