Updates from செப்ரெம்பர், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 8:31 pm on September 14, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2 

  சாவி, இதயம் போன்ற பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த சமயம். நான் கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த என் உறவினர் ஒருவர் நான் கதைகள் எழுதுவதை அறிந்து, ‘உங்களுக்கு பூங்கோதை தெரியுமா?’ என்று கேட்டார். பத்திரிகையாளர். சிறுகதைகள், புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி குடும்ப நல ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்ததுண்டு.

  ‘தெரியும்.’

  ‘அவரை சந்திச்சுப் பேச இஷ்டமிருந்தா சொல்லுங்க.’ என்றார்.

  ஒரு மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் சாயிபாபா காலனியிலிருந்த பூங்கோதையின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவரை முன்னமே ஓரிரு சந்தர்ப்பங்களில் பிற இடங்களில் பார்த்திருந்தாலும், அந்த பத்தொன்பது வயதில் ஒரு எழுத்தாளனாக, எனக்கென்ற ஒரு தனி அடையாளத்தோடு போய் சந்திப்பது கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

  கம்பீரமான குரலில் பேசுவார். பேச்சில் தன்னம்பிக்கை இருக்கும். இன்ட்டெலக்ச்சுவல் தோற்றம்.

  அந்த சமயத்தில் எப்போதும் என் கையில் ஒரு புதிய சிறுகதை இருக்கும். படித்து அபிப்ராயம் சொல்வதற்காக அவரிடம் கொடுத்தேன். சிறுகதையை வாசித்து முடித்தவர், ”சிறுகதையின் வெற்றி படிச்சு முடிச்சவுடன் அது தரும் இம்ப்பாக்ட்டில் இருக்கு. இந்தக் கதையின் samsமுடிவில் இன்னும் கொஞ்சம் இம்பாக்ட் இருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்றார். இதைத் தவிர சிறுகதையின் முக்கிய திருப்பமாக ஒரு கதாபாத்திரம் இறந்து போவதற்கு வலுவான காரணங்களை கதையின் முன் பகுதியில் நான் குறிப்பிடாததையும் சுட்டிக் காட்டினார். அதுகாறும் பிரசுரமாகியிருந்த நாலைந்து சிறுகதைகளை எழுதிய போது அது தரும் தாக்கத்தைப் பற்றியோ, சம்பவங்கள் குறித்த தர்க்கத்தைப் பற்றியோ நான் யோசித்ததில்லை.

  அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் பிரசுரமான கதைகளையும், பிரசுரமாகாமல் திரும்பி வந்த கதைகளையும் படித்துப் பார்த்தேன். பிரசுரமான கதைகளில் இயல்பாகவே லாஜிக் சரியாக இருந்தது. கதையில் நல்ல இம்பாக்ட் இருந்தது. பிரசுரிக்க இயலாத கதைகளில் இயல்புத்தன்மை இல்லை. அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கரு இல்லை.

  பூங்கோதையின் ஆலோசனைகளுக்கேற்ப கதையை மாற்றி எழுதிய பின், திரு வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் வார இதழில் அக்கதை பிரசுரமானது. அதற்கப்புறம் பல வருஷங்களுக்குப் பின் குமுதம் நடத்திய மாவட்ட சிறுகதைப் போட்டி வளாகத்தில் எழுதுபவர் மத்தியில் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்தித்தேன். போட்டியில் பங்கு பெற வந்திருந்த லேகா ரத்னகுமார் உள்ளிட்ட அவர் தோழிகள் சிலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

  இந்த சந்திப்புகளில் என்ன சர்ப்ரைஸ்? அது இனிமேல்தான் வருகிறது. இங்கே அமெரிக்காவில் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஸாம்ஸ் க்ளப் என்னும் மொத்த அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது என் எதிரே ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு வந்தார் பூங்கோதை.

  அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நானே அவர் முன்னால் போய் நின்று, ”நீங்க பூங்கோதைதானே?” என்றேன். கடைத் தெருவில் தெரிந்தவர்களை எதேச்சையாய்ப் பார்ப்பது நம் ஊரில் அதிசயமில்லை. ஆனால் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!

  அதற்கப்புறம் பேமிலி கெட்-டு-கெதர்களில் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். பத்திரிகைகளுடனான தொடர்புகள் தற்சமயம் முற்றிலுமாக இல்லை என்றார். என்னைப் போலவே!

  • சத்யராஜ்குமார்

  சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1


   
  • REKHA RAGHAVAN 1:30 முப on செப்ரெம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!//
   உண்மைதான். அடிக்கடி சந்திப்பதை விட சிறிது இடைவெளியில் நண்பர்களை சந்திப்பதில் உள்ள கிக் இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அருமையான பதிவு.

   ரேகா ராகவன்.

 • கனகராஜன் 9:27 pm on September 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  நீ மேகம் ஆனால் என்ன? 

  அபபோது எனக்கு என்ன வயது என்று தெரியாது

  கனகராஜன் ஆர்ப்பாட்டமில்லாத எழுத்துக்கு சொந்தக்காரர். அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் இந்த ஆண்டு இரண்டாம் பரிசுக்குரிய கதை எழுதியிருக்கிறார். ஏற்கெனவே சில வருஷங்களுக்கு முன்பு முதல் பரிசு வாங்கியுள்ளார். 90-களின் மத்தியில் நானும் இவரும் சத்யராஜ்-கனகராஜ் என்ற பெயரில் இணைந்து எழுதிய குறுநாவல் ஒன்று கலைமகளில் பரிசு பெற்றிருக்கிறது. இந்தப் பதிவில் துவங்கி இவரும் ‘இன்று – Today’ எழுத்தாளராகிறார்.
  – சத்யராஜ்குமார்

  ஆனால் ஒண்ணாம் வகுப்புகூட சேரவில்லை. சமத்தூர் அரண்மனை வீதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். தினமும் சாயங்காலம் ஆனால் ஓலை கொட்டகையில் பாட்டு வைப்பார்கள். ஒரு நான்கு பாடல்கள். அதற்குப் பின்னால் உள்ளே ரிக்கார்டு போட்டு விட்டார்கள் என்று அவசர அவசரமாக சினிமாவுக்கு ஓடுவார்கள். எங்கள் வீட்டில் எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப்போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் மட்டுமே தெரியும். ஒரு நாள் ஏதோ ஷூட்டிங் எடுப்பதாகச் சொன்னார்கள்
  mgr
  படத்தின் பேர் தாயில்லாக் குழந்தை. விஜயகுமார் கதாநாயகன். கதாநாயகி ஜெயசித்ரா. அரண்மனை வீதி கூட்டத்தில் நிறைந்தது. மாட்டு வண்டி ரேஸ் காட்சிக்காக நிறைய மாட்டு வண்டிகள் வந்திருந்தன.

  வரிசையாக மாட்டு வண்டிகள் நிற்க ஒரு ஆள் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். திருவிழாக் கூட்டம் போல மக்கள் இரண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நான் கால்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தர் இரக்கப்பட்டு எனக்கு வழி விட நான் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அடுத்த நாள் மாட்டு வண்டிகள் ஒவ்வொன்றாக ஓடின. மற்றொருநாள் வரிசையாக கார்கள் வந்தன

  ஒரு காரில் ஜெயசித்ரா வந்தார். கலர் பொம்மை மாதிரி எனக்குத் தெரிந்தார். விஜயகுமாரைப் பார்க்க முடியவில்லை. நான் காமிராவைப் பார்த்தேன். அந்தப் படம் ஒரு நாள் எங்கள் ஊர் ஓலைக் கொட்டகைக்கு வந்தது.

  எல்லாரும் ஓடிஓடிப் பார்த்தார்கள். நான் பள்ளிக்கூடம் போகத் துவங்கியிருந்த சமயம். எங்கள் வீட்டில் அழைத்துப் போகவில்லை. வகுப்பில் அந்தப் படத்‍தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டார்கள். நான் வீட்டில் சினிமாவுக்கு கூட்டிப் போகச் சொன்னேன். அப்பா அனுமதிக்கவில்லை. படத்தில் நாங்கள் குடியிருந்த வீடெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு அதைப் பர்க்க ஆசையாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தப் படம் கருப்பு வெள்ளையா? ஈஸ்ட்மெண்ட் கலரா என்றுகூடத் தெரியாது. ஆனால் ஒரு பாட்டு மட்டும் நினைவில் இருக்கிறது. நீ மேகம் ஆனால் என்ன? நான் தோகை ஆன பின்னே… எப்போதாவது டிவியில் போடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • கனகராஜன்
   
  • சித்ரன் 11:31 பிப on செப்ரெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   கனகு, சுத்தமாய் விவரம் தெரியாத குட்டிப் பையனாய் இருந்தபோது அப்பா அம்மாவுடன் டெண்ட் கொட்டகையில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களின் தலைப்புகள் ஒரு சில தெள்ளத்தெளிவாய் ஞாபகம் இருக்கின்றன. அவள் ஒரு தொடர்கதை, தாலியா சலங்கையா, மயங்குகிறாள் ஒரு மாது, தீபம் அவைகளில் சில. ஆனால் கதையோ நடிகர்களோ சுத்தமாய் நினைவில்லை.

   சித்ரன்
   http://chithran.com

  • REKHA RAGHAVAN 11:56 பிப on செப்ரெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். சின்ன வயசில் நடந்த சம்பவங்களை அசை போடுவதில் எல்லோருக்கும் ஒரு அலாதி பிரியம்தான் (என்னையும் சேர்த்து).

   ரேகா ராகவன்.

 • சித்ரன் ரகுநாத் 5:47 am on September 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  சில்லறை வரங்கள் 

  beach
  எலியட்ஸ் பீச் கடற்கரை. வானத்தில் கருமேகங்களுக்கு நடுவில் சற்றே தேய்ந்த பவுர்ணமி. மழைவரும் போல அடிக்கிற காற்றில் ஆர்ப்பரிக்கிற கடல். அலை வந்து திரும்புகிற இடத்தில் நான், சரசுராம், பொன்.சுதா மூவரும் அமர்ந்திருந்தோம். நீண்ட நாட்களுக்கப்புறம் நிகழ்ந்த சந்திப்பின் உற்சாகத்தில் இலக்கியம் திரைப்படம் என்று நிறைய கலந்து நிறைந்திருந்தது பொழுது. சுஜாதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, சதத் ஹஸன் மாண்டோ, கிம்கி டுக், கோங்லி என மானாவாரியாக எடுத்துக் கோர்த்துக்கொண்டிருந்தோம். கடலில் கால் நனைக்கிற கூட்டம், டிஜிட்டல் கேமராக்களின் பளிச்சிடல், தீப்பொறி பறக்க மக்காச்சோள வண்டி, பஞ்சு மிட்டாய் கிணிமணி என்று எதுவும் கவர்ந்து கவனத்தைக் கலைத்துவிடவில்லை.

  ஆனால், இடையிடையே மிகப் பெரிய தொந்தரவாக பிச்சைக்காரர்கள். என்றைக்கும் பார்த்திராத அளவுக்கு இன்றைக்கு மிக மிக அதிகமாக. சிறுவர்கள், சிறுமிகள், தூங்கும் குழந்தையை தோளில் போட்ட இளைஞன், வெற்றிலையைக் குதப்பியபடி ஒரு யுவதி, முதுமை தள்ளாட்டத்துடன் மிக வயதானவர்கள் என்று விதவிதமாக, பரவலாக கடற்கரையெங்கும் பிச்சையெடுக்கிறார்கள். திரும்புகிற, நகர்கிற இடமெல்லாம் கண்முன்னே வந்து நிற்கிறார்கள். மனதில் வழக்கமாக ஓடுகிற “கையும் காலும் நல்லாதானே இருக்கு. உழைச்சு சாப்புடறதுக்கென்ன?” மற்றும் “பிச்சைக்காரர்களை என்கரேஜ் பண்றது ரொம்ப தப்பு” போன்ற வசன வரிகளை ஒரு சில சமயம் ஒரு மூன்றாந்தர மனிதாபத்தோடு புறந்தள்ளிவிட்டு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ சில்லறை இருப்பைப் பொறுத்து அளிப்பதும் நடந்துவிடுகிறதுதான்.

  இந்தப் ”பெரிய மனசு” எப்போது வெளிப்படுகிறதென்றால் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் மூன்றாவது அல்லது நான்காவது பிச்சைக்காரர் எதிரில் வந்து நிற்கும்போதுதான். முதல் இரண்டு பேரை மேற்கண்ட வசனங்களை மனதிற்குள் ஓடவிட்டு புறக்கணித்து விடுவது வழக்கமாகிவிடுகிறது. மேலும் சில பேர் நகராமல் நின்று கொண்டு தொடந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கும் போது வேறு வழியில்லாமல் ஒரு தப்பித்தலுக்காக கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் மூன்று பேரும் இருந்த சில்லறைகளை தலா ஒருவருக்கோ இருவருக்கோ கொடுத்து காலியாகிவிட்டது.

  பேச்சு சுவாரஸ்யமாய் எங்கெங்கோ போய்விட்டிருந்தது. ஒரு கூன்விழுந்த கிழவி அருகில் வந்தாள். அவள் முகம் இருளில் சரியாய்த் தெரியவில்லை. என்னைப்பார்த்து கையை நீட்டினாள். ’செல்லம்.. எதுனா குடுப்பா’ என்றாள். ’பசிக்கிறது’ என்றாள். பேச்சு தடைபட்டதில் நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் போகவில்லை. நண்பர்களும் அவளை விரட்ட முயற்சிக்க, எதுவும் பலிக்கவில்லை. இன்னும் ஈனமான குரலில் “மகனே” என்றாள் என்னைப்பார்த்து.

  “போச்சுடா” என்று சிரித்தேன் நான். ”எதுனா குடு மகனே” என்று கெஞ்சல் அதிகமானது. கிழவி போகிற மாதிரி தெரியவில்லை.

  “மகனேஏஏஏஏ.. செல்லம்ம்ம்ம்ம்ம்..”

  இதென்ன வம்பாகப் போயிற்று என்று நினைத்தேன். என்னையே குறிவைத்து செண்டிமெண்டாய் அம்புவிடுகிற கிழவியை நிமிர்ந்து பார்த்தேன். அவள் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்து நகர்கிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் ”மகனேஏஏ” என்றாள். அதற்குமேல் தாங்காதவனாக நான் சில்லறையைத் தேட நல்ல வேளையாக ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடைத்தது. ‘இந்தா..” என்று கொடுத்தேன்.

  “மவராசனா இரு.. உனக்கு நல்லதா ஒருத்தி பொண்டாட்டியா வருவா” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

  இன்னொரு நல்ல பெண்டாட்டியா?

   
  • REKHA RAGHAVAN 6:18 முப on செப்ரெம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //இன்னொரு நல்ல பெண்டாட்டியா?//

   “போச்சுடா! இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் எழுந்து போயிடலாம்னு. கேட்டீங்களா?”.
   (ஹீ..ஹீ…இது நீங்க பேசினது இல்லீங்க. சும்மா நானே கற்பனை செஞ்சுக்கிட்டது.)

   ரேகா ராகவன்.

  • Sentil 2:28 பிப on செப்ரெம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Chitran Sir,
   Beggars seems to become creative in their profession. 🙂 .
   Many times I tired them to engage in doing some public work, like cleaning the plastics or wastes around before paying, but they prefer to scold me including my previous generation before exiting.

   • சித்ரன் 11:22 முப on செப்ரெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    Thanks Rekha Ragavan, Bala & Sentil.
    நடு ட்ராஃப்பிக்கில் உடம்பில் வளையம் மாட்டி பல்டியடித்துக்கொண்டிருந்த சின்னப் பெண்ணுக்கு காரிலிருந்த ஒருவர் பத்துரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்தேன் இன்று.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி