பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும்
நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.
பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.
இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.
7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.
இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.
இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.
முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
- பொன்.சுதா
கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.
kuttysamy 10:36 பிப on ஒக்ரோபர் 20, 2009 நிரந்தர பந்தம் |
ஓ…ஆச்சர்யமாக இருக்கிறது ……ரசித்தேன் வாழ்த்துக்கள் …
பொன்.சுதா 1:01 முப on ஒக்ரோபர் 23, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி நண்பரே…