போதைக்கு அடிமையாகும் தாவரங்கள்


மனிதன் தாவரங்களையும் விட்டு வைக்கவில்லை.

திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்துடன் பிராந்தி கலந்து அடிக்கிறார்களாம். பூச்சிக் கொல்லியைவிட வேகமாய் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்கள் ஆரோக்யமாய் வளர்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

அரசு மார்க்கெட் செய்யும் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மற்றும் ஒரு விஷயம் கிடைச்சாச்சு.

ஆக……பயிர்களுக்கு இப்போது ரெண்டு ‘தண்ணி’ தேவைப்படுகிறது.

முதல் அடிப்படைத் தண்ணீரைத் தரவே பக்கத்திலிருக்கும் மூன்று மாநிலங்களும் தகராறு செய்துவரும் நிலையில் இப்போது அடுத்த தேவை வந்துவிட்டது. தண்ணீர்தான் எவ்வளவு பிரச்னை?

என்றோ, எங்கிருந்தோ வந்த பென்னி குக் என்னும் ஆங்கிலேயன்.. இங்குள்ள மக்கள் தேவையறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டிக்கொடுத்தான். இங்குள்ள தோழனோ தண்ணீர் தர வீம்பு செய்கிறான். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரம் தயாராகிறது.

காவிரி ஆற்றில் முதன்முதல் அணை கட்டிய கரிகாலனே இன்று பிறந்து வந்தாலும்கூட, அவனும் காவேரி மினரல் வாட்டர்தான் வாங்கிக் குடிக்க வேண்டி இருக்கும்.

யோசித்துப் பாருங்கள்…..

ஊரெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த மினரல் வாட்டர்க்காரனுக்கு பஞ்சமே வரமாட்டேன்கிறது.

அதேபோல், தண்ணீரை பாட்டிலில் அடைத்து கர்நாடகாவிலிருந்தோ கேரளாவிலிருந்தோ அனுப்பினால் எவனும் தடுப்பதில்லை.

ஏன்… தடுத்தால் அந்த கம்பெனி, ”சரி… தண்ணீரைத் தமிழகம் கொண்டு செல்லவில்லை. நீயே வைத்துக்கொள். ஆனால் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கொடு…” என்று சொல்லும்.

ஆக… தண்ணீர் பிரச்னையில்லை. அது இலவசமாய் இருப்பதுதான் பிரச்னை. அதனால்தான் அங்கே அரசியல் விளையாடுகிறது. விஷயம் உணர்வுப்பூர்வமாய் மாறிவிடுகிறது.

அதையே நீ உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு லிட்டருக்கு 5பைசா என்று சொல்லிப் பாருங்கள்….”அய்யா, எனக்கு இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போதும்; மீதியை எங்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்” என்பான்.

இப்போது உணர்வுப் பூர்வமாய் இருக்கும் தண்ணீர், பிறகு மேனேஜ்மெண்ட்டாய் மாறிவிடும். பிரச்னை சுலபமாய் தீர்ந்துவிடும்.

நமக்கு தெரிந்தது… மேலே இருப்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..?

அடடே… நாம ஆரம்பிச்ச விசயத்துலருந்து எங்கேயோ வந்துட்டோம் போல இருக்கே…

சமீபத்தில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுக்கப் போயிருந்த இடத்தில் சந்தித்த நண்பரிடம் ஆர்வமாய் இந்த விஷயத்தை சொன்னதும், “வயித்துல இருக்கற தேவையில்லாத புழுக்களைக் கொல்ல பிராந்தியே போதும்… வேற மருந்துகள் தேவையில்லை…. இல்லியா….” என்றார்.

அவர் ஒரு ‘குடிமகன்’ என்பது அப்புறம்தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

  • சோபா சதீஷ்