ஒரே நாளில் இரண்டு லட்சம்


தீபாவளிக்கு ரெண்டுநாள் முன்பு மாலை டிவியில் சேனல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு செய்திச் சானலை cross செய்ய நேர்ந்தது.

சாலையில் டிவி செய்தி நிருபரின் மைக்கில் அந்த common man “ ஆமா சார்… என்ன சார் பண்ணுறது? இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சு. அன்னைக்கு இல்லாட்டி என்ன? அடுத்த நாள் பார்த்துக்கிட வேண்டியது தான்..” என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
MeatShop
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர் பேசியதைக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள … ரிமோட்டில் வால்யூம் அதிகம் செய்தேன்.

அடுத்து ஒரு கோவில் புரோகிதர் அதே மைக்கில் “ பொதுவாவே சனிக்கிழமை விசேஷமானது தான். அதுல புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷம். அதுலயும் ரொம்ப முக்கியம் புரட்டாசியின் கடைசி சனி. அன்னிக்கு பகவானை கும்பிட்டா ஒரு வருஷம் கும்பிட்ட பலன், கும்பிட்டவாளுக்கு” என்றார்.

புரட்டாசி கடைசி சனி, சாமிகளின் ஜம்போ பேக் போல.

அடுத்து ஒரு கறிக்கடைக்காரர். “ஆமா சார். இந்த வருஷம் கடைசி சனியில தீபாவளி வருது. அதுனால வியாபாரம் கொஞ்சம் டல்தான். போன வருஷம் சென்னையில மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள் வெட்டுனம். இந்த வருஷம் அஞ்சு, ஆறாயிரம் போனா அதிகம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மறுவியாபாரத்துல கொஞ்சம் நடக்கும்னு நம்புறோம்.” என்றார்.

வீட்டில் அனைவரும் சைவம். நான் அசைவம் சாப்பிடுவேன்…எப்பவாவது. என்றாலும் ஒரு நாளில் ரெண்டு லட்சம் ஆடுகள் என்றதும் திக்கென்றிருந்தது. கவனிக்கவும்! இது ஆடுகளின் கணக்கு மட்டும்.

எனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை.

புகையிலை, புகையிலைப் பொருள்கள் கேடு என்று சொல்லும் அரசு புகையிலை பயிரிடுவதைத் தடுப்பதே இல்லை.

குடித்தால் கேடு என்னும் அரசே அதை விற்பனை செய்கிறது.

குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஆனால் பார் இருக்கும். அதில் வண்டி நிறுத்தமும் இருக்கும்.

வாகனங்களில் ஏர் ஹார்ன் தடை செய்யப் பட்டது. அதன் உற்பத்தி தடை செய்யப்படவில்லை. எனில் உற்பத்தியாகும் ஏர் ஹார்னை யார் உபயோகிக்கிறார்கள்?

அளவிடும் மீட்டர் டேப்புகள் மொத்தமும் அரசாங்க முத்திரை வாங்கி வருவதில்லை.

அதே போலத் தான்…

சினிமாவில் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாயோ, குரங்கோ நடிப்பதை சித்ரவதை என்று மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் ப்ளூகிராஸ் இருக்கும் ஊரில் தான் இத்தனை மட்டன் கடைகள். பிரியாணி ஹோட்டல்கள்.

யோசித்துப் பார்த்தால் குலை நடுங்குகிறது.

ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள்.

போதுமடா அசைவம்.

  • மீனாட்சி சுந்தரம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.