Updates from ஒக்ரோபர், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சத்யராஜ்குமார் 6:31 pm on October 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  மில்லியன் காலத்துப் பயிர் 

  கிழிந்த ஆடைகளுடன் அலங்கோலமாய் நின்றிருந்தாள்.

  அழக் கூட திராணி இல்லாமல் வற்றிப் போயிருந்தன கண்கள். உடம்பு பூராவும் சிகரட்டால் சுட்டதைப் போல வடுக்கள்.

  உடைந்து போன குரலில் சொன்னாள். ”அவனோட நான் பட்ட கஷ்டம் போதும்ப்பா. இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது.”

  ‘பொறுத்துப் போம்மா.’ என்னும் அறிவுரை இனி செல்லுபடியாகுமா என்று சந்தேகமாய் இருந்தது.
  pencil_photos08_thumb
  கல்யாண நாள் இன்னும் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. எவ்வளவு அழகாய் இருந்தாள். ஜரிகை நெளியும் பச்சைப் பட்டுப்புடவை உடம்பை சுற்றியிருக்க, மேனியெங்கும் மின்னும் ஆபரணம். சூரிய ஜொலிப்புடன் புன்னகை.

  இன்றைக்கு காய்ந்த கருவாடு போல பொலிவில்லாமல் நிற்கிறாள்.

  சே! புத்தியில்லாத அந்த பேராசைக்கார மனிதனுக்கு இவளை தாரை வார்த்திருக்கக் கூடாது.

  இவளை சீண்டி சீண்டி இன்றைக்கு ஒரு மூலையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.

  ”அம்மா, இன்னும் ஒரே ஒரு தடவை…”

  சொல்லி முடிக்கும் முன் அவள் வெடித்தாள். ”இதோட எத்தனை ஒரு தடவை ஆயிருச்சு? அவன் திருந்துவான்னு நம்பறிங்களா?”

  அவளுக்குள் தகிக்கும் கோபத்தின் உஷ்ணம் அனலாக மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது.

  அவ்வப்போது அவன் கொடுமை தாங்காமல் மிக லேசாய் அவள் வெளிப்படுத்தின சமிக்ஞைகள் கூட அவனுக்கு உறைத்த மாதிரி தெரியவில்லை.

  மவுனமாய் தலையசைத்தேன். ”இது நாள் வரை உன்னை பொறுமையா இருக்கச் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடும்மா. அனுபவத்திலிருந்து பாடம் கத்துக்காதவனை காப்பாத்தி என்ன பிரயோஜனம்? உன் இஷ்டம் போல செய்.”

  பூமிகா வேகமாக திரும்பினாள். அவள் கோபத்தின் வெளிப்பாடு மாபெரும் பூகம்பமா அல்லது கடலைப் புரட்டிப் போடும் சுனாமியா என்று நான் கடவுளாயினும் இப்போது சொல்ல இயலாது.

  • சத்யராஜ்குமார்

  [உருவகக் கதை]


  சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை


   
 • சித்ரன் ரகுநாத் 11:16 am on October 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அபார்ட்மெண்ட், குழந்தைகள்,   

  கதவைத் திற. குழந்தைகள் வரட்டும்! 

  child-doorபெரும்பாலும் மூடிக்கிடக்கிற கதவுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகள். சாத்திய கதவுகளுக்குப் பின் தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு அதில் ராஜாவாக ராணியாக இளவரசர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள். அடுத்தவர் வீடுகளிலிருந்து வருவது பிரியாணி வாசமானாலும், எலெக்ட்ரிக் ஒயர் கருகுகிற வாசமானாலும் கவலைப்படாமல் மானாட மயிலாட-வில் மூழ்குபவர்கள். சென்னைப் பெருநகரில் இந்த மாதிரி அபார்ட்மெண்ட் ஒன்றில் வேறு வழியில்லாமல் வசிக்க நேர்ந்துவிடுகிற அவலத்தில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் உண்டு. அவைகளில் மிக முக்கியமாய் குழந்தைகள்.

  பக்கத்து வீட்டுக்கு ஒரு இளம் தம்பதியினர் ஒரு தவழ்கிற குழந்தையுடன் குடிவந்தபோது அவர்களுக்கும் சாத்தின கதவுகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது அப்பாடா, தொல்லை விட்டது என்று நிம்மதியாகக்கூட உணர்ந்திருக்கலாம். அப்புறம் கொஞ்சமாய் இருபத்தியிரண்டரை டிகிரி திறந்திருந்த எங்கள் கதவு வழியே மெதுவாய் பரவியது நட்பு. அபார்ட்மெண்டின் மூன்று தளங்களையும் அதகளம் பண்ணி, மாதமிரண்டு என்ற கணக்கில் ட்யூப்லைட்டுகளை உடைத்து விளையாடும் என் பையன் மற்றும் அவன் சகாக்கள் முன்பெல்லாம் பாதி நேரம் எங்கள் வீட்டுக்குள்தான் இருப்பார்கள் என்பதால் நிறைய அம்மா அப்பாக்களுக்கு பரிச்சயப்பட்டவர்களாய் இருந்தோம். பொடிசுகளைக் காணோம் என்றால் நேராய் இங்கே வந்து விசாரிக்கும் அளவுக்கு. விசாரிப்புக்குப் பின் ஐந்து நிமிடங்களாவது அரட்டை.

  பக்கத்து வீட்டுக்கு குடிவந்த அந்த 7 மாதக் குழந்தை முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு அதன் அம்மாவுடன் வந்து அமைதியே திருவுருவாய் ஒரே இடத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்தது. எப்போதாவது கொஞ்சமாய்த் தவழும். அவ்வளவுதான். ஓரிடத்தில் உட்காருவதுதான் நமக்குப் பிடிக்காத விஷயமாயிற்றே? அதுவும் சும்மா! விடுவானேன். அக்குள்களில் துண்டால் வளைத்துப் பிடித்து ”நடரா ராசா” என்று ஒருநாள் நடக்கப் பழக்கினேன். கம்ப்யூட்டரில் உட்காரவைத்து கூகிளிலிருந்து ஆப்பிளைக் காண்பித்தேன். உடனே ”ஆப்பி” என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டது. ‘வேண்டும்’ என்பதை “ஈனும்” என்றும் ‘வேண்டாம்’ என்பதை “மானா” என்றும் சொல்லப் பழகியது. நடக்க ஆரம்பித்தபிறகு நான் “அப் அப்” என்று சொல்ல சேர் மேல் ஏற ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்த குழந்தை பிறகு ஓடவும் ஆரம்பித்தது. எல்லாமே என் பையன் வளரும் போது பார்த்ததுதான் என்றாலும் ஆச்சரியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பையனும் அவன் செய்கைகளை, குறும்புகளை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

  குழந்தைகள் வேகமாகக் கற்றுக் கொள்கின்றன. நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன. சட்டென்று பதில் சொல்லிவிட முடியாத வகையில் நிறைய கேள்விகள் கேட்கின்றன. அந்தக் குழந்தை அவனது ஜியாலஜிஸ்ட் அப்பா மாதிரியே நல்ல புத்திசாலி. நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த ஒன்றரை வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டு வளர்ந்தும் விட்டான். ஒரு மொட்டை, ஒரு ஹேர் கட்டுக்கு அப்புறம் பெரிய பையன் மாதிரி தோற்றமும் வந்துவிட்டது. மழலையாய் ஒற்றை வார்த்தைகளில் புற உலகோடு தொடர்பு கொண்டிருந்தவன் அப்புறம் ரெண்டு வார்த்தைகள் சேர்த்தார்போல் பேசக் கற்றுக்கொண்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரிய வாக்கியங்களாகவும் பேச ஆரம்பித்துவிட்டான். நேற்று அவன் ஏதோ குறும்பு செய்தபோது தங்கமணி “அங்கிள் பார்த்தா அடி பிச்சுருவாரு” என்று செல்லமாய் கண்களை உருட்ட, அது கெஞ்சுகிற குரலில் “தய்சவேது அடிக்க மானா” என்றது. உங்களுக்குப் புரிகிறதா? ச்சோ ஸ்வீட்.

  குழந்தைகளோடு விளையாடும்போது பெரியவர்களின் ’ஸ்ட்ரெஸ்’ எனப்படும் சமாச்சாரம் பெருமளவு குறைகிறது. அதற்கான simple rule நாமும் விளையாடும்போது குழந்தையாக மாறிவிடவேண்டும் என்பதே. ’ஸ்ட்ரெஸ்’ நிறைய குறைய வேண்டுமென்றால் குப்புறப் படுத்துக்கொண்டு குழந்தையை முதுகின் மேலேறி மிதிக்க அல்லது குதிக்கச் சொன்னால் போதும். (முதுகுத்தண்டு பிரச்சினையிருப்பவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பிறகு பெண்டு கழன்றுவிடும் என்றும் எச்சரிக்கிறேன்)

  அப்பார்ட்மெண்டுகளில் பெரியவர்களின் அக்கப்போர் வேண்டாமென்றால் வேண்டாம். ஆனால் குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது.

  -சித்ரன்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
  • woven 6:40 பிப on ஒக்ரோபர் 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   குழந்தைகள் சண்டை பெற்றோர் சண்டையாக மாறாமல் இருக்க என்ன் செய்கிறீர்கள்? தன்னை விட வயது குறைந்த குழந்தைகளை அடித்தும், மிரட்டும் bullish குழந்தைகளை எப்படி கையாள்வது ? இப்படியான கேள்விகள் கதவை திறந்தால் வருகிறதே.

   • REKHA RAGHAVAN 4:26 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    //குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது//

    ஆஹா பேஷா செய்யலாம். நான் ரெடி. பயனுள்ள பதிவு.

    ரேகா ராகவன்.

   • Chandrasekkar C.S. 5:13 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    அதற்கு ஒரு வழி உள்ளதாகவே தெரிகிறது. அது – கதவுடன் சேர்ந்து மனதையும் திறந்து வைத்துக்கொள்வது தான்…

    • அமிர்தவர்ஷினி அம்மா 6:28 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம்

     ரசித்துப் படித்த பதிவு. குழந்தைகள் பற்றி பேசினாலோ, எழுதினாலோ இன்றைக்கெல்லாம் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம் 🙂

    • சித்ரன் 7:20 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம்

     நன்றி! அமிர்தவர்ஷினியம்மா! நீங்கள் சொல்வது சரியே. அதே மாதிரி குழந்தைகளுடன் பழகி அவர்களை நம்பால் ஈர்ப்பதும் ஒரு கலையே.

  • சந்தனமுல்லை 5:14 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நல்ல இடுகை, குழந்தைகளைப்போலவே!! /நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன/ குழந்தைகளிடம் மிகுந்த வியப்பைத் தருவதும் இதுதான்!!

  • சித்ரன் 7:09 முப on ஒக்ரோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நன்றி Woven, ரேகா ராகவன், சந்துரு, சந்தன முல்லை.

   @woven : எங்கள் தங்கமணியார் எல்லா விஷயத்திலும் அதிகபட்சம் கரெக்ட்டாகவும், தேவைப்படும் நேரங்களில் டெர்ரராகவும் நடந்து கொள்வதால் எல்லாப் பொடிசுகளுக்கும் லேசாய் பயம் உண்டு. ஆகவே சின்ன சண்டைகள் பெரிதாகி பெற்றோர்கள் வரை போகாமலிருக்குமாறு அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். (ஆனால் துணி காயப்போடுகிற ”கிளிப்” திருட்டுப் போகிற விஷயத்தில் பெரியவர்கள் சண்டை வரத்தான் செய்கிறது. கொடுமை!)

   @chandrasekar: மனதை லேசாய் திறந்தால்தான்தான் கதவையும் லேசாய்த் திறக்க்கமுடியும் இல்லையா?. ரொம்ப திறந்தாலும் ஆபத்து. அப்புறம் எல்லாமே taken for granted என்று ஆகிவிடும்.

  • இராமநாதன் 9:47 பிப on ஒக்ரோபர் 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   முதற்குழந்தை வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்,
   மழலை பற்றிய இப்பதிவு, கொணர்ந்தது மகிழ்ச்சி மனதில்!

  • என். சொக்கன் 5:48 முப on நவம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நேர்த்தியான பதிவு – அபார்ட்மெண்ட் கலாசாரத்தில் குழந்தைகளின் கதி என்பதுபற்றி யாராவது பிஹெச்டி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம் 🙂 அந்த அளவுக்கு யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

   • சித்ரன் 11:27 முப on நவம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    ஒரு சிறிய (அல்லது பெரிய) காம்பெளண்டுக்குள் அதிக பட்ச விளையாட்டாய் கிரிக்கெட். அதைவிட்டால் பரஸ்பரம் DVD மாற்றிக்கொண்டு வீடியோ கேம். மீறி மீறிப் போனால் hide and seek. பல்லாங்குழி, பாண்டி பற்றிப் பேசினால் சிரிக்கிறார்கள். விளையாட நண்பர்கள் இல்லாவிட்டால் பொடிசுகள் தத்தமது அப்பா வந்து பந்து போட தனியாக விளையாட்டு. பெண்குழந்தைகள் என்றால் சும்மா உட்கார்ந்து என்னவோ பேசி சிரித்து விளையாடுகிறார்கள். தட்ஸ் ஆல்.

 • சோபா சதீஷ் 6:46 am on October 23, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  இருநூறு கோடி மேட்டர் (பதிலடி பதிவு) 

  தமிழ்க் குடிமக்கள் என்றொரு இனம் உண்டு.

  அவனுக்கு ஆங்கிலம் பேச முடியாததே பெருஞ்சோகம். அவன் ‘வீட்டா’-வில் ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்க, அவனது குழந்தைகள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றன.

  அவனது டிவி – ‘சன் டிவி’ , அவனது நாவல் – ‘பாக்கெட் நாவல்’, அவனது பத்திரிக்கை – ‘ஜுனியர் விகடன், ரிப்போர்ட்டர்’.

  அவனது சினிமா இப்போது வரி சவுகரியங்களால் தமிழில் பெயர் மட்டும் வைக்கப்படுகிறது என்றாலும் உள்ளே டப்பிங் செய்ய வேண்டிய அளவுக்கு ஆங்கில வசனம் இருக்கும்.

  அவனது பாடல்கள் ‘ஹஸிலி ஃஃபிஸிலியே’ என்று ஆரம்பித்தால்தான் அவனுக்கு ஹேப்பி. உள்ளேகூட ‘அன்பே என் மனம் ஃஃப்ரீஷிங்… லெட் மீ டெல் யூ சம்திங்’ என்று தமிழ் வரிகளே வேண்டும் அவனுக்கு.

  90களின் முற்பாதியில் சோபா சதீஷின் கவிதை முயற்சிகள் அப்போதே கொஞ்சம் முதிர்ச்சியான சிந்தனையைக் கொண்டே இருந்தன. தமிழ் ஒரு மாதிரி இவர் பேனாவில் விளையாடும். நன்றாகக் கவிதை கைவரக்கூடிய நண்பர்கள் பொறாமைப்படுமளவு இருந்தன இவரின் அசாத்தியமான கவிதைகளின் வீச்சு. கவிதை எழுதுவது தவிர சிலம்பம் சுற்றவும் தெரிந்து வைத்திருந்தார். சோபா சதீஷ் நீண்ட நாட்கள் கழித்து “இன்று” மூலம் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

  -சத்யராஜ்குமார்

  நன்றி மறந்து ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு. எல்லாப் பயலுவளும் தேங்க்ஸ்-தான் சொல்றானுவ இப்ப.

  சொல்ல வர்ற விஷயத்த நேராச் சொல்றதும் அவன் பழக்கம் கிடையாது. இவ்ளோ நேரம் படிச்சத வச்சு இது அவனோட ஆங்கில மோகம் பத்தி சொல்ற கட்டுரைன்னு நீங்க நெனச்சா இது அது கிடையாது.

  இமயத்தில் இருந்து கல் கொண்டு வந்ததோ, கடல் கடந்து வாகை சூடியதோ அவன் நினைவில் இல்லை.

  பார்டரிலிருந்து 18 கிலோ மீட்டரில் அவன் இனமே அழிந்து கொண்டிருக்கும் போதும் ஐபிஎல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

  அவனது ஊருக்குள்ளேயே வந்து, அவன் படகுகளை உடைத்து, வலைகளை அறுத்து, அவிழ்த்து அம்மணமாக்கி, சுட்டுக் கொன்ற போதும் மீனவர் சோகத்தை செய்தியாய் மட்டுமே பார்ப்பான் அவன்.

  எந்த மாநிலத்திலிருந்து தண்ணீர் தரவில்லையென்றாலும் இறையாண்மையை மட்டும் விட்டுத் தரமாட்டான் அவன்.

  கர்நாடகாவில் அடித்தாலும், இலங்கையில் அடித்தாலும், இங்கிலாந்தில் அடித்தாலும், ஆஸ்திரேலியாவில் அடித்தாலும் அவன் தாங்குவான். ஏனென்றால் ரொம்ப்ப்ப்ப நல்லவன் அவன்.

  இத்தனைக்கப்புறமும் நேரில் ஆகட்டும், நெட்டில் ஆகட்டும்…. உன்னைவிட நான் பெரியவன் என்று காட்டிக் கொள்வதும் அவன் குணம்தான்.

  ஒரு நாளில் ரெண்டு லட்சமா..?

  மிஸ்டர் மீனாட்சி…. ஒரே நாளில் இருநூறு கோடி மேட்டர் தெரியுமா உனக்கு…?

  நீ சொன்ன அதே தீபாவளி நாளில் டாஸ்மாக்கின் விற்பனைத் தொகைதான் இருநூறு கோடி.

  சொன்னேன் அல்லவா…………………..தமிழ்க் குடிமக்கள் என்று..!

  • சோபா சதீஷ்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி