கதவைத் திற. குழந்தைகள் வரட்டும்!


child-doorபெரும்பாலும் மூடிக்கிடக்கிற கதவுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகள். சாத்திய கதவுகளுக்குப் பின் தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு அதில் ராஜாவாக ராணியாக இளவரசர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள். அடுத்தவர் வீடுகளிலிருந்து வருவது பிரியாணி வாசமானாலும், எலெக்ட்ரிக் ஒயர் கருகுகிற வாசமானாலும் கவலைப்படாமல் மானாட மயிலாட-வில் மூழ்குபவர்கள். சென்னைப் பெருநகரில் இந்த மாதிரி அபார்ட்மெண்ட் ஒன்றில் வேறு வழியில்லாமல் வசிக்க நேர்ந்துவிடுகிற அவலத்தில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் உண்டு. அவைகளில் மிக முக்கியமாய் குழந்தைகள்.

பக்கத்து வீட்டுக்கு ஒரு இளம் தம்பதியினர் ஒரு தவழ்கிற குழந்தையுடன் குடிவந்தபோது அவர்களுக்கும் சாத்தின கதவுகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது அப்பாடா, தொல்லை விட்டது என்று நிம்மதியாகக்கூட உணர்ந்திருக்கலாம். அப்புறம் கொஞ்சமாய் இருபத்தியிரண்டரை டிகிரி திறந்திருந்த எங்கள் கதவு வழியே மெதுவாய் பரவியது நட்பு. அபார்ட்மெண்டின் மூன்று தளங்களையும் அதகளம் பண்ணி, மாதமிரண்டு என்ற கணக்கில் ட்யூப்லைட்டுகளை உடைத்து விளையாடும் என் பையன் மற்றும் அவன் சகாக்கள் முன்பெல்லாம் பாதி நேரம் எங்கள் வீட்டுக்குள்தான் இருப்பார்கள் என்பதால் நிறைய அம்மா அப்பாக்களுக்கு பரிச்சயப்பட்டவர்களாய் இருந்தோம். பொடிசுகளைக் காணோம் என்றால் நேராய் இங்கே வந்து விசாரிக்கும் அளவுக்கு. விசாரிப்புக்குப் பின் ஐந்து நிமிடங்களாவது அரட்டை.

பக்கத்து வீட்டுக்கு குடிவந்த அந்த 7 மாதக் குழந்தை முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு அதன் அம்மாவுடன் வந்து அமைதியே திருவுருவாய் ஒரே இடத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்தது. எப்போதாவது கொஞ்சமாய்த் தவழும். அவ்வளவுதான். ஓரிடத்தில் உட்காருவதுதான் நமக்குப் பிடிக்காத விஷயமாயிற்றே? அதுவும் சும்மா! விடுவானேன். அக்குள்களில் துண்டால் வளைத்துப் பிடித்து ”நடரா ராசா” என்று ஒருநாள் நடக்கப் பழக்கினேன். கம்ப்யூட்டரில் உட்காரவைத்து கூகிளிலிருந்து ஆப்பிளைக் காண்பித்தேன். உடனே ”ஆப்பி” என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டது. ‘வேண்டும்’ என்பதை “ஈனும்” என்றும் ‘வேண்டாம்’ என்பதை “மானா” என்றும் சொல்லப் பழகியது. நடக்க ஆரம்பித்தபிறகு நான் “அப் அப்” என்று சொல்ல சேர் மேல் ஏற ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்த குழந்தை பிறகு ஓடவும் ஆரம்பித்தது. எல்லாமே என் பையன் வளரும் போது பார்த்ததுதான் என்றாலும் ஆச்சரியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பையனும் அவன் செய்கைகளை, குறும்புகளை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

குழந்தைகள் வேகமாகக் கற்றுக் கொள்கின்றன. நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன. சட்டென்று பதில் சொல்லிவிட முடியாத வகையில் நிறைய கேள்விகள் கேட்கின்றன. அந்தக் குழந்தை அவனது ஜியாலஜிஸ்ட் அப்பா மாதிரியே நல்ல புத்திசாலி. நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த ஒன்றரை வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டு வளர்ந்தும் விட்டான். ஒரு மொட்டை, ஒரு ஹேர் கட்டுக்கு அப்புறம் பெரிய பையன் மாதிரி தோற்றமும் வந்துவிட்டது. மழலையாய் ஒற்றை வார்த்தைகளில் புற உலகோடு தொடர்பு கொண்டிருந்தவன் அப்புறம் ரெண்டு வார்த்தைகள் சேர்த்தார்போல் பேசக் கற்றுக்கொண்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரிய வாக்கியங்களாகவும் பேச ஆரம்பித்துவிட்டான். நேற்று அவன் ஏதோ குறும்பு செய்தபோது தங்கமணி “அங்கிள் பார்த்தா அடி பிச்சுருவாரு” என்று செல்லமாய் கண்களை உருட்ட, அது கெஞ்சுகிற குரலில் “தய்சவேது அடிக்க மானா” என்றது. உங்களுக்குப் புரிகிறதா? ச்சோ ஸ்வீட்.

குழந்தைகளோடு விளையாடும்போது பெரியவர்களின் ’ஸ்ட்ரெஸ்’ எனப்படும் சமாச்சாரம் பெருமளவு குறைகிறது. அதற்கான simple rule நாமும் விளையாடும்போது குழந்தையாக மாறிவிடவேண்டும் என்பதே. ’ஸ்ட்ரெஸ்’ நிறைய குறைய வேண்டுமென்றால் குப்புறப் படுத்துக்கொண்டு குழந்தையை முதுகின் மேலேறி மிதிக்க அல்லது குதிக்கச் சொன்னால் போதும். (முதுகுத்தண்டு பிரச்சினையிருப்பவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பிறகு பெண்டு கழன்றுவிடும் என்றும் எச்சரிக்கிறேன்)

அப்பார்ட்மெண்டுகளில் பெரியவர்களின் அக்கப்போர் வேண்டாமென்றால் வேண்டாம். ஆனால் குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது.

-சித்ரன்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.