Updates from நவம்பர், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • சோபா சதீஷ் 4:24 pm on November 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  போதைக்கு அடிமையாகும் தாவரங்கள் 

  மனிதன் தாவரங்களையும் விட்டு வைக்கவில்லை.

  திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்துடன் பிராந்தி கலந்து அடிக்கிறார்களாம். பூச்சிக் கொல்லியைவிட வேகமாய் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்கள் ஆரோக்யமாய் வளர்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

  அரசு மார்க்கெட் செய்யும் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மற்றும் ஒரு விஷயம் கிடைச்சாச்சு.

  ஆக……பயிர்களுக்கு இப்போது ரெண்டு ‘தண்ணி’ தேவைப்படுகிறது.

  முதல் அடிப்படைத் தண்ணீரைத் தரவே பக்கத்திலிருக்கும் மூன்று மாநிலங்களும் தகராறு செய்துவரும் நிலையில் இப்போது அடுத்த தேவை வந்துவிட்டது. தண்ணீர்தான் எவ்வளவு பிரச்னை?

  என்றோ, எங்கிருந்தோ வந்த பென்னி குக் என்னும் ஆங்கிலேயன்.. இங்குள்ள மக்கள் தேவையறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டிக்கொடுத்தான். இங்குள்ள தோழனோ தண்ணீர் தர வீம்பு செய்கிறான். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரம் தயாராகிறது.

  காவிரி ஆற்றில் முதன்முதல் அணை கட்டிய கரிகாலனே இன்று பிறந்து வந்தாலும்கூட, அவனும் காவேரி மினரல் வாட்டர்தான் வாங்கிக் குடிக்க வேண்டி இருக்கும்.

  யோசித்துப் பாருங்கள்…..

  ஊரெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த மினரல் வாட்டர்க்காரனுக்கு பஞ்சமே வரமாட்டேன்கிறது.

  அதேபோல், தண்ணீரை பாட்டிலில் அடைத்து கர்நாடகாவிலிருந்தோ கேரளாவிலிருந்தோ அனுப்பினால் எவனும் தடுப்பதில்லை.

  ஏன்… தடுத்தால் அந்த கம்பெனி, ”சரி… தண்ணீரைத் தமிழகம் கொண்டு செல்லவில்லை. நீயே வைத்துக்கொள். ஆனால் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கொடு…” என்று சொல்லும்.

  ஆக… தண்ணீர் பிரச்னையில்லை. அது இலவசமாய் இருப்பதுதான் பிரச்னை. அதனால்தான் அங்கே அரசியல் விளையாடுகிறது. விஷயம் உணர்வுப்பூர்வமாய் மாறிவிடுகிறது.

  அதையே நீ உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு லிட்டருக்கு 5பைசா என்று சொல்லிப் பாருங்கள்….”அய்யா, எனக்கு இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போதும்; மீதியை எங்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்” என்பான்.

  இப்போது உணர்வுப் பூர்வமாய் இருக்கும் தண்ணீர், பிறகு மேனேஜ்மெண்ட்டாய் மாறிவிடும். பிரச்னை சுலபமாய் தீர்ந்துவிடும்.

  நமக்கு தெரிந்தது… மேலே இருப்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..?

  அடடே… நாம ஆரம்பிச்ச விசயத்துலருந்து எங்கேயோ வந்துட்டோம் போல இருக்கே…

  சமீபத்தில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுக்கப் போயிருந்த இடத்தில் சந்தித்த நண்பரிடம் ஆர்வமாய் இந்த விஷயத்தை சொன்னதும், “வயித்துல இருக்கற தேவையில்லாத புழுக்களைக் கொல்ல பிராந்தியே போதும்… வேற மருந்துகள் தேவையில்லை…. இல்லியா….” என்றார்.

  அவர் ஒரு ‘குடிமகன்’ என்பது அப்புறம்தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

  • சோபா சதீஷ்
   
 • மீனாட்சி சுந்தரம் 10:08 am on November 10, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

  பூச்சாண்டி நண்பன் 

  poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

  வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

  ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

  தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

  போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

  LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

  பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

  டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

  முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

  காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

  -மீனாட்சி சுந்தரம்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
  • சரசுராம் 9:52 முப on நவம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   அளவாய் இருந்தாலும் அழகான பதிவு. மீன்ஸ்.. உன் எழுத்தை மீண்டும் படிப்பதில் இன்னும் சந்தோசம். தொடர்ந்து எழுது. உன்னிடம் நல்ல சிறுகதைகளையும் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  • Karthik 5:56 முப on நவம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   உங்கள் மகனின் பதிவிற்க்கு, பதில் எழுதும் காலம் தூரத்தில் இல்லை….

   காலம் Proportional-ஆக மாறுகிறது, டெக்னாலஜி Exponential-ஆக வளறுகிறது !!!

 • சரசுராம் 12:44 pm on November 5, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: bachelor, cats   

  பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம் 

  bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

  என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

  விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

  நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

  பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

  -சரசுராம்

  கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

   
  • Kumar AK 1:41 முப on நவம்பர் 6, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   Nice and well said. A simple incident added with flavors and served tastefully. weldone Ramu.

  • SARA 12:11 முப on திசெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   GOOD, YOU EXPOSE THE BASIC FEELINGS OF THE NORMAL MAN. BUT NOWADAYS MAN MENTALITY TURNING AROUND CUNNING & SELFISH WITHOUT HUMANITY.
   PLEASE TEACH MAN HUMANITY STORIES LIKE THIS TO ALL. YOUR AIM ALWAYS WELCOME. I AM EXPECTING SOME MORE FROM YOU LIKE THIS TYPE OF STORIES.
   THANKS FRIEND
   SARA

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி