பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம்


bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

-சரசுராம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.