நடந்த கதை


பொள்ளாச்சியில் ரவுண்டானா என்றொரு இடம் உண்டு. மகாலிங்கபுரத்தில் மிகப் பெரிய வட்ட வடிவமான மைதானம் அது.

என்னுடைய ஹைஸ்கூல் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளையும், மே மாத வெயில்களையும் புறந்தள்ளி கிரிக்கெட் விளையாடின கிரவுண்ட் அது. இப்போது நேரு புறாவிடும் கத்திப்பாரா சிலை வைத்து, ரவுண்டாய் ரோடு போட்டு, சுற்றிலும் வேலி அமைத்து வாக்கர்ஸ் கிளப் ஆரம்பித்து ஹைடெக்காய் மாற்றியிருந்தார்கள்.roundana

மைசூரில் இருந்து வரும் ஞாயிறு மாலைகளில் அங்கே போன போது வாக்கிங் போகிறவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கும். அதிலும் பெண்கள்.

கிட்டத்தட்ட பட்டுச் சேலை, ஒட்டியாணம் தவிர மற்ற நகைகள், பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு வியர்க்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் தான் போட்டிருக்கும் ரெபோக் ஷூ தெரிய சேலையை சாக்ஸூக்கு மேல் மிடி ஹைட்டில் கட்டியிருந்தது விநோதம். மாறாக ஹவாய் சப்பல் போட்டிருப்பவர்கள் அது மறையும் படி தழையத் தழைய சேலை கட்டி நடந்து கொண்டிருப்பார்கள். வாக்கிங் முடிந்ததும் நடைபாதைக் கடைகளில் பேல்பூரி, சில்லி காளான் ரெண்டு பிளேட் சாப்பிடுவது இவர்களது டயட்.

ஒருமுறை 15 நாள் விடுமுறையில் காலையில் வாக்கிங் போன போது ஆண்களின் நடவடிக்கை இன்னும் விநோதம். சுகர், பிரஷர் பற்றிய பெருமைகளைப் பேசிக் கொண்டு வாக்கிங் போகும் டீம் ஒன்று, எனக்கு இதெல்லாம் இல்லை என்றவுடன் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்.

மற்றும் ஒருவர் தன்னுடைய டிராக்‌ஷூட், ஸ்னீக்கர்ஸ் இத்தியாதிகளுடன் காலை ஐந்தரைக்கே வந்துவிடுவார். ஒவ்வொரு இடமாய் மாற்றி மாற்றி உட்கார்ந்து நடப்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு டாண் என்று ஏழு மணிக்கு கிளம்பிவிடுவார்.

இன்னொருவர் காரில் வருவார். முன் சீட்டில் இருக்கும் டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்துவிடவில்லை என்றால் அன்று வாக்கிங் கட். அவ்வளவு கெளரவம்.

இதில் என்னுடைய பழைய க்ளாஸ்மேட் ஒருவன், இங்கிருந்து முன்னூறு மீட்டரில் வீடு. தொடர்ந்து வாக்கிங் வந்தவன் நான்கு நாட்கள் வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு “ பைக் ரிப்பேர்டா மாப்ள…” என்றான்.

  • மீனாட்சி சுந்தரம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.