சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2


சாவி, இதயம் போன்ற பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த சமயம். நான் கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த என் உறவினர் ஒருவர் நான் கதைகள் எழுதுவதை அறிந்து, ‘உங்களுக்கு பூங்கோதை தெரியுமா?’ என்று கேட்டார். பத்திரிகையாளர். சிறுகதைகள், புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி குடும்ப நல ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்ததுண்டு.

‘தெரியும்.’

‘அவரை சந்திச்சுப் பேச இஷ்டமிருந்தா சொல்லுங்க.’ என்றார்.

ஒரு மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் சாயிபாபா காலனியிலிருந்த பூங்கோதையின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவரை முன்னமே ஓரிரு சந்தர்ப்பங்களில் பிற இடங்களில் பார்த்திருந்தாலும், அந்த பத்தொன்பது வயதில் ஒரு எழுத்தாளனாக, எனக்கென்ற ஒரு தனி அடையாளத்தோடு போய் சந்திப்பது கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

கம்பீரமான குரலில் பேசுவார். பேச்சில் தன்னம்பிக்கை இருக்கும். இன்ட்டெலக்ச்சுவல் தோற்றம்.

அந்த சமயத்தில் எப்போதும் என் கையில் ஒரு புதிய சிறுகதை இருக்கும். படித்து அபிப்ராயம் சொல்வதற்காக அவரிடம் கொடுத்தேன். சிறுகதையை வாசித்து முடித்தவர், ”சிறுகதையின் வெற்றி படிச்சு முடிச்சவுடன் அது தரும் இம்ப்பாக்ட்டில் இருக்கு. இந்தக் கதையின் samsமுடிவில் இன்னும் கொஞ்சம் இம்பாக்ட் இருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்றார். இதைத் தவிர சிறுகதையின் முக்கிய திருப்பமாக ஒரு கதாபாத்திரம் இறந்து போவதற்கு வலுவான காரணங்களை கதையின் முன் பகுதியில் நான் குறிப்பிடாததையும் சுட்டிக் காட்டினார். அதுகாறும் பிரசுரமாகியிருந்த நாலைந்து சிறுகதைகளை எழுதிய போது அது தரும் தாக்கத்தைப் பற்றியோ, சம்பவங்கள் குறித்த தர்க்கத்தைப் பற்றியோ நான் யோசித்ததில்லை.

அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் பிரசுரமான கதைகளையும், பிரசுரமாகாமல் திரும்பி வந்த கதைகளையும் படித்துப் பார்த்தேன். பிரசுரமான கதைகளில் இயல்பாகவே லாஜிக் சரியாக இருந்தது. கதையில் நல்ல இம்பாக்ட் இருந்தது. பிரசுரிக்க இயலாத கதைகளில் இயல்புத்தன்மை இல்லை. அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கரு இல்லை.

பூங்கோதையின் ஆலோசனைகளுக்கேற்ப கதையை மாற்றி எழுதிய பின், திரு வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் வார இதழில் அக்கதை பிரசுரமானது. அதற்கப்புறம் பல வருஷங்களுக்குப் பின் குமுதம் நடத்திய மாவட்ட சிறுகதைப் போட்டி வளாகத்தில் எழுதுபவர் மத்தியில் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்தித்தேன். போட்டியில் பங்கு பெற வந்திருந்த லேகா ரத்னகுமார் உள்ளிட்ட அவர் தோழிகள் சிலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சந்திப்புகளில் என்ன சர்ப்ரைஸ்? அது இனிமேல்தான் வருகிறது. இங்கே அமெரிக்காவில் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஸாம்ஸ் க்ளப் என்னும் மொத்த அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது என் எதிரே ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு வந்தார் பூங்கோதை.

அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நானே அவர் முன்னால் போய் நின்று, ”நீங்க பூங்கோதைதானே?” என்றேன். கடைத் தெருவில் தெரிந்தவர்களை எதேச்சையாய்ப் பார்ப்பது நம் ஊரில் அதிசயமில்லை. ஆனால் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!

அதற்கப்புறம் பேமிலி கெட்-டு-கெதர்களில் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். பத்திரிகைகளுடனான தொடர்புகள் தற்சமயம் முற்றிலுமாக இல்லை என்றார். என்னைப் போலவே!

  • சத்யராஜ்குமார்

சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1