என்னை அடி


சைக்கோ என்பவர்கள் அடுத்தவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்கள். மாஸோகிஸ்டு என்பவர்கள் தன்னைத் தானே வருத்திக் கொண்டு இன்பம் காண்பவர்கள்.
kaanavillai
இருவரும் ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, “என்னை அடி” என்றான் மாஸோகிஸ்ட்.

“முடியாது” என்று குரூரமாய் தலையாட்டினான் சைக்கோ.

மீனாட்சி சுந்தரம் எழுதாமல் போனதற்காக இன்னமும் வருந்துகிறேன். கலகலவென எழுதி அசத்தக் கூடியவர். ஆரம்பத்தில் சரசுராமும், இவரும் ‘மீரா கீத்தம்’ என்ற பெயரில் பத்திரிகைகளில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார்கள். நானும், இவரும் சேர்ந்து ‘சத்யம்-சுந்தரம்’ என்ற பெயரில் கல்கியிலும், குமுதத்திலும் எழுதியிருக்கிறோம். இனி இங்கே இவர் எழுத்துக்களை அவ்வப்போது பார்க்கலாம்.

-சத்யராஜ்குமார்

மனோ வியாதிகள் இப்படித்தான் பலப்பல இருக்கின்றன.

கைகளையோ, சாப்பாட்டுத் தட்டையோ அழுக்குப் போன பின்பும் அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கழுவுகிறோம், பூட்டிய பிறகு பூட்டைப் பத்துப் பதினைந்து முறை இழுத்துப் பார்க்கிறோம். அதற்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட் போவதற்குள் ‘ சரியாய் பூட்டினோமா’ என்ற சந்தேகம் நான்கைந்து தடவை யோசிக்க வைக்கிறது.

சில சமயங்கள் நம்மை அறியாமல் தனியே பேசிவிடுகிறோம்.

இதெல்லாம் மனவியாதியா தெரியவில்லை. மனோவியாதியாய் இருந்தாலும் அடுத்தவரைப் பாதிக்காத வரை பிரச்சனையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இதே போன்ற பிரச்சனையில்லாத மனோவியாதியின் பின்னனியில் உள்ள குரூரம் சிலசமயம் திகைப்படைய வைக்கிறது.

சென்னை பஸ்ஸில் போகும் போது பார்த்தது இது.

பஸ்ஸில் ஆறேழு இடங்களில் ஒட்டியிருந்த காணவில்லை பிட் நோட்டிஸில் அழகான ஓரு சிறுவனின் படம். பக்கத்தில் ‘ ராஜேஷ் என்ற இந்த நான்குவயது சிறுவனை கடந்த இத்தனாம் தேதியிலிருந்து காணவில்லை. காண்பவர்கள் கீழ்கண்ட முகவரிக்கோ, எண்ணுக்கோ தகவல் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் பஸ்ஸில் ஒட்டியிருந்த ஆட்கள் தேவை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலைசெய்தால் போதும் நாலாயிரம் ரூபாய் சம்பளம், மறைவான இடத்தில் பிரச்சனையா அணுகவும், உடல் பெருக்க இளைக்க நோட்டிஸ்கள் எல்லாம் அச்சு அழியாமல் அப்படியே இருக்க, இந்த காணவில்லை நோட்டிஸில் தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி, தொலைப்பேசி எண்கள் மட்டும் கிழித்தெடுக்கப் பட்டிருந்தது. ஒன்றில் மட்டுமல்ல அனைத்திலும்.

கொலை செய்வதை விடக் குரூரமல்லவா இது.

  • மீனாட்சி சுந்தரம்