பேரு பெத்த பேரு!


பெயரில் என்ன இருக்கிறது? நிறைய இருக்குதுங்க… எனக்குத் தெரிஞ்சதைக் கொஞ்சம் சொல்றேன்…

குஜராத் பேக்கரி என்றால் குஜாரத்தில் உள்ள பேக்கரி அல்ல. பொள்ளாச்சி எஸ்.எஸ். கோயில் வீதியில் உள்ள பேக்கரியின் பெயர் குஜராத்.

“ஹலோ… நீ எங்க இருக்கே?” அலைபேசியில் நண்பர் கேட்டதுக்கு, “நான் குஜராத்ல டீ சாப்டுட்டு இருக்க‍ேன்…” என்று பதில் வர, “என்ன குஜராத்தா…? என்ன விளையாடறியா? காலைலதானே உன்னைப் பார்த்தேன்…”

“அய்யோ… இங்க குஜராத் பேக்கரியில டீ சாப்டுட்டு இருக்கேன்…”

இப்படி உரையாடல் நிகழ்ந்தால் பிரச்சினை இல்லை. இங்கே சீனி என்கிற நண்பன் இருக்கிறான். டிப்ளமோ முடித்துவிட்டு கோயமுத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை. ஊர் ஊராகப் போகிற வேலை. அவன் அடிக்கடி புத்தகக் கடைக்கு வருவான்.

ஒருநாள், “சீனி எங்கடா?” என்று கேட்டுக் கொண்டு அசோக் வந்தான். “அவன் குஜராத் போயிருக்கான்…” என்று நசீர் சொல்ல, அவன் ஏதோ குஜராத் பேக்கரிதான் போயிருக்கிறான் என்று இவன் நினைத்துக் கொண்டுவிட்டான்.

ஒருமணி நேரம் கழித்து, “எங்கடா சீனியை இன்னும் காணோம்…?” என்று கேட்க, நசீர் திகைத்தான். “அதுதான் சொன்னனல்லடா… அவன் நேத்தே குஜராத் போயிட்டான்…”

“அடப்பாவி… நான் ஏதோ குஜராத் பேக்கரி போயிருக்கறான்னு நினைச்சேன்..” என்று சற்று அதிர்ந்து போய் தலையிலடித்துக் கொண்டான்.

சித்ரா என்கிற பஸ் ஸ்டாப் இருக்கிறது. கொஞ்சம் காலேஜ் கூட்டம் இருக்கிற பஸ் ரூட். சித்ராவோடு திரும்புகிற ஒரு தனியார் பஸ்சுக்கு சித்ரா பஸ் என்று பெயர். ஐ.டி.ஐ படிக்க ரூம் எடுத்துத் தங்கியிருந்த காலம். ஆனந்த் என்கிற கொடைக்கானல்காரன் ஒருத்தன் சாயங்காலம் ஆகிவிட்டால், “சித்ராவைப் பார்க்கப் போறேன்…” என்று கிளம்பிவிடுவான். நான் ஏதோ அவனுடைய காதலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ஒருநாள் தெரிய, அறை நண்பர்கள் எல்லாரும் தினமும் சித்ராவைப் பார்க்கப் போனார்கள்.

ஈரோடு மாவட்டம் (இப்ப திருப்பூர் மாவட்டமுன்னு நினைக்கிறேன்) சூரியப்பம்பாளையம்னு ஒரு ஊர் இருக்கிறது. அதுவல்ல பிரச்சினை… சூரிபாளையம்னு இன்னொரு ஒரு ஊர் இருக்கிறது. இன்னும் பிரச்சினை இருக்குதுங்க… அங்க டவுன்பஸ் ஒவ்வொரு ஊருக்கும் ரெண்டு மணி நேரம் இல்லாங்காட்டி மூனு மணிநேரத்துக்கு ஒரு வாட்டிதான் இருக்கும். அங்க இருக்கிற எங்க மாமாவைப் பார்க்கப் போயி சூரியப்பம்பாளையத்துக்குப் பதிலா சூரிபாளையம் பஸ் ஏறிட்டேன். என்னடா ஊரே மாறிப் போயிடுச்சு… இதுக்குத்தான் அடிக்கடி ஊருக்கு வரணும்னு நெனச்சுட்டேன். சூரிபாளையம் இறங்குங்கன்னு கண்டக்டர் விசிலடிக்க, இறங்கி குழம்பிப்போய் விசாரிச்சா… அப்புறம் தெரியுது. நொந்து நூலாயிட்டேன்… அப்புறம் ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு பஸ் வர மறுபடியும் நம்பியூர் போயி, அங்க ஒரு ரெண்டு மணிநேரம் சூரியப்பம்பாளையம் பஸ்சுக்கு காத்திருந்து ஒரு நாளைத் தொலைச்சுட்டு ஊருக்குப் போனேன்…

இங்க பொள்ளாச்சியில தங்கம் தியேட்டர் என்று ஒன்று இருக்கிறது. அந்த ஸ்டாப்பிங் பெயர் தங்கம். “தங்கமெல்லா இறங்குங்க…”ன்னு கண்டக்டர் சொல்ல ஒரு வயசானவர் (நல்ல மப்பு) “ஆமா தங்கம் மட்டும் இறங்குங்க… பித்தளை எல்லாம் அப்படியே இருங்க…” என்று
நக்கலடிச்சார்.

எனக்கு எப்பவும் பஸ்சுல கடைசி சீட்டுத்தான் ‍கெடைக்குது. அன்னைக்கு ரெண்டு பெருசுக பேசிட்டு வந்துச்சு…

“பொன்னா.. இந்தக் கூத்தைக் கேளு… நேத்து டிவியில திருவிளையாடல் போடறாங்கன்னு சொன்னாங்கப்பா… நானும் ரொம்ப ஆசையா கணேசன் நடிச்ச படம்ன்னு, வேலைக்குப் போறதை விட்டுட்டு, வீட்டுல இருந்துட்டேன்… பார்த்தா… ‍அதே ‍பேர்ல தனுசு நடிச்ச படத்த போடறாங்கப்பா… ”

பெயர் ரொம்ப முக்கியம்தான். செந்தில் என்கிற பெயர் தமிழில் அதிகம் இருக்கும் போல. ஒண்ணாம் வகுப்பில் இருந்து பார்த்துவிட்டேன். செந்தில் என்கிற பெயரில் யாராவது ஒருத்தன் வகுப்பில் இருந்துவிடுவான். ஐ.டி.ஐ படிக்கும்போது ஒரு செந்தில்… அப்ரண்டீஸ் போகும்போது செந்தில் என்கிற பெயரில் ஒரு ரூம் மேட். கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் போது ஒரு செந்தில்… எட்டாம் வகுப்பு படிக்கும்போது மூன்று செந்தில் இருந்தார்கள். இதனால் இனிஷியல் போட்டு கூப்பிடுவோம். அப்படியும் ஒரு பிரச்சினை இருந்தது. S.செந்தில்குமாருக்கு சிரமம் வாய்க்கவில்லை. மற்ற இரண்டு பேருமே T. செந்தில்குமார்கள். இன்னொரு முன்னெழுத்தாக ஊர்ப்‍பெயரை வைக்க ஆறுச்சாமி வாத்தியார் முடிவு செய்தார். ஒருத்தன் சமத்தூர் என்பதால் S.T. செந்தில்குமார் ஆனான். இன்னொருத்தன் பக்கத்து ஊரான கரியாஞ்செட்டிபாளையத்திலிருந்து வருகிறான். அவன். K.T. செந்தில்குமாரானான். ஆனால் அது நிலைக்கவில்லை. அவன் பெயர் “கேடி” ஆனது.

கதைகளில்கூட பேர் வைப்பதில் நிறைய தந்திரங்கள் உண்டு. வயசான ஆளுக்கு ஆகாஷ், சுரேஷ், சந்துரு, பாபு, கோபு என்றோ பெயர் வைக்கமாட்டார்கள். தர்மலிங்கம், நாகப்பன், சோமசுந்தரம் என்று வைப்பார்கள். அடியாள்களுக்கு வழக்கம்போல மாரி, முத்து… என்று பெயர். நம்பியார் பாணியில் கூப்பிட்டுக் கொள்ளலாம். பெண்களுக்கும் பெயர்கள் அப்படித்தான். நித்யா, வித்யா, மைதிலி என்று இருக்கும். சுந்தரவடிவு என்றால் வயதான கேரக்டர் என்று முடிவு செய்து கொள்ளலாம். எனக்குத் தெரிந்த ஒரு அக்கா இருந்தார்கள். நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கம் அந்த அக்காவுக்கு இருபது வயசிருக்கும். பேபி அக்கா என்று கூப்பிடுவோம். அந்தக் அக்காவை கோயமுத்தூருக்கு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். எப்போதவது வரும். இப்போது வயசு ஐம்பதை தாண்டியிருக்கும். இப்போதும் பேபி அக்காதான்.

என் நண்பர் ஒருவர் சிற்றிதழ் நடத்திக் கொண்டிருந்தார். அடிக்கடி ஒரு சின்னக் கட்டத்தில் “உங்கள் குழந்தைக்கு அழகுப் பெயரில் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்” என்று பிரச்சாரம் செய்வார். அவ்வப்போது தலையங்கத்தில் அதை வலியுறுத்துவார். நண்பருக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருடைய குழந்தைக்கு வித்தியாசமான தமிழ்ப் பெயரை வைத்திருப்பார் என்று நினைத்து பெயரைக் கேட்டேன். வாயில் நுழையாத ஒரு வடமொழிப் பெயரைச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஏங்க இப்படி என்று கேட்டால் எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி “நியூமராலஜிப்படி இப்படித்தான் வைக்கணும்” என்றார்.

இன்னும் பேரைப் பத்திச் சொல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு.. என் பேரைக் காப்பாத்தறதுக்காக இத்தோட நிறுத்திக்கறேன்.

  • கனகராஜன்